உட்கட்சி மோதலையடுத்து கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் பதவி துறப்பு!

Report Print Rakesh in அரசியல்

தமது கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்க மறுப்பதால் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும், கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் பதவியிலிருந்தும் விலகுவதாக பிரதேச சபை தவிசாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான தங்கவேலாயுதம் ஐங்கரன் இன்று அறிவித்துள்ளார்.

இது குறித்த கடிதம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

தமிழரசுக் கட்சி உறுப்பினரான பிரதேச சபை தவிசாளர் ஐங்கரனுக்கும் அதே பிரதேச சபையில் அங்கத்துவம் பெறுகின்ற இன்னும் சில தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் பிணக்கு நிலவி வந்திருக்கின்றது.

இந்தநிலையில் எதிர்வரும் வரவு - செலவுத்திட்டத்திற்கு ஒத்துழைக்கப்போவதில்லை என்று மற்றைய தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்து வரும் நிலையில் குறித்த சம்பவத்துக்குத் தீர்வு காணுமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை ஐங்கரன் அணுகியிருக்கின்றார்.

ஏனைய உறுப்பினர்களை அழைத்த மாவை சேனாதிராஜா சமரசத்துக்கு உடன்படுமாறும், வரவு - செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அவரை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்திருக்கின்றனர்.

இருந்தபோதிலும், அவரை நீக்கினாலேயே வரவு - செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்க முடியும் என்று சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் வலியுறுத்தித் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தநிலையில் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று மாவை சேனாதிராஜா தன்னிடம் தெரிவித்ததால், கட்சி அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் பிரதேச சபைத் தவிசாளர் பதவியிலிருந்தும் தான் விலகுவதாக கட்சியின் தலைவருக்கு இன்று கடிதம் கையளித்தாக ஐங்கரன் தெரிவித்துள்ளார்.