ஈழத் தமிழர் வரலாற்றைச் சிதைக்கும் வகையில் அழிக்கப்படும் தொல்லியல் தடயங்கள்

Report Print Dias Dias in அரசியல்

ஈழத் தமிழினம் வரலாற்றைத் தொலைத்தவர்களாக, வரலாற்றை மறந்தவர்களாக, வரலாற்றுத் தேடலற்று, அறிவியல் தேடலோ, ஆர்வமோ அற்றவர்களாக காணப்படுகின்றனர் என தொல்லியல்துறை மாணவன் மயூரன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அக் கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த 400 ஆண்டுகளாக எஜமானுக்குச் சேவைசெய்யும் கல்விப் பாரம்பரியத்துக்குள்ளால் வளர்ந்தவர்களாக தம்மைத்தாமே படித்தவர்கள் என்று கற்பனாவாதப் பெருமிதத்தில் வலம்வந்ததன் வெளிப்பாடுதான் இன்று தமக்கான ஒரு சரியான வரலாற்றைத் தெரியாதவர்களாகவும், அதே நேரத்தில் தமது இனத்தின் எதிர்கால வாழ்வியலைத் தீர்மானிக்க முடியாதவர்களாகவும், தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஓர் இனம் தன் வரலாற்றைத் தொலைத்துவிட்டால் அதன் வாழ்வும், வளமும் அஸ்த்தமனமாகிவிடும். பொதுவாக ஈழத் தமிழினத்தில் காணப்படும் தலைவர்களும், புத்திஜீவிகளும் வரலாற்று அறிவற்று தமிழர் தாயகத்தை சிதைத்து, எதிரிகளின் கையில் கொடுக்கும் நிலையிற்தான் இன்று காணப்படுகின்றனர்.

ஈழத் தமிழினத்தின் தொன்மைமிகு வரலாறு தமிழர் தாயகத்தின் நிலப்பரப்புக்கள் எங்கும் பரவலாகப் புதைந்து கிடக்கிறது. இந்தத் தொல்பொருட்கள் ஈழத் தமிழர்களின் வரலாற்றை நிரூபிப்பதற்கான இறுதிச் சான்றாதாரங்களாக எம்மிடம் இருக்கிறன.

இந்தவகையில் 1917ஆம் ஆண்டு கந்தரோடையை முதன்முதலில் ஆய்வுசெய்த போல் பீரிஸ் 1919 பெப்ரவரி 22 ஆம் திகதி டெய்லி நியூஸ் ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி முக்கியமானது. அதில் அவர் ''I hope the Tamil People will realize that in truth, there is buried in their sands, the story of much more fascinating development than they had hitherto dreamed" என்றார்.

அதாவது "இதுவரை கனவிலும் எண்ணிப்பார்க்காத தமது நாகரிகத்தின் கவரத்தக்க வளர்ச்சிக் கட்டடம் பற்றிய சான்றுகள் உண்மையகவே மண்ணுள் புதைந்திருப்பதை தமிழ் மக்கள் ஒரு காலத்தில் உணர்வார்கள் என நம்புகின்றேன்" என்று சொன்னார்.

ஆனால் இத்தகைய பெறுமதி வாய்ந்த ஈழத்தின் மூத்தகுடிகள் நாம் என்ற வரலாற்றை உறுதிப்படுதும் தொல்பொருட்களை தமிழினத்தின் கையிலிருந்து தட்டிப்பறிக்கக் கூடிய வகையில் ஒருபுறம் அரச தொல்லியல் திணைக்களமும் மறுபுறம் புதையல் தோண்டும் குழுவினரும் அவற்றை நாசமாக்குகின்றனர்..

போருக்குப் பின்னர்தான் இத்தொல்லியல் தடயங்கள் புதையல் தோண்டுபவர்களால் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விடுதலைப்புலிகள் காலத்தில் அதாவது 1980 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆண்டுவரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் காணப்பட்ட தொல்லியல் தடயங்கள் யாவும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டன.

எங்கு தொல்லியல் தடயங்கள் இருக்கின்றன என்று தெரிந்தும் அதனைப் பார்வையிட்டவர்கள் அதனைச் சேதப்படுத்தாது அப்படியே விட்டிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் காணப்பட்ட தொல்லியல் தடயங்களில் 90 வீதமானவை அழிக்கப்பட்டு விட்டன என்பது மட்டுமல்ல அவற்றை புதையல் தோண்டுகிறோம் என்ற பெயரில் தமிழ் மக்களே இவற்றை அழித்தனர் என்பதே வேதனைக்குரிய விடயமாகும்.

1980களிலிருந்து 2009 வரை இத்தொல்லியல் தடயங்கள் பாதுகாக்கப்பட்டதனாற்தான் இன்று புதையல் தோண்டுபவர்களால் இவை எடுக்கப்படுவது மட்டுமல்ல இத்தடயங்களில் காணப்படும் பொருட்கள் கீழடிக்கு இணையாகவும் இருக்கின்றன என்ற உண்மையும் தெரியவருகிறது.

குறிப்பாக வன்னியில் வவுனிக்குளம், பாண்டியன்குளம், கரும்புள்ளியான், கல்விளான் பகுதிகளில் 2019, 2020 காலப் பகுதில் ஆங்கங்கே எடுக்கப்பட்ட தடயங்கள் கீழடியையும் விஞ்சிநிற்கிறன.

இதில் கல்விளான், கரும்புள்ளியான் பகுதியில் 2018 ஆம் ஆண்டு புதையல் தோண்டுபவர்களால் இங்கு கிடைக்கப்பட்ட சுடுமண் சிற்பங்களும், எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் வாசிக்க முடியாத அளவிற்கு தடயமே தெரியாமல் அழித்தொழிக்கப்பட்டு இருக்கிறது.

அத்துடன் ஆங்காங்கே காணப்பட்ட கற்றூண்களை தூக்கிச் சென்று தங்களின் வீடுகளைக் கட்டுவதற்கு பயன்படுத்துவதையும் காணமுடிகிறது.

போரின் பின்னர் கல்லுடைக்கும் வியாபாரிகளால் வன்னியிலும், கிழக்கு மாகாணங்களிலும் சிறிய மலைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக வாவெட்டி மலை, கல்நீராவி மலை என்பன கல்லுக்காக உடைக்கப்பட்டு அதிலிருந்த எழுத்துக்கள் தடயங்கள் தெரியாமல் அழிக்கப்பட்டன.

அதேபோல் திருகோணமலை , மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் குவிந்திருக்கும் தொல்லியல் தடயங்கள் 2009 வரை பாதுகாக்கப்பட்டிருக்க போர் முடிந்தபின்னர் சில புதையல் தோண்டும் முஸ்லிம் குழுக்களினால் அழிக்கப்படுகின்றன.

இங்கு வேடிக்கை என்னவென்றால் புதையல் தோண்டுவதற்கென்றே முஸ்லிம் குழுக்கள் இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்தி பாரிய அளவில் இயங்குவதுதான். இக்குழுவில் மந்திரவாதிகள், மெளலவிகள், பிக்குகள் என புதையல் தோண்டும் விடயத்தில் இணைந்து தமிழர்களின் தொல்லியலை அழிக்கின்றனர். இதில் பசீர் காக்கா குழு, றியாஸ் குழு என்பன பிரபலம் .

இவர்களில் றியாஸ் குழு அண்மையில் திருகோணமலையில் ஒரு தமிழரின் காணியில் புதையல் தோண்ட அதில் கி.பி.6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நான்கு சாடிகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த நான்கு முட்டிக்குள் நான்கு புட்டிகள் (குடுவை) காணப்பட்டன.

அந்த வெளிப்பக்க முட்டிகளில் மேல்ப் பக்கத்தில் தாமரை படமும், அதன் நான்கு பக்கங்களிலும் நாகங்கள் அந்த முட்டிக்கு பாதுகாப்பாகவும் அதனையடுத்து சூலமும், வச்சிராயுதமும் காணப்பட.

அந்த முட்டிக்குள்ளே உள்ள புட்டிகளில் வெளிப் பக்கத்தில் பாளி மொழியில் சில வாசகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இதற்குள் மந்திரிக்கப்பட்ட நீரும் இருந்திருக்கிறது.

இங்கு கண்டெடுக்கப்பட்ட நான்கு சாடிகளில் மூன்று சாடிகளை றியாஸ் குழு உடைத்தும்விட்டது. எஞ்சிய ஒரு முட்டியை இந்த றியாஸ் குழுவிலுள்ள மந்திரவாதிகள் மறைத்து வைத்துள்ளனர்.

பின்னர் வன்னியில் குளவி சுட்டானில் உள்ள ஒரு குடும்பம் புதையல் தோண்டும் ஆசையில் இந்த மந்திரவாதிகள் குழுவைக்கொண்டு புதையலைத் தோண்ட ஆரம்பிக்க ஏற்கனவே திருகோணமலையில் இருந்து எடுத்த எஞ்சிய முட்டியை இங்கு மறைத்து வைத்துவிட்டு இம்முட்டி குளவிசுட்டானில் புதையல் தோண்டிய இடத்திலிருந்து எடுக்கப்பட்டதாக நாடகமாடிய மந்திர வாதிக்கள் அம்முட்டிக்குள் தங்கம் இருப்பதாகவும் இது பலகோடி பெறுமதி வாய்ந்ததாகவும் கூறி தமக்கு வெறும் ஒன்பது லட்சத்தை தந்துவிட்டு இம்முட்டிக்குள் இருக்கும் தங்கத்தை விற்று எடுக்கும் காசை நீக்களே சந்தோசமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறிச் சென்றுவிட்டது.

இம்முட்டிக்குள் தங்கம் இல்லை என்று உணர்ந்த அந்த குடும்பம் பொலிஸில் தம்மை அந்த மந்திரவாதிகள் ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்துள்ளது. இதை விசாரித்த பொலிஸும் அந்த முட்டியை கைப்பற்றியதோடு, புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் அக்குடும்பத்தினரை கைது செய்தும் உள்ளனர்.

இதேபோலத்தான் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறையில் புதையல் தோண்டும் குழுவினரால் ஐம்பொன்னாலான 940 கிராம் கொண்ட தெய்வானையின் சிலை எடுக்கப்பட்டு இது சோழர் காலத்திற்குரிய தங்கச்சிலை என இரண்டு கோடிக்கு விலை பேசப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த தெய்வானை சிலை 20 ஆம் 21 ஆம் நூற்றாண்டுக்குரியவை 1956 ஆம் ஆண்டு அம்பாறையில் சிங்கள, முஸ்லிம்களால் அழிக்கப்பட்ட முருகன் கோயிலின் சிலையாக அறியக்கிடக்கிறது, இச்சிலை இன்று சோழர் கால சிலை என பல கோடிகளுக்கு இம்முஸ்லிம் குழுக்களால் ஏலம் பேசப்படுகிறது.

இங்கு நான் குறிப்பிட்டிருப்பது எமக்குக் கிடைத்தவற்றில் ஒரு பகுதிதான். யார் கண்ணிலும் படாமல் புதையல் தோண்டுபவர்களால் அழிக்கப்பட்ட தொல்லியல் தடையங்களோ ஏராளம்.

மேலும் இவ்வாறுதான் வடகிழக்கில் புதையல் தோண்டுபவர்களினால் தமழர்களின் தொன்மையான வரலாறு அழித்தொழிக்கப்படுவதை அறியாமலே பல தமிழர்கள் அற்ப சொற்ப சலுகைகளுக்காக திட்டமிட்ட தமிழர் வரலாற்று அழிப்புக்கு தம்மை பக்கபலமாக்குகிறார்கள் என்பதே துரதிஸ்டவசமானது. இதில் படித்த புத்திஜீவிகளும் உள்ளடக்கம்.

வடகிழக்கின் தொன்மை வரலாற்றை அறிதியிட்டுக் கூறக்கூடிய தமிழர் தொல்லியல் தடங்களைத் திட்டமிட்ட முறையில் கையகப் படுத்துவதிலும், ஆக்கிரமிப்பதிலும், சிங்கள பெளத்த பேரினவாத அரசு மும்முரமாகச் செயற்படுவதோடு தமிழர் தொல்லியலை சிங்களவர்களின் தொல்லியல் எனத் திரிபுபடுத்திக் காட்டி உண்மைக்குப் புறம்பான கற்பனையான சிருஸ்டிக்கப்பட்ட வரலாற்றியல் ஒன்றை சிங்கள தேசம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இதனை அறிவியல் பூர்வமாக சர்வதேச நியமங்களுக்கூடாக ஆக்கபூர்வ நடவடிக்கைகளை புலம்பெயர் வாழ் ஈழத்தமிழ் அறிஞர்கள் முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் வரலாற்றைத் தொலைத்த மக்கள் கூட்டமாக உலகப் பரப்பில் சிதறி வாழ்ந்து சிதைந்து போவோம் என்பது திண்ணம் என்று கூறியுள்ளார்.