முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரி அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ள கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி கையெழுத்திட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவர் இதனை எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அரச தரப்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, மஹிந்த அமரவீர, விதுர விக்கிரமநாயக்க, விமலவீர திசாநாயக்க மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் குறித்த கடிதத்தில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த கையொப்பங்களை பெற்ற பின்னர் அது பொது மன்னிப்புக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்படவுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை தொடர்பில் துமிந்த சில்வாவுக்கு 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.