வியாழேந்திரன் அரசுடன் இணைந்து பணம் கைமாறப்பட்டமைக்கான ஆதாரங்களை வெளிப்படுத்துவேன்! விஸ்ணு

Report Print Kumar in அரசியல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் சிங்களவர்களை நாடாளுமன்றம் அனுப்புவதற்கும், மாகாணசபைக்கு அனுப்புவதற்கான திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தீட்டப்பட்டு வருவதாக இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் நா.விஸ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடன் நேரடியாக மோத முடியாமல் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பொலிஸார் மூலமாக ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடாத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழ் மக்களின் தேவைகள், அபிலாசைகள் நிறைவேற்றப்படுகின்றதா என்ற கேள்விக்குறியெழுந்துள்ள நிலையில் மேய்ச்சல் தரை பிரச்சினை பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

இந்த மேய்ச்சல் தரை பிரச்சினைகள் குறித்து ஊடகங்கள் வெளிக்கொணர்ந்து வருகின்றது.நாங்களும் காந்திபூங்காவில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடாத்தியிருந்தோம்.

ஆனால் ஓரிரு நாட்களுக்கு முன்னர் பொலிஸ் நிலையங்களுக்கு ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.ஊடகம் என்பதன் அர்த்தம் தெரியாதவர்கள் தான் இந்த முறைப்பாட்டினை செய்து ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுமளவுக்கு வீடுகளுக்கும் சென்று விசாரணை நடாத்தியுள்ளனர்.வீடுகளில் உள்ளவர்கள் கூட அச்சப்படும் வகையிலான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேய்ச்சல் தரை நிலம் தொடர்பில் பிள்ளையானும் ,வியாழேந்திரனும் சரியான கவனம் எடுக்கவில்லையென கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.அதற்கு பின்னர் தான் ஊடகவியலாளர்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அவ்வாறானால் காவல் நிலையத்தில் வியாழேந்திரன் அவர்கள் தான் முறைப்பாட்டினை செய்திருக்க வேண்டும்.

வியாழேந்திரன் கடந்த காலத்தில் இருந்த நிலைமையினை உணர வேண்டும்.அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாகவே நாடாளுமன்றம் சென்றவர்.அந்த வேளையில் கிரவல்ரோட்டுக்கும், கொங்கிறீட் வீதிக்கும் இங்கு போராட்டம் நடக்கவில்லை,எங்களது போராட்டம் ஈழத்தை பெற்றுக்கொடுப்பது,அரசியல் கைதிகளை வெளியில் கொண்டுவருவது, நிலங்களை பாதுகாப்பது என்று அன்று வாய் கிழிய பேசியவர் இன்று தமிழ் மக்களின் தேவைகள் வரும்போது வாயடைத்துப் போயிருக்கின்றார்.

வியாழேந்திரன் பதவியை தக்கவைப்பதற்காகவா வாயை கொண்டிருக்கின்றார் என்று பண்ணையாளர் கேட்ட கேள்வியை வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.நேரடியாக ஊடகவியலாளர்களுடன் மோத முடியாமல் சிவில் நிர்வாகத்தினைக்கொண்டு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துமளவுக்கு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

கடந்த காலத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் வெற்றிக்காக பாடுபட்டதில் நானும் ஒருவன்.கடந்த அரசாங்கத்தினை தூக்கி வீசி இந்த ஜனாதிபதியை கொண்டு வந்தோம்.இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து அரசாங்கத்தில் இணைந்த வியாழேந்திரன் தொடர்பில் நான் பல விடயங்களை கூறுவேன்.

நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் எட்டு வேட்பாளர்களும் இணைந்தே ஒரு ஆசனத்தினைப் பெற்றுக்கொண்டோம்.

ஆனால் நாடாளுமன்றத்திற்கு வியாழேந்திரன் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அது தமது தனி வெற்றியென்ற வகையில் கருத்துகளை முன்வைத்து வருகின்றார்.

வியாழேந்திரன் முற்போக்கு தமிழர் அல்ல.அவர் பொதுஜன பெரமுனவில் கைச்சாத்திடப்பட்ட ஒருவர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் தலைவராகவும், செயற்படுகின்றார். கறுப்புச்சட்டைகளை இளைஞர்களுக்கு வழங்கி அவர்களை இந்த வியாழேந்திரன் முட்டாளாக்கி வைத்துள்ளார்.

கறுப்பு சட்டையுடன் சென்றால் தான் தமது காரியத்தினை முடிக்க முடியும் என்று சிலர் கறுப்புச்சட்டை அணிவதாக தெரிவிக்கின்றனர்.

ஊடகவியலாளர்களை பொலிஸ் கொண்டு அச்சுறுத்தும் செயற்பாடுகளை வியாழேந்திரன் உடனடியாக விட வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தது தங்களது தேவைகளையும் பூர்த்தி செய்து மாவட்டத்தினை மேம்படுத்துவதற்காகும்.தனிப்பட்ட ஒருவரை நாடாளுமன்றம் அனுப்பியது மாலைகளை கழுத்தில் போட்டுக்கொண்டு வீதிகளில் படம் காட்டுவதற்கு அல்ல.

கடந்த காலத்தில் கிறவலுக்கும் கொங்கிறீட் ரோட்டுக்கும் நாங்கள் அரசியல் செய்யவில்லையென்று கூறியவர். இன்று நூறு மீற்றர் இருநூறு மீற்றர் வீதிக்கு பதாதைகள் கட்சி செய்வது தான் அவரின் அபிவிருத்தியாகும்.

வியாழேந்திரனுக்கு வெகுஜன ஊடக அமைச்சு வழங்கப்பட்டு ஏன் அது பறிக்கப்பட்டது என்ற காரணத்தினை இன்னும் வெளிப்படுத்தவில்லை.அது தொடர்பில் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல,ஜனாதிபதியிடம் கேட்கும் போதே உண்மை நிலைமை தெரியவரும்.

பொதுஜன பெரமுனவினை வெற்றிபெறச் செய்வதற்கு நாங்கள் பாரிய பங்களிப்பு செய்தவர்கள்.பொதுஜன பெரமுனவின் எட்டு வேட்பாளர்களும் மிகவும் கஸ்டப்பட்டு ஒரு ஆசனத்தினைப் பெற்றுக்கொண்டோம்.

கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து இந்த அரசாங்கத்துடன் எவ்வாறு இணைந்தார்..? யார் மூலமாக இணைந்தார்,எவ்வாறு பணம் கைமாறப்பட்டது என்ற விபரங்கள் எல்லாம் நான் வெளிப்படுத்துவேன்.அனைத்து விபரங்களும் எனக்கு தெரியும்.வியாழேந்திரன் யாரிடமும் வாலையாட்டலாம்,ஆனால் என்னிடம் ஆட்ட முடியாது.என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளது.

மட்டக்களப்பினை பாதுகாப்பதற்காக இந்த அரசாங்கத்தில் இணைந்ததாக வியாழேந்திரன் தெரிவிக்கின்றார்.அவர் இந்த மண்ணை பாதுகாக்க சேரவில்லை கட்டிய வீட்டினை பாதுகாக்கவும், வாகனத்தின் லீசிங்கை கட்டுவதற்காகவுமே அரசாங்கத்துடன் இணைந்தாரே தவிர மக்களை பாதுகாக்கவும் இல்லை,மக்களின் வயிற்றுப்பசியை தீர்ப்பதற்காகவும் அல்ல.

அதுமட்டுமன்றி அண்மைக்காலமாக அவரின் சேட்டைகளும் அதிகரித்துள்ளன.பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகயிருந்த சந்திரகுமாரை ஊடக சந்திப்பொன்றில் காமடி பீஸ் என கூறியிருந்தார்.அதேபோன்று கருணா அம்மானை காமடி பீஸ் என்கிறார்.கருணா அம்மான் இவரின் பெயரை வைத்து பிரபலமாக நினைப்பதாக இவர் கூறுகின்றார்.கருணா அம்மான் உலக பிரபலம்,இவர் உள்ளூர் பிரபலம் என்றும் தெரிவித்துள்ளார்.