சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் மாகாண சபைத் தேர்தல்

Report Print Steephen Steephen in அரசியல்

அடுத்தாண்டு சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உத்தேசித்திருந்த போதிலும் கொரோனா தொற்று நோயை ஒழித்து விட்டு தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவிருந்த நிலையில், எல்லை நிர்ணய பிரச்சினை காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

சில மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிந்து தற்போது இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளன.

எவ்வாறாயினும் மாகாணசபைத் தேர்தல்களை பழைய தேர்தலை முறைக்கு அமைய நடத்துவதா அல்லது புதிய முறைமைக்கு அமைய நடத்துவதா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டுமாயின் அது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்து, நிறைவேற்றிய பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் தேர்தலை நடத்த முடியும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.