தமிழ் முற்போக்கு கூட்டணியினர் துமிந்த சில்வாவை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கான விண்ணப்பத்தில் கையொப்பமிட்டது அரசியலமைப்பின் இருபதாவது சீர்திருத்தத்திற்கு ஆதரவளிப்பது போன்றதே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு கோரி அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் எமது ஊடகத்திற்கு கருத்து வெளியிடும்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
20ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் ஆதரவளித்தமை தொடர்பாக பல வாதப் பிரதிவாதங்கள் வந்தன. உடனடியாக கூட்டணி அவருக்கெதிரான நடவடிக்கையையும் எடுத்திருந்தது.
எந்த வகையிலும் ஜனநாயகத்தை விரும்புவோர், சர்வாதிகாரத்தை எதிர்ப்போர் 20ஆவது சீர்திருத்தத்திற்கு ஆதரவளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இருந்தபோதிலும் கூட 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு அடுத்த நாளே மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு மனு தயார் செய்யப்பட்டிருக்கின்றது.
அந்த மனுவில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டிருப்பதோடு எதிர்க்கட்சியில் இருக்கும் எஞ்சிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பம் இட்டிருப்பதாக அறியக் கிடைக்கின்றது.
எனவே, குறித்த மனுவில் கையொப்பமிட்டதும் கூட 20ஆவது சீர்திருத்தத்திற்கு ஆதரவளிப்பது போன்றதே என குறிப்பிட்டுள்ளார்.