தன்னை காப்பாற்ற முயற்சிக்கும் மைத்திரி..

Report Print Ajith Ajith in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு சாட்சிய வழங்கலின்போது இந்த குற்றச்சாட்டை மைத்திரிபால எதிர்நோக்கியுள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணையத்தில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் புஜித் ஜெயசுந்தரவின் சட்டத்தரணிகள் மைத்ரிபாலவை குறுக்கு விசாரணை செய்தனர்.

தாக்குதல்களின் பின்னர் உடனடியாக நாடு திரும்புவதற்கு மூன்று வானுர்த்திகள் இருந்தபோதும் ஏன் ஏற்கனவே திட்டமிட்ட வானூர்தியில் நாட்டிற்கு திரும்ப முடிவெடுக்கப்பட்டது என்று பூஜித் ஜெயசுந்தரவின் சட்டத்தரணி மைத்திரிபாலவிடம் வினவினார்.

இதற்கு பதிலளித்த மைத்திரிபால ஜனாதிபதியாக, தமக்கு வானூர்தி நேரங்கள் மற்றும் கால அட்டவணைகள் தெரியாது. தமது அதிகாரிகளால் தனக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தியே தாம் நாடு திரும்பியதாக குறிப்பிட்டார்.

அத்துடன் சிங்கப்பூரில் உள்ள தமது மருத்துவர் தமக்கு ஒரு ஊசி மருந்தை செலுத்தியதாகவும் 24 மணி நேரத்திற்கு வானூர்தி பயணத்தை மேற்கொள்ளவேண்டாம் என்று அவர் தமக்கு அறிவுறுத்தியதாகவும் மைத்திரிபால குறிப்பிட்டார்.

இருந்தபோதும் கூட தமது சொந்த ஆரோக்கியத்தை பணயம் வைத்து நள்ளிரவில் நாடு திரும்பியதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோவின் சட்ட பிரதிநிதி, சட்டத்தரணி- தில்ஷன் ஜெயசூரிய தமது குறுக்கு விசாரணையின்போது,ஏப்ரல் 16 ஆம் திகதி சிங்கப்பூருக்கு செல்வதற்கு முன்னர் இந்தியாவில் உள்ள திருப்பதி கோவிலுக்குச் சென்றீர்களா? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, அது அந்த வருடத்துக்கான தமது தள யாத்திரை என்று பதிலளித்தார்.

அந்த நேரத்தில் தமது மூன்று பிள்ளைகளும் தம்முடன் சென்றிருந்தால் நினைவுகூருங்கள் என்று மைத்திரிபால பதிலளித்தார்.

இதன்போது சட்டத்தரணி,இது ஒரு நகைச்சுவை அல்ல. நாட்டின் ஜனாதிபதி ஒரு தனிப்பட்ட பயணத்தில் இருந்த நேரத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது.

இந்த பயணத்தின்போது முன்னாள் காவல்துறை அதிபர் பூஜித் ஜெயசுந்தர விமானத்தில் ஏறி வணக்கம் செலுத்தியதை நினைவு கூர்ந்த நீங்கள், உங்கள் சொந்த பிள்ளைகளில் யார் உங்களுடன் வந்தார்கள் என்பதை நினைவுபடுத்த முடியாது என்பதை யாரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, நான் நேர்மையாக சொல்கிறேன் என்னால் நினைவில் கொள்ள முடியவில்லை என்று பதிலளித்தார்.

மாவனெல்ல புத்தர் சிலை மீது தாக்குதல் மற்றும் வவுணத்தீவில் காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவங்கள் போன்றவை 2018 அக்டோபரில் நீங்கள் உருவாக்கிய அரசியலமைப்பு நெருக்கடியால் நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக நிகழ்ந்தன என்று சட்டத்தரணி குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, தாம் ஏற்கமுடியாது என்று தெரிவித்தார். அரசியல் மாற்றம் தாம்; சொந்தமாக எடுத்த முடிவு அல்ல. ஜனாதிபதியின் ஆலோசகர்கள், கல்வியாளர்கள் மற்றும் பலர் அந்த முடிவை எடுத்தனர்.

நீங்கள் முடிவெடுக்கும் பொறுப்பை வேறு ஒருவருக்கு மாற்ற முயற்சிக்கிறீர்களா? என்று இதன்போது சட்டத்தரணி வினவினார்.

அதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி , இல்லை. இன்றுவரை, தமது முடிவு சரியானது என்று நம்புவதாக தெரிவித்தார்.

ஏப்ரல் 08, 2019 அன்று இடம்பெற்ற காவல்துறை உதவி அதிபர்களின் கூட்டத்துக்கு வந்த முன்னாள் அரச புலனாய்வு பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தன ஏப்ரல் 04 அன்று பெற்ற இந்திய உளவுத்துறை எச்சரிக்கையை தம்வசம் கொண்டிருந்தார்.

எனினும் அந்த எச்சரிக்கையை அவர் உங்களுக்குத் தெரிவிக்கத் தவறியது, கடமையின் தீவிரமான குறைபாடுதானே என்று சட்டத்தரணி வினவினார்.

எனினும் இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, தாக்குதல்களைத் தடுக்காததற்கும், தனக்கு தெரிவிக்காததற்கும் ஒரு நபரைக் குறை கூற நான் தயங்குகிறேன் என்று குறிப்பிட்டார்

அப்படியானால், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோரின் சிறைவாசம் நியாயமற்றது அல்லவா என்று சட்டத்தரணி வினவினார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, "ஆம், அது இருக்கலாம்" என்று பதிலளித்தார்.

இந்த தண்டனை நியாயமற்றது என்று நீங்கள் நம்பினால், மலல்கொட ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பே அந்த இருவரும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று ஏன் சொன்னீர்கள்? என்று சட்டத்தரணி கேட்டார்.

தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டவற்றின் அடிப்படையில் மட்டுமே தாம் அதனை கூறியதாக தெரிவித்தார்.

இதன்போது கருத்துரைத்த சட்டத்தரணி: இந்த சம்பவத்திற்கு நீங்கள் முன்னாள் அரசப் புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளரை குறை கூறாமைக்கு காரணம், நீங்கள் வெளிநாடு செல்வதற்கு முதல் நாள் இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அவர் உங்களுக்குத் தெரிவித்திருக்கிறார் என்பதாலாகும் என்று சட்டத்தரணி குறிப்பிட்டார்.

எனினும் இதனை மறுத்த முன்னாள் ஜனாதிபதி இந்த எச்சரிக்கை தனக்குத் தெரிந்திருந்தால், தேவையான ஏற்பாடுகளை செய்யாமல் தாம் ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேறியிருக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டார்.