தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் புதிய அரசியலமைப்பு குழு தெரிவு

Report Print Kumar in அரசியல்

இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய அரசியலமைப்புக்கான வேலைத்திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யோசனைகள் அடங்கிய புதிய வரைவு ஒன்றினை தயாரிக்கும் வேலைத்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட துணைத்தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்காக பொதுமக்களிடம் இருந்து யோசனைகளை பெறும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இலங்கையினை பொறுத்தவரையில் 1978ஆம் ஆண்டு இறுதியாக ஒரு அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது. அது 20ஆவது திருத்தங்களுடன் இன்று இருந்து கொண்டுள்ளது.

புதிய அரசாங்கம் வந்ததன் பின் புதிய அரசியலமைப்பினை கொண்டுவருவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக இம்முறை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு யோசனைகளை எம்மால் தெரிவுசெய்யப்பட்டுள்ள குழுவொன்று ஆராய்ந்து அதனை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புதிய அரசியலமைப்பு குழுவொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த குழுவில் சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத், சட்டத்தரணி கமலதாசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் விஞ்ஞான பட்டதாரியுமான ஞா.சிறிநேசன், வடகிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளர் குருநாதன், கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் கிருஸ்ணமோகன் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவின் ஊடாக அரசியலமைப்பு ஒன்றை தயாரிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த அரசியலமைப்பு யோசனைகள் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளையின் அங்கீகாரத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் வழங்கப்படும். தலைமை அதனை ஆராய்ந்த பின்னர் அவர்கள் அனைத்தையும் இணைத்து அரசாங்கத்திடம் வழங்கும்.

இதிலே அதிகமாக சிறுபான்மையின் மக்களின் அபிலாசைகளை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் தெளிவாக கூறியிருக்கின்றோம்.

மாகாணசபை முறைமை, அதற்கு வழங்க வேண்டிய அதிகாரங்கள், அரசின் தன்மை, அடிப்படை உரிமைகள், மொழி, அரச கொள்கை வழிகாட்டி கோட்பாடுகள், அதிகாரங்கள் பண்முகப்படுத்துதல், அதிகாரப்பரவலாக்கம், அதிகாரப்பகிர்வு, நீதித்துறை போன்ற பல விடயங்கள் தொடர்பில் ஆராய்பட்டு அதற்கான வரைவுகள் வரையப்பட்டுள்ளன.

இவைகள் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான நிபுணர்குழு ஆராய்ந்து எமது யோசனைகளும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு தொடர்பில் நாங்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்ற போதிலும் அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

மயிலந்தனை, மாதவனை பிரச்சினை தொடர்பில் பல தடவைகள் அமைச்சர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகளை சந்திது அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

ஆனால் அங்கு நடைபெறும் அத்துமீறல்களை தடுப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இறுதியாக இதனை தடுத்து நிறுத்துவதற்கு கொழும்பில் ஒரு வழக்கு ஒன்றினை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது.

இந்த மாதம் பூர்த்தியடைவதற்குள் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படும். இந்த ஆட்சியானது சிறுபான்மை சமூகத்தினை ஒதுக்கி தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

கிழக்கு தொல்பொருள் செயலணியை ஆரம்பித்துள்ளனர். அதில் முற்றுமுழுதாக பௌத்த மதகுருமாரையும் படைத்தரப்பினர் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மை சமூகத்தினை சேர்ந்த எவரும் இணைத்து கொள்ளப்படவில்லை.

சிறுபான்மை இனமக்களை தள்ளிவைத்தே இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை, அபிலாசைகளை பெறுவதற்கு வரப்போகும் அரசியலமைப்பு உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை மட்டக்களப்பில் இருந்து அனுப்புகின்றோம் என்று கூறியுள்ளார்.