சீனாவுடனான தொடர்புகள் குறித்து இலங்கைக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

Report Print Steephen Steephen in அரசியல்
391Shares

எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, இந்து சமுத்திர பிராந்தியத்திற்குள் சீனாவுக்கு எதிரான பாதுகாப்பு வலையமைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான தொடர்புகள் சம்பந்தமாக கடினமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் டீன் ஹொட்டின், இலங்கை அரசாங்கத்திற்கு அறிவுறுத்தி இருந்தமை மூலம் இது உறுதியாகியுள்ளது.

வொஷிங்டனில் கருத்து வெளியிட்டிருந்த அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர், இலங்கை அரசு அமெரிக்காவா இல்லை சீனாவா என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

எது எப்படி இருந்த போதிலும் சீனாவுக்கு எதிராக பாதுகாப்பு வலையமைப்பு தொடர்பான விடயத்தில் தலையிடாது நடுநிலையான கொள்கையுடன் இருப்பதே இலங்கையின் நிலைப்பாடு என அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ராஜாங்க செயலாளர் மார்க் ஹெய்னர் ஆகியோர் நாளைய தினம் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளதுடன் இந்தியாவுடன் சீனாவுக்கு எதிரான பாதுகாப்பு வலையமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.

இதனிடையே அமெரிக்க அரசாங்கம், மாலைதீவு அரசாங்கத்துடன் அவசரமான பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளது.

அதேவேளை அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு நிதியுதவியளிப்பது தொடர்பாக நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பாகவும் அமெரிக்கா கூடிய கவனத்தை செலுத்தி இருந்தது.