முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் கையெழுத்திட்ட உடன்படிக்கையின் விபரங்களை கோரும் ஐக்கிய தேசிய கட்சி

Report Print Ajith Ajith in அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன்20 வது திருத்தம் குறித்த நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்னர் சந்தித்து கையெழுத்திட்ட உடன்படிக்கையின் விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய தேசிய கட்சி இன்று வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் நல்வாழ்வுக்கு நடப்பு அரசாங்கத்தின் கொள்கைகள் தீங்கு விளைவிக்கும் என்ற அடிப்படையில் 2020 பொதுத் தேர்தலில் அரசாங்கத்தை எதிர்த்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மூடிய கதவுகளுக்குப் பின்னால் அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சிஅறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

20வது திருத்தத்தை ஆதரித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்களுக்கும் இடையில் பல முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புடையவை என்றும் அவர் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், அதில் பெரும்பாலான விடயங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியாது, ஏனெனில் அவை உணர்வுமிக்க விடயங்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் 20 ஆவது திருத்தத்தை ஆதரித்ததன் மூலம் 19 ஆவது திருத்தத்தால் கொண்டு வரப்பட்ட ஜனநாயக விழுமியங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புறந்தள்ளியுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

முஸ்லிம் வாக்காளர்கள் தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளனர்.அவர்கள் பிரதமருடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை வெளியிட மறுப்பது நியாயமற்றது மற்றும் பொறுப்பற்றது.

இந்த பிரச்சினையில் அவர்கள் மௌனம் சாதிப்பது இலங்கை முஸ்லிம்களுக்குபயனளிக்காத ஒரு உடன்படிக்கையை அவர்கள் பிரதமருடன் மேற்கொண்டுள்ளார்கள் என்பதையே காட்டுகிறது என்றும் ஐக்கிய தேசியக்கட்சி கூறியுள்ளது.