மக்கள் மீது இந்த அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை சபையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு

Report Print Rakesh in அரசியல்
53Shares

இந்த ஆட்சியாளர்களின் தேவைகள் நிறைவேறிவிட்டதால், மக்கள் மீதான அக்கறை அவர்களிடத்தில் இல்லாமல் போய்விட்டது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் காலத்தில் அரசால் மக்கள் முன் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் விடயங்கள் எதனையும் வரவு – செலவுத் திட்டத்தில் காண முடியவில்லை. இதன்படி மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென்ற நோக்கம் ஆட்சியாளர்களிடம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை, 20ஆவது திருத்தச் சட்டம் ஊடான அதிகாரங்கள் உள்ளிட்ட தமக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொண்ட பின்னர் மக்கள் இருந்தாலும் ஒன்றே, இல்லாவிட்டாலும் ஒன்றே என்ற எண்ணத்தில் இந்த அரசின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.

இதேவேளை, வரவு – செலவுத் திட்டத்தில் கொரோனவைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் உள்ளடக்கப்படவில்லை. கொரோனா தடுப்பு மருந்தைக் கொள்வனவு செய்வதற்காக உலக நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டிருக்கையில், இலங்கை அரசு அதனைக் கொள்வனவு செய்ய முயற்சிக்காது இருப்பது ஏன்?

இந்தநிலைமையில், அரசு கொரோனாவைப் பயன்படுத்தி வியாபார நடவடிக்கையில் ஈடுபட முயற்சிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.