கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருப்பது பெருந்தோட்டக் கம்பனிகளைக் கட்டுப்படுத்தவே! ஜீவன் தொண்டமான்

Report Print Thirumal Thirumal in அரசியல்

தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கு அல்ல, பெருந்தோட்டக் கம்பனிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே கூட்டு ஒப்பந்தம் அமுலில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நாம் பிரிந்து நின்றால் அது கம்பனிகளுக்கே நன்மையாக அமைந்துவிடும் என குறிப்பிட்டுள்ளார்.

கொட்டகலை - நுவரெலியா பிரதான வீதியை இணைக்கும் தோட்டப்பாதைகளில் ஒன்றான கொட்டகலை கிறிலஸ்பாம், கே.ஜி.கே ஆகிய தோட்டங்களுக்கு செல்லும் பிரதான பாதையை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பாதைகள் புனரமைக்கப்படும் என தேர்தலின் போது நாம் உறுதியளித்தோம். அந்த உறுதிமொழி தற்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

இதற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றார். விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்து, ஊடகங்களின் முன்னிலையில் வீராப்பு பேசும் அரசியல் கலாச்சாரத்தை நான் பின்பற்றவில்லை.

ஒரு அரசியல்வாதியாக அல்லாமல், மக்களுக்கு சேவையாற்றும் சிறந்த நிர்வாகியாக இருக்கவே நான் விரும்புகின்றேன். எனவே, என்னை வேலை செய்ய விடுங்கள், மக்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்.

பெருந்தோட்ட மக்களுக்கு வரவு - செலவுத்திட்டத்தில் எந்தவொரு ஒதுக்கீடும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஒருவர் குற்றஞ்சாட்டுகின்றார். பெருந்தோட்ட மக்கள் என்பவர்களும் இலங்கையர்களே, அவர்கள் தனித்துவிடப்பட்டவர்கள் அல்ல.

எனவே, ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கே வரவு - செலவுத்திட்டத்தில் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆயிரம் ரூபா சம்பளம், மலையக பல்கலைக்கழகம், நுவரெலியா மாவட்டத்தில் மும்மொழி தேசிய பாடசாலை போன்ற நல்ல திட்டங்கள் பட்ஜட்டில் இருந்தும் எதிரணியிலுள்ள மலையக அரசியல்வாதிகள் அதனை ஆதரித்து வாக்களிக்கவில்லை.

இதன்மூலம் மக்களை விடவும் அவர்களுக்கு அரசியலே முக்கியம் என்பது உறுதியாகின்றது. அதேவேளை, கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் பரப்பட்டு வருகின்றன. உண்மையில் கூட்டு ஒப்பந்தமானது தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கு அல்ல.

மாறாக கம்பனிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே அது அமுலில் உள்ளது. ஆயிரம் ரூபாவுக்கான யோசனை வந்துள்ள நிலையில் தற்போது அடிப்படை சம்பளமாக ஆயிரம் வேண்டும் என கூறுகின்றனர்.

ஆனால் உண்மை எது என்பது மக்களுக்கு தெரியும். கட்சி ரீதியாக மக்கள் பிரிந்திருக்கலாம். சிலர் நடுநிலையாக இருக்கலாம். ஆனால் தொழிற்சங்க ரீதியில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் கம்பனிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். நாம் பிரிந்து நின்றால் அது கம்பனிகளுக்கே நன்மையாக அமைந்துவிடும் என குறிப்பிட்டுள்ளார்.