பண்டிதர் விடுதலைப்புலிகளின் சீருடையில் இல்லை! தாய் நினைவேந்தும் போது அருகிலேயே நின்றேன்:சுமந்திரன்

Report Print Banu in அரசியல்

அமைச்சர் சரத் வீரசேகர போன்றவர்களின் இனவாதப் பிரசாரத்தால் நாடு பிழையாக வழிநடத்தப்படும். மாவீரர் நினைவேந்தல் விடயத்தில் அவருக்கு பதில் தர வேண்டிய கடப்பாடு எதுவும் எனக்குக் கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியுள்ளார்.

சுமந்திரனுக்கு எதிராக அமைச்சர் சரத் வீரசேகர முன்வைத்த ஆட்சேபனைக்கு நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் பதிலளிக்கையிலே சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு இந்த விடயத்தில் பதில் தர வேண்டிய கடப்பாடு ஏதும் எனக்குக் கிடையாது. எனினும் இவ்விடயத்தில் என் பெயர் பகிரங்கமாக பிரஸ்தாபிக்கப்பட்டமையால் நான் பதில் தருகின்றேன்.

1985ஆம் ஆண்டில் உயிரிழந்த பண்டிதர் என்பவரின் 83 வயதுத் தாயான சின்னத்துரை மகேஸ்வரி என்ற வயோதிப பெண்ணுக்காக சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகினேன். அவர் ஒவ்வொரு வருடத்திலும் நவம்பர் மாதத்தில் தனது மகனுக்கு நினைவஞ்சலி செய்வது வழமை.

அவரின் மகன் விடுதலைப் புலிகளின் ஒரு தலைவர் தான். ஆனாலும் அந்த வயோதிபத் தாயைப் பொறுத்தவரை அவர் அந்தத் தாயின் மகன் தான். ஒவ்வொரு தாய்க்கும் தனது பிள்ளைகளை நினைவேந்த உரிமையுண்டு.

ஜே.வி.பி கட்சியினர் தமது கட்சித் தலைவரான றோஹண விஜயவீரவின் உருவப்படங்கள், சித்திரங்களை கொழும்பு வீதிகளில் அலங்கரித்து நினைவு கூருவது குறித்து, இந்த அமைச்சர் ஒரு கேள்வி தானும் எழுப்பவில்லை.

அதனால் தான் உயிரிழந்தவர்களை நினைவேந்துவதில் கூட இந்த நாட்டில் தமிழர்கள் பாகுபாடு காட்டப்படுகின்றார்கள், ஒதுக்கப்படுகின்றார்கள் என்று நான் இந்தச் சபையில் கூறினேன். அத்தகைய கீழ்த் தர நடத்தையைக் கொண்ட இந்த அமைச்சர் தான், அந்தத் தாய் தனது மகனை நினைவேந்தல் செய்தபோது நான் அவருடன் கூடவே நின்றமையை இங்கு கேள்விக்கு உட்படுத்துகின்றார்.

அந்த தாய் தனிப்பட்ட முறையில் தனது மகனுக்கு நினைவேந்தல் செய்யும் முழு உரிமையும் உண்டு என்று முதல் நாள் தான் மேல் நீதிமன்றம் தனது உத்தரவில் விசேடமாகக் குறிப்பிட்டிருந்தது.

அந்த நினைவேந்தலைத்தான் அத்தாய் தனது வீட்டில், அது வீடு என்றும் கூறமுடியாது ஒரு கொட்டில் அவ்வளவு தான், அதில் மேற்கொண்டார். நான் அவருடன் கூட இருந்தேன்.

இந்த நினைவேந்தல் நிகழ்வு பொது இடங்களில் செய்யப்பட முடியாது. தனித்து வீட்டில் செய்யலாம் என்பதை அந்தத் தாய்க்கு விளங்கப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட நீதிபதி என்னிடம் விசேடமாக கோரியிருந்தார்.

அந்த நிகழ்விலேயே நான் பங்குபற்றினேன். அது தனிப்பட்ட நிகழ்வு. அந்த நிகழ்வுப் படங்களைப் பாருங்கள். அவரின் மகன் சீருடையில் கூட இருக்கவில்லை. இது ஒரு மகனுக்காக தாய் ஆற்றிய நினைவேந்தல் நிகழ்வு.

அவருக்காக நான் முதல் நாள் மன்றில் முன்னிலையாகியிருந்தேன். அந்த நிகழ்வை தனிப்பட்ட முறையில் வீட்டில் அவர் நடத்தலாம் என்பதை அவருக்கு விளங்கப்படுத்துமாறு நீதிமன்றமே என்னை விசேடமாகக் கோரியிருந்தது.

இதனை சர்ச்சைக்குரிய விடயமாக நிலையில் கட்டளையின் கீழ் இங்கு எழுப்ப முடியாது. என்றாலும் கீழ்தரமான முறையில் அமைச்சர் அதனை முன்னெடுப்பது முற்றிலும் தவறு என்று கூறியுள்ளார்.