தமிழ் தேசிய அதியுயர் பேரவை: அமைப்பதற்கான முன்யோசனை

Report Print Gokulan Gokulan in அரசியல்
402Shares

ஈழத் தமிழினத்திடம் தற்போது தமிழ்த் தேசியத்திற்கான கட்டமைப்போ, எதிர்காலத்திற்கான திட்டமோ, அதற்கான பயணப்பாதையோ இன்றி அழிவின் விளிம்பில் நிற்கிறது என தொல்லியல்துறை மாணவன் திபாகரன் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அக் கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஈழத் தமிழினத்திடம் தற்போது தமிழ்த் தேசியத்திற்கான கட்டமைப்போ, எதிர்காலத்திற்கான திட்டமோ, அதற்கான பயணப்பாதையோ இன்றி அழிவின் விளிம்பில் நிற்கிறது.இந்நிலையில் ஈழத் தமிழர் அரசியல்ரீதியாக ஓர் அறிவியல் மாற்றத்திற்கு உட்பட வேண்டும்.

அரசியல், வரலாற்று, இராஜரீக வழிமுறைகளுக்கு உள்ளால் ஆழமாக ஆராய்ந்து செயற்படவல்ல திறனுடைய தமிழ் தேசிய அதியுயர் பேரவை ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும்.

இன்றைய அரசியற் சூழமைவில் வடகிழக்கில் அரசியல்க் களத்தில் தமிழ்த் தலைமைகள் பிரிந்து நின்று எதனையும் சாதித்திட முடியாது. பிரிந்து நிற்பதன் மூலம் தாமும் வீழ்ந்து , தமிழ் மக்களையும் படுகுழியில் வீழ்த்தி , தமிழ்த் தேசிய அபிலாசையின் பொது எதிரியாகிய பேரினவாத அரசை வெற்றியடையச் செய்து , எதிரிக்கு சேவகம் செய்யும் பணியையே நிறைவேற்ற முடியும்.

இந்த சூழலில் தமிழரின் அரசியல் தளத்தைப் பாதுகாத்து, ஈழத் தமிழர் தமக்குரிய அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கேற்ற வகையிலான ஒரு சரியான, காலப் பொருத்தம் வெளியுறவு கொள்கையை வகுக்க வேண்டியது அவசியமானது.

எழுத்து வடிவில் வரையப்பட்ட ஒரு வெளியுறவுக் கொள்கையை எந்தத் தமிழ் அமைப்புகளோ அன்றித் தமிழ் தலைவர்களோ தற்போது கொண்டிருக்கவில்லை.

எனவே உலகளாவிய அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப தமிழர் தரப்பு தம்மை தகவமைத்துக் அரசியலில் அறிவார்ந்த ரீதியில் செயற்படுவதற்கான ஒரு வெளியுறவுக் கொள்கையை உடனடியாக வகுக்க வேண்டும். அவ்வாறு உடனடியாக ஒரு வெளியுறவுக் கொள்கையை வகுப்பதற்கு குறித்த காலம் தேவைப்படும்.

இந்தவகையில் இதற்கென தனிப்பட்டமுறையில் அறிஞர்கள் இதற்கான கொள்கைகளை விரைந்து முன்வைக்கலாம் . அல்லது குழுக்களாகவோ, அமைப்புக்களாகவோ, அரசியல் கட்சிகளாகவோ கொள்கைகளை வகுத்து முன்வைக்கலாம்.

அதேவேளை தமிழ் தேசிய அரசியல் சார்ந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு தாயகத்தில் உள்ள தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட அனைத்து அமைப்புகளும் இணைந்து உடனடியாக செயல்படுவதற்கான தமிழ் தேசிய உயர் பேரவை ஒன்றை அமைக்க வேண்டும்.

தாயகத்தில் ஒரு உறுதியான கட்டமைப்பு இயங்கினாற்தான் புலம்பெயர் தேசங்களிலுள்ள கட்டமைப்புகள் ஒரு குடைக்கீழ் நின்று ஒருமித்த செயற்பாட்டை மேற்கொள்ள முடியும். அவ்வாறு இல்லையேல் புலத்திலும் தாயகத்திலும் பிரிந்து நின்று எதனையும் சாதிக்க முடியாது . எனவே தமிழ் தேசிய ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கான முதற்படியாக தாயகத்தில் ஓர் ஒருங்கிணைந்த அமைப்பு உருவாக்குவது வேண்டியது அத்தியாவசியம்.

இன்றைய நிலையில் தமிழர் தரப்பின் அனைத்துக் கட்சிகளும் தனித்து நின்று எதனையும் சாதித்து காட்ட முடியவில்லை. எனவே அவர்கள் தற்போது ஈழத் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுகூடி அரசுத் தரப்புடன் சேராத தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி செயற்பட்ட தமிழ் கட்சிகளின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கி இவ்உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இருந்து மும்மடங்கான 39 பேர் அல்லது சற்று கூடுதலான அங்கத்தவர்களை கொண்ட தமிழ் தேசிய உயர் பேரவை ஒன்றை அமைக்க வேண்டும்.

இந்த அதிகார சபைக்கு தற்போது இருக்கின்ற 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் விரும்பியோ விரும்பாமலோ தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தி நிற்கின்ற தமிழ் கட்சிகளினால் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றவகையில் அவர்கள் இந்த அமைப்பில் அங்கம் வகிப்பர்.

ஏனைய அங்கத்தவர்களாக தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களை உள்வாங்க வேண்டும். மற்றும் . தமிழ் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், கலை இலக்கியப் படைப்பாளிகள், கலைஞர்கள், அறிவியலாளர்கள், மத நிறுவனங்களின் தலைவர்கள், நீதிக்காகப் போராடும் அமைப்புகள் போன்றவற்றிலிருந்து பிரதிநிதிகளை தெரிவு செய்தல் வேண்டும்.

கிழக்கு மாகாணத்திற்கென கூடுதலான அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இன்று கிழக்கு மாகாணம் முற்றுமுழுதாக விழுங்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க கூடியதாகவும் அதற்காக வேகமாக தொழிற்பட வேண்டி இருப்பதாலும் கிழக்குப் பிராந்தியத்தின் பிரதிநிதிகள் இந்த அவையில் அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்வாங்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

மற்றும் பெண்கள் அமைப்புகள் சார்ந்தும், ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சார்ந்தும், சமூக உள்முரண்பாடுகளை களையகூடிய வகையில் பிரதிநிதிகள் கட்டாயம் உள்வாங்கப்பட வேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் முஸ்லிம்கள் தங்கள் தனிக் குழுமகா செயற்பட விரும்புகின்ற நிலையில் அவர்கள் விரும்புக் கேற்றவாறு அதாவது தந்தை செல்வாவினால் முன்வைக்கப்பட்ட திருகோணமலை தீர்மானத்திற்கு இணங்க அவர்கள் இந்த தமிழ் தேசிய அதியுயர் பேரவையுடன் பேசி முடிவுக்குவர முடியும். எப்படியோ முஸ்லீம்களின் ஜனநாக உரிமைகளை திருமலை தீர்மானத்திற்கு இணங்க வழிவகை செய்யலாம்.

சுமார் 40 பேர் கொண்ட இந்தப் பேரவையானது தமிழர் தரப்பு சார்ந்த முடிவுகளை எடுக்கும் அதிஉயர் அதிகாரம் கொண்ட சபையாக அமையும். இச்சபையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும்.

இந்த சபை பன்னாட்டு விவகாரங்களை கையாள்வதற்கான மூன்று பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க வேண்டும். வகுக்கப்படும் வெளியுறவு கொள்கையின் அடிப்படையில் பன்னாட்டு உறவுகளை கையாளும் அதிகாரம் கொண்டவர்களாக இவர்கள் காணப்படுவர்..

போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைஆகியவற்றிற்கு எதிரான சர்வதேச நீதி விசாரணையையும் காணமல் ஆக்கப்பட்டோரிற்கான சர்வதேச நீதி விசாரணையையும் முன்னெடுப்பதற்கான பிரதான பொறுப்புகளை சார்ந்தது.

உள்நாட்டு அரசியல் விவகாரங்களை கையாளுவதற்கு என்று மூன்று பேர் கொண்ட இன்னொரு குழு உருவாக்கப்பட வேண்டும்.

தாயக நிலஅபகரிப்பு சார்ந்த , தமிழர் தாயத்தில் சிங்களக் குடியேற்றங்கள் சார்ந்த விடயங்களை கையாள்வதற்கும் அதற்கு எதிராக போராடுவதற்கும் ஒரு செயற்குழு உருவாக்கப்பட வேண்டும்.

போர் விதவைகள் , அங்கவீனர்கள், தமிழ் அரசியல்க்கைதிகள் சார்ந்த விவகாரங்களை கையாள்வதற்கான செயற் குழு ஒன்றை நியமிக்க வேண்டும். அவர்கள் இவ்விவகாரம் சார்ந்த செயற் திட்டங்களை முன்னெடுக்க வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

தமிழர்தாயகத்தின் கடல்வளம், நிலவளம், காட்டுவளம்இ மண்வளம், மூலவளம் என்பன பாதுகாக்கப்பட்டு அவை பொருத்தமாக அபிவிருத்தி செய்யவும் சுற்றுச்சூழற் பாதுகாப்பை முன்னைடுக்வும் ஒரு செயற்குழு உருவாக்கப்பட வேண்டும்.

மேலும் உடனடியாக மிக முக்கிய விவரங்கள் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டுமாயின் அதனை பேரவையின் தலைவர் உள்ளிட்ட நிறைவேற்றுக் குழு அவ்விவகாரம் சார்ந்து கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்கும்.

இத்தகைய மூவர் கொண்ட குழுவை உருவாக்கி அவர்கள் அந்த விடயம் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது இக்குழுக்கள் தங்களுக்குத் தேவையான துறை சார்ந்த வல்லுனர்களை பேரவையின் அனுமதியுடன் குழுவில் இணைத்துக் கொள்ள முடியும்.

ஆனால் பேரவைக்கு வெளியில் இருந்து எடுக்கப்படும் துறைசார் வல்லுனர்கள் பேரவையில் அங்கத்தவர்களாகவோ அல்லது பேரவையில் வாக்குரிமை உடையவர்களாகவோ இருக்க மாட்டார்கள்.

தாயகத்தில் இவ்வாறு ஒரு ஈழத் தமிழர் அதியுயர் பேரவை உருவாக்கப்படும் அதேவேளையில் புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்கள் தங்களுக்குள் ஓர் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி எல்லோரையும் இணைந்ததான ஒரு கட்டமைப்பு உருவாக்க வேண்டும். அவர்கள் சர்வதேசரீதியாக குறிப்பாக மேற்குலகில் ஈழத் தமிழர் சார்ந்த அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள இத்தகைய ஒரு கட்டமைப்பு இன்றியமையாதது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் புவிசார் அரசியல் நிலைப்பாட்டில் இந்தியாவுடனான அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கு தமிழகத்தை மையம் கொண்ட ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். தமிழகத்திலும் இந்திய மத்திய அரசுடனும் ஈழத் தமிழர் சார்ந்த விவகாரங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு வழிவகை செய்யவேண்டம்.

இன்று ஏற்பட்டிருக்கின்ற இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் மற்றும் பூகோள அரசியல் , பொருளியல் போட்டியில் இலங்கை தீவு சிக்குண்டு கிடக்கிறது. இந்த சிக்கலான, நெருக்கடியான வல்லரசுகளின் போட்டிக்களமாக இந்து சமுத்திரப் பிராந்தியம் மாறிவிட்டது. ஆனால் கேந்திர பகுதியில் வாழும் தமிழரின் அரசியல் போக்கானது படுபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. இதனை உடனடியாக சரி செய்து தூக்கி நிறுத்த வேண்டும்.

ஒரு நீண்ட போராட்டமும் அதன் தொடர்ச்சியில் பேரழிவையும் சீரழிவையும் நாம் சந்தித்திருக்கிறோம். ஈழத் தமிழர்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டார்கள். அவ்வொடுக்குமுறைக்குப் பின்னாலிருக்கின்ற சக்திகளையும் விதிகளையும் கண்டறிந்து ஆய்வு செய்து இதனடிப்படையில் அரசிலை முன்னெடுத்துச் செல்ல தாயகத்தில் அனைத்து தமிழ்த் தேசியவாதிகளையும் ஒருங்கிணைதத்து ஒரு தமிழ் தேசிய அதியுயர் பேரவை உருவாக்கி செயல்ப்பட வேண்டியது இன்றைய காலத்தின் உனைடித் தேவையாகும்.

தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ் தேசிய விரும்பிகள் மற்றும் தமிழினத்துக்கு அபால் உலகெங்கும் உள்ள ஜனநாயக விரும்பிகள் , அறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் , ஊடகவியலாளர்கள் என அனைவரும் இது சார்ந்து ஆக்கபூர்வமாக சிந்திக்கவும் செயல்படவும் வேண்டிய இறுதிக் காலகட்டம் இதுவாகும்.

இன்னும் சில ஆண்டுகளுக்குள் ஈழத் தமிழின அழிப்பை பூர்த்தியாக்குவதற்கான இறுதிக்கட்ட வேலைத் திட்டத்தோடு எதிரி செயற்பட்டுக் கொண்டிருக்கும் காலம் இது. அறிவியல், இராணுவ , நிர்வாக நிபுணர்களைக் கொண்ட "வியத்மக" என்கின்ற இன அழிப்புக்கான பாரிய செயற்பாட்டாளர் குழுவின் துணையோடு ஜனாதிபதி கோத்தபாய இனஅழிப்புக்கு கங்கணம் கட்டியவாறு தலைமை தாங்கி நிற்கின்றார்.

இந்நிலையில் ஈழத் தமிழர்கள் அவசரஅவசரமாக ஐக்கியப்பட்ட ஒரு சக்தியாக திரண்டு தம்மை ஒருங்கிணைத்து முன்னேறத் தயாராக வேண்டும். அதற்க்கு தாயகத்தில் ஓர் அதிஉயர் பேரவை உருவாக்க வேண்டியது முதற்கட்ட அவசியமாகும் என்று கூறியுள்ளார்.