அயர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மேரி ரொபின்சன் கூறிய கருத்துக்களுக்கு இலங்கை ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அதிகார கையளிப்புக்கு மறுத்தமையை கண்டித்திருந்த அயர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி.
இவ்வாறான அதிகார கையளிப்பு முரண்பாடு தொடர்பில் இலங்கை உட்பட்ட சில நாடுகளையும் அவர் உதாரணங்களாக காட்டியிருந்தார்.
இந்தநிலையில் மேரி ரொபின்சனின் இந்த கருத்து தொடர்பாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தமது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி ரொபின்சன் மற்றும் அவரின் கருத்தை வெளியிட்ட செய்தித்தாள்களின் ஆசிரியர்களுக்கு ரொபின்சனின் கருத்தில் தவறு இருப்பதாக சுட்டிக்காட்டி கடிதம் எழுதியுள்ளார்.
1931 ஆம் ஆண்டு முதல் மக்கள் உலகளாவிய வாக்குரிமையைப் பயன்படுத்தி வரும் ஆசியாவின் மிகப் பழமையான மற்றும் தடையற்ற ஜனநாயக நாடுகளில் ஒன்று இலங்கை என்று அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சரியான நேரத்தில் நடைபெறும் தேர்தல்களில் இலங்கையில் அடுத்தடுத்து வரும் அரசாங்கங்கள் எப்போதுமே ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டன.
அத்துடன் அதிகாரப் பரிமாற்றங்களிலும் விரைவான, மென்மையான மற்றும் அமைதியானதாக போக்கு கடைப்பிடிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஒருபோதும் ஒரு கட்சி அல்லது நபர் தேர்தலில் வாக்களித்த மக்களின் தீர்ப்பை ஏற்க மறுக்கவில்லை என்று சரோஜா சிறிசேன, குறிப்பிட்டுள்ளார்.