பொறுப்புக்கூற அரசு மறுத்தால் விளைவுகள் விபரீதமாகும்! நாடாளுமன்றில் சுமந்திரன் எச்சரிக்கை

Report Print Rakesh in அரசியல்
370Shares

2009ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து பதினொரு வருடங்களாக பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் இலங்கை அரசு சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து தான் தோன்றித்தனமாக அரசாங்கம் பின்வாங்க முடியாதென நாடாளுமன்றில் இன்று பேசிய சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச ஒப்பந்தங்களும், உறுதிமொழிகளும் குறித்த காலத்தில் பதவியிலிருக்கும் அரசாங்கங்களுக்கு மாத்திரம் செல்லுப்படியானவையல்ல. அவை அரசொன்றிற்குச் சொந்தமானவை. ஆகவே, இலங்கை அரசென்ற வகையில் சர்வதேச சமூகத்திற்கு அளிக்கும் உறுதிமொழிகளை ஆட்சியிலிருக்கும் எந்தவொரு அரசாங்கமும் தட்டிக்கழிக்க முடியாது.

அவற்றை பூர்த்தி செய்யாவிடின் அரசாங்கம் பாரிய பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுமென்று எம். ஏ. சுமந்திரன் சபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வரவு-செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சிற்கான ஒதுக்கீடு மீதான வாக்களிப்பு விவாதத்தில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே சுமந்திரன் இவ்வாறு விடுத்துள்ளார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் இலங்கை மீது திணிக்கப்பட்டதாகக் கூறும் அரசாங்கத்திற்கு, அதிலிருந்து ஒரு தலைப்பட்சமாக ஒதுங்கிக் கொள்ளும் துணிச்சல் இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பிய அவர் அவ்வாறு ஒதுங்கிக் கொள்ளத் துணிவில்லாத பட்சத்தில் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டிய யதார்த்தத்தைக் குறிப்பிட்டார்.

அதே போல், போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆயுதத் தீர்வு இறுதித் தீர்வாகாதென்பதை பல்வேறு சர்வதேச அரங்குகளில் ஏற்றுக் கொண்டிருந்தது.

இந்திய அரசாங்கத்திற்கும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட நிரந்திர அரசியல் தீர்வொன்று வரையப்படுமென்று உறுதியளித்திருந்த போதிலும், அது இன்னமும் எட்டப்படவில்லை எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.