2021ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் பாதீடு சில சிறந்த யோசனைகளை கொண்டுள்ளதாக தெரிவிக்கும் ஐ.தே.க

Report Print Ajith Ajith in அரசியல்

அரசாங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு சில சிறந்த யோசனைகளை கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும் பொருளாதார சவால்களை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதை வெளிக்காட்டுவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளகள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நடப்பு பிரச்சினைகள் காரணமாக சில நிறுவனங்கள் அடுத்த வருடத்தில் மூடப்படவுள்ளன. தொழில் இழப்புகள் ஏற்படும்.

இந்த நிலையில் அவற்றை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பது பாதீட்டில் காட்டப்படவில்லை.

நடப்பில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ளவர்களுக்கு 5000 ரூபாவை வழங்குவதில் அரசாங்கம் கஸ்ட நிலையை எதிர்நோக்குகிறது.

எனவே அந்த திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பதை அரசாங்கம் மக்களுக்கு கூற வேண்டும்.

அரச பணியாளர்களின் ஓய்வூதிய அகவையை 60ஆக அதிகரித்தமை வரவேற்கத்தக்கது.

எனினும் ஊழியர் சேமலாப நிதியை கோரும் அகவையும் 60ஆக உயர்த்தப்பட்டுள்ளதா என்பதை அரசாங்கம் கூறவில்லை என்றும் ருவன் விஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.