மலையக மக்களுக்கு முக்கியத்துவம் அளித்த வரவு செலவுத் திட்டம் - ஜீவன் தொண்டமான்

Report Print Kamel Kamel in அரசியல்
48Shares

இந்த வரவு செலவுத் திட்டம், மலையக மக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும் என ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு மலையக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1980ம் ஆண்டு அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவிசாவளையில் முதல் தனிவீட்டுத் திட்டத்தை ஆரம்பித்தார் எனவும், அமரர்களான ஆறுமுகன் தொண்டமான், சந்திரசேகரன் ஆகியோர் தோட்டத் தொழிலாளிகளுக்காக சுமார் 35142 தனி வீடுகளை கட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் யாருக்கேனும் ஆதாரங்கள் தேவையென்றால் அதனை சமர்ப்பிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது அமைச்சின் கீழ் தனி வீட்டுத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

2016 முதல் 2018ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட தனி வீட்டுத் திட்டங்களில் காணப்படும் குடிநீர் வசதி உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையகத்தில் ஓர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், பந்துலகுணவர்தன மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆயிரம் ரூபா சம்பளம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் அவ்வாறு வழங்கப்பட முடியாத சிறந்த முறையில் நிர்வாகம் செய்யாத நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை அரசாங்கம் ரத்து செய்யும் எனவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.