கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல தடவைகள் ஆதரவுகளை வழங்கிய போதிலும் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லையென இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபயவின் ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு அரச வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றிருந்தது.
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 199 பேருக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஐந்து வருடகால அரசியலிலே மிகவும் சந்தோசமடையும் நாளாக இன்றைய நாளை பார்க்கின்றேன். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலே வரவு செலவு திட்டம், அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் என அனைத்திலும் ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாத்த பெருமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையே சாரும்.
அவ்வாறு அந்த அரசாங்கத்தைப் பாதுகாத்தும் கடந்த காலத்திலே நாடாளுமன்றத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுமார் 22 வேலைவாய்ப்புக்களே வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று நாட்டினுடைய புதிய அரசாங்கத்தினுடைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, தன்னுடைய தேர்தல் பிரச்சார காலத்தில் சொன்னார் நாட்டை
சுபீட்சத்தின்பால் கொண்டு செல்வதுடன், வேலையற்ற பட்டதாரிகள் ஐம்பதாயிரம் பேரிற்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்றும், ஒரு இலட்சம் க.பொ.த சாதாரண தரம் சித்தியடைய தவறிய வறுமைக் கேட்டின் கீழ் வாழ்கின்ற இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவோம் என்றும்.
இந்த வாக்குறுதிகளை அவர் தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக தெரிவித்திருந்தார். இது போன்று பல வாக்குறுதிகளை ஜனாதிபதி வழங்கியிருந்தார். அவர் வழங்கிய வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் வேகமாக இடம்பெற்று வருகின்றது.
அந்த அடிப்படையில் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு முடிந்துவிட்டது. இன்னும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கின்றது.
அதே போன்று ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுமென கூறியிருந்தார் அதற்கு அமைவாக க.பொ.த சாதாரண தரம் சித்தியடைய தவறிய வறுமைக் கேட்டின் கீழ் வாழ்கின்ற இளைஞர், யுவதிகளுக்கு முதற்கட்டமாக இலங்கையிலே 34,000 அரச துறை வேலைவாய்ப்பு வழங்கப்படுகின்றது.
அதேபோல் அடுத்தடுத்த கட்டங்களிலே மிகுதியாக இருக்கின்ற 66 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட இருக்கின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் - 19 காரணத்தினாலேயே முழுமையாக ஒரே நேரத்திலேயே அனைவருக்கும் வேலை வழங்க கூடிய சூழல் இல்லை.
அதனால் தான் கட்டம் கட்டமாக அரசாங்கம் இதை வழங்கிவருகின்றது. அந்த அடிப்படையில் எமது மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இன்று 249 பேருக்கு இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த நிகழ்வை நாங்கள் ஒரு மண்டபத்திலேயே ஏற்பாடு செய்ய இருந்த போதிலும் கொவிட் - 19 நிலை காரணமாகவே இந்த நிகழ்வை நாங்கள் எமது அலுவலகத்திலேயே செய்தோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.