தொழிலாளர்களிடம் சந்தா வாங்குவதில் தவறில்லை என ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் சந்தா அறவீடு பற்றி பேசியதாகவும், மலையகத்தில் தமது தொழிற்சங்கம் மட்டும் சந்தா அறவீடு செய்யவில்லை எனவும் ஏனைய மலையக பிரதிநிதிகளும் சந்தா அறவீடு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தா அறவீடு செய்வது தவறில்லை அவ்வாறு சந்தாவை வாங்கிக்கொண்டு மக்களின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்காமையே தவறு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் ஸ்டென்ட் தோட்டத்தில் தொழிலாளர்கள் பிரச்சினையை எதிர்நோக்கிய போது தமது தொழிற்சங்கமே நேரில் சென்று பிரச்சினைக்கு தீர்வு வழங்கியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

50க்கும் மேற்பட்ட தொழில் வழக்குகள் பேசப்பட்டு வருவதாகவும், 48 காரியாலயங்கள் இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் முதலாவதாக இலங்கையை தாக்கிய சந்தர்ப்பத்தில் சந்தாவை நிறுத்தியதாகவும் அதன் பின்னரே ஏனைய தொழிற்சங்கங்கள் நிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தாவை நிறுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் கட்டாயமாக சந்தாவை நிறுத்த முடியும் என நம்புவதாகவும் ஜீவன் தொண்டமான் அவையில் கருத்து வெளியிட்டுள்ளார்.