போர்க்குற்றவாளி, தீவிரவாதி என கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், சரத் பொன்சேகாவும் மன்றில் பரஸ்பர குற்றச்சாட்டு

Report Print Kamel Kamel in அரசியல்

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை போர்க்குற்றவாளி என குற்றம் சுமத்தியிருந்ததுடன், அதற்கு பதிலளித்த சரத் பொன்சேகா கஜேந்திரகுமாரை தீவிரவாதி என குற்றம் சுமத்தியிருந்தார்.

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது உரையின் ஆரம்பத்தில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ்த் தேசியத்திற்காகவும் உயிர்த்த அனைத்து மாவீரர்களையும் நினைவு கூர்வதாக தெரிவித்திருந்தார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இதனை இடையீடு செய்து எதிர்ப்பை வெளியிட்ட போது அவரை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போர்க்குற்றவாளி என விளித்தார்.

இதனைத் தொடர்ந்து சரத் பொன்சேகா எழுந்து தீவிரவாதி எனவும், இவ்வாறு தீவிரவாத தொனியில் மன்றில் பேச வேண்டாம் எனவும் கஜேந்திரகுமாரை திட்டினார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றும் போது ஆளும் கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக இடையூறு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இரண்டு தரப்புக்களினாலும் போர்க் குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனை மறைப்பதற்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறுவதனை தடுக்க வேண்டுமாயின் போர்க் குற்றச் செயல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வு வழங்கும் என்பது சந்தேகமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்க் குற்றச் செயல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைக்காவிட்டாலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியை முன்னெடுக்கவும் இந்த அரசாங்கம் தவறியுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் நீண்ட காலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டது எனவும் எனவே அந்தப் பகுதிகளுக்கு விசேட கவனம் செலுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் நலனை முதன்மையாகக் கொண்ட அடிப்படையிலான அபிவிருத் திட்டங்களை காண முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.