சஹ்ரானின் மனைவி பகிரங்கமாக சாட்சியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

Report Print Steephen Steephen in அரசியல்

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல்களில் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாசீமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா, அந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த பல அரசியல்வாதிகள் விரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாத்திமா ஹாதியா கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்படுத்தப்பட்ட போதிலும் அவரிடம் சாட்சியம் பெறப்படவில்லை. மறுநாள் அதாவது 23 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜர்படுத்துமாறும் அன்றைய தினம் அவரிடம் சாட்சியம் பெறுவதா, இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி ஆணைக்குழு பாத்திமா ஹாதியாவிடம் ஏனையோரிடம் சாட்சியம் பெறுவது போல் பகிரங்கமாக சாட்சியத்தை பெற தயாராக இருந்தது.

எனினும் உடனடியாக தலையீடு செய்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் சரத் ஜயமான்ன அதற்கு எதிர்ப்பை முன்வைத்துள்ளார்.

பாத்திமா ஹாதியாவின் சாட்சியமளிப்பதை ஊடகங்களுக்கு வழங்குவது வழக்கு விசாரணைகளுக்கு தடையாக அமையலாம் என அவர் கூறியிருந்தார்.

இதனடிப்படையில் கடந்த 23 ஆம் திகதி பாத்திமா ஹாதியாவிடம் இரகசியமான முறையில் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

எது எப்படி இருந்த போதிலும் சஹ்ரான் ஹாசீமுக்கு ஊதியம் வழங்கியவர்கள், சஹ்ரானை சந்தித்தவர்கள், அவருடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்ட நபர்கள் தொடர்பான தகவல்கள் உட்பட பல தகவல்களை வெளியிட பாத்திமா ஹாதியா தயாராக இருந்ததன் காரணமாக அவரது சாட்சியம் ஊடகங்களில் வெளியாவதை தடுக்கும் தேவை பல அரசியல்வாதிகளுக்கு இருந்ததாக தெரியவருகிறது.

இதனிடையே கடந்த 18 மாதங்களாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாத்திமா ஹாதியா கடந்த 22ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இது அவரது பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமையலாம் என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. வயதுக்கு வரும் முன்னர் கடத்திச் சென்று, சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட ஹாதியா, சஹ்ரான் போன்ற அடிப்படைவாதிகளின் இரை.

எனினும் இலங்கை சமூகத்தில் பெரும்பாலானவர்கள், 250 பேருக்கு மேற்பட்டோரை கொலை செய்த சஹ்ரான் என்ற மிகப் பயங்கரவாதியின் மனைவியான அவரை பயங்கரவாதியாகவே பார்க்கின்றனர்.

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்திற்கு மத்தியில் வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குட்டிமணி உட்பட 53 பேர் கொலை செய்யப்பட்ட வரலாற்றை நோக்கும் போது ஹாதியாவுக்கு அப்படியான நிலைமை ஏற்படக்கூடும் என்ற விடயத்தை புறந்தள்ள முடியாது.

இதனால், அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் மிகப் பெரிய பொறுப்பு என சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.