நாங்கள் என்ன எடுப்பார் கைப்பிள்ளைகளா? சுமந்திரனிடம் ஹரீஸ் கேள்வி

Report Print Rakesh in அரசியல்
832Shares

எங்களைத் துரோகிகள் என விமர்சித்து சுமந்திரன் எம்.பி. அறிக்கை விடுகின்றார், அவரிடம் நாங்கள் என்ன எடுப்பார் கைப்பிள்ளையா? என கேட்க விரும்புவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், அம்பாறை மாவட்டநாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவைப்பட்டிருந்த நிலையில், எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி.க்கள் நால்வர் அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரைத் தவிர ஏனைய எம்.பி.க்கள் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விளக்கம் கோரப்படும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்திருந்தது.

இந்தநிலையில், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தமைக்கான காரணங்கள் குறித்து ஹரீஸ் எம்.பி. தன்னிலை விளக்கம் அளிக்கும் செய்தியாளர் சந்திப்பை கல்முனையில் இன்று நடத்தினார்.

அதில் உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக கல்முனை மாநகரை எம்மில்இருந்து பறிக்க முற்பட்டது.

வடக்கு - கிழக்கில் உள்ள கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசுடனும் சர்வதேசத்துடனும் நல்லுறவைப் பேணி வருகின்றனர்.

ஆனால், எமது மக்களுக்காக நாம் ஒரு நடவடிக்கை எடுக்கின்றபோது கூட்டமைப்பினர் அரசுக்கு எதிராகப் போராட வேண்டும் என்கின்றனர்.

அல்லாவிட்டால், எங்களைத் துரோகிகள் என சுமந்திரன் அறிக்கை விடுகின்றார். நாங்கள் என்ன எடுப்பார் கைப்பிள்ளைகளா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.