மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவிடம் மகஜர் ஒன்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் இந்த மகஜர் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெற்கின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மகஜரில் ஆளும் கட்சிக்கு மேலதிகமாக, எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், வீ.ராதகிருஸ்ணன் உள்ளிட்ட ஐந்து பேரும் கையொப்பமிட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், துமிந்தவை விடுதலை செய்யுமாறு ஆளும் கட்சியினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மகஜர் தொடர்பில் அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
அத்துடன், தமிழ் முற்போக்குக் கூட்டணியினாலும் இது தொடர்பில் இதுவரையில் எவ்வித அதிகாரபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.