ஆயிரம் ரூபா விமர்சனங்கள் இயலாமையின் வெளிப்பாடே: அனுஷா சந்திரசேகரன்

Report Print Rakesh in அரசியல்
106Shares

ஆட்சியில் அங்கம் வகித்தபோது 50 ரூபாவைக் கூட பெற்றுக்கொடுக்க முடியாத பலவீனத்தை, ஆயிரம் ரூபாவை விமர்சித்து சமாளிப்பது இயலாமையின் வெளிப்பாடே என சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களில் சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தத்தால் தீர்மானிக்கப்பட ஆரம்பித்த காலத்திலிருந்தே இது போட்டா போட்டியான விடயமாகவும் தொழிலாளர்கள் திருப்தியடையாத விடயமாகவும் மாறிவிட்டது.

முழு மலையகத்தையே ஸ்தம்பிக்கச் செய்து தேசிய மட்டத்தில் பல அமைப்புகளினது முழுமையான ஆதரவையும் பெற்று நடைபெற்ற ஹட்டன் சத்தியாகிரகப் போராட்டத்தாலேயேகூட சம்பள உயர்வைப் பெறமுடியாமல் போய்விட்டது.

தொழிலாளர்களின் ஒற்றுமை, போராட்டங்களுக்கு அப்பால் சம்பள உயர்வை தீர்மானிப்பது கூட்டு ஒப்பந்தம் என்பதனையே இது உணர்த்துகிறது.

இதனைகூட விளங்கிக்கொள்ள முடியாமல் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காகவும் மாகாணசபையில் வாரிசுகளை உள்வாங்குவதற்காகவும் உண்மையை மூடிமறைத்து பொய்யுரை ஆற்றக்கூடாது.

என் தந்தையின் மரணத்துக்குப் பின்னர் தலைமையை அபகரித்த ஆர்வத்தை சம்பள உயர்வுக்கான ஏதாவது போராட்டத்திலும் காட்டியிருக்கலாம்.

பதவி அந்தஸ்து இருக்கும்போது மக்களை மறந்து விட்டு மாகாணசபை தேர்தலுக்காக உணர்ச்சி வசப்படுவது தலைமைக்கு அழகல்ல.

இன்று 1000 ரூபாவை விமர்சித்துக் குரல் கொடுப்பவர் இதுவரை ஆட்சியிலிருந்த அரசில் அமைச்சராக இருந்தார் என்பதையும் நினைவில் வைத்து ஏமாற்றுபவர்கள் வரிசையில் தாமும் இருப்பதை ஏற்றுக்கொண்டுதான் இவ்வாறு கருத்துக்களை தெரிவிக்கவேண்டும்

சம்பள உயர்வு விடயத்திலும் சரி வேறு எல்லா உரிமை சம்பந்தப்பட்ட விடயங்களிலும் சரி இவ்வாறான எமாற்றும் அரசியல்வாதிகளின் உண்மைத்தன்மையை விளங்கிக் கொள்ளுங்கள் என்பதுதான் நான் மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.