வாழைச்சேனை பிரதேசசபையின் வரவு செலவுத் திட்டப் பிரேரணை கூட்டம் நடத்தப்படாமையால் உறுப்பினர்கள் அதிருப்தி

Report Print Navoj in அரசியல்
24Shares

வாழைச்சேனை பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப் பிரேரணை கூட்டத்தினை கூட்டுமாறு உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்தும் இதுவரை நிர்வாக ரீதியாக எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இதன் பின்னால் அரசியல் செயற்பாடு உள்ளதா என்ற கேள்வி தங்கள் மத்தியில் எழுந்துள்ளதாகச் சபையின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை பிரதேச சபையின் வரவு செலவு திட்டப் பிரேரணை கூட்டத்திற்காக இன்று சபைக்கு வருகை தந்த சபை உறுப்பினர்கள் பிரேரணை கூட்டத்தினை நடத்தாமை காரணமாகச் சபை முன்பாக ஒன்றிணைந்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது சபை உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கையில்,

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு நாளை உயிரோடு இருக்க முடியுமா என்ற அச்ச உணர்வு ஏற்படுகின்றது. எங்களது உறுப்பினர்களை அச்சுறுத்துகின்றார்கள்.

அத்தோடு இங்கு பொலிஸாரை குவித்து எங்களை அச்சுறுத்துவதாகப் பிரதேசசபை உறுப்பினர் கி.சேயோன் தெரிவித்தார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், 23 சபை உறுப்பினர்களை வைத்து பிரேரணையை நடத்தத் துணிவில்லாமல் அச்சம் கொள்கின்ற தவிசாளர் இராஜினாமா செய்து விட்டுச் செல்ல வேண்டும்.

முறைகேடான தன்மை, உறுப்பினர்கள் மற்றும் மக்களை மதிக்காத தன்மை கடந்த காலங்களில் நடைபெற்று வருகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையில் இயங்கும் தவிசாளரினால் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

மக்கள் சேவைக்கு இங்கு தவிசாளரும், செயலாளரும் இல்லை. இவ்வாறு இருவரும் ஓடி ஒழிவதற்காகவா பிரதேச சபையின் நடவடிக்கை இருக்கின்றது என்று மக்கள் கேட்கின்றனர் எனச் சபை உறுப்பினர் கி.சேயோன் மேலும் தெரிவித்துள்ளார்.

“தவிசாளர் சபையில் இல்லாமல் ஓடி ஒளிகின்றார். இது திருடன் பொலிஸ் விளையாட்டு போன்று உள்ளது. மக்களே விளங்கிக் கொள்ளுங்கள் இதில் யார் திருடன் யார் பொலிஸ்” என்று எனத் தமிழ்த் தேசிய முன்னணியின் சபை உறுப்பினர் கே.குணசேகரன் தெரிவித்துள்ளார்.

சபையின் சொத்துக்களை எவ்வாறு களவாடலாம் என்று களவாடும் அணியுடன் சேர்ந்து சபையினை களங்கப்படுத்தி, வரவு செலவுத் திட்டத்தினை கொண்டு செல்ல முடியாமல் தவிசாளர் ஓடியுள்ளார்.

மக்கள் நலன்களையும் தூக்கி குப்பையில் எறிந்துள்ளார். சபை உறுப்பினர்கள் இங்கு வந்த சமயத்தில் புலானாய்வினர் மற்றும் பொலிஸாரை கொண்டு எங்களுக்கு அச்ச நிலையை ஏற்படுத்துகின்றார்.

சபைக்குட்பட்ட பகுதியில் குத்தகையினை மேற்கொண்ட பிள்ளையானின் ஆதரவாளர்கள், உறவினர்கள் சபைக்கு அதிகமான நிதியைச் செலுத்த வேண்டி உள்ளது.

இவை மிகவிரைவில் வெளிவரும். சபையில் பல இலட்சக்கணக்கில் குத்தகை ஊழல் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் சகாக்களும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் என்பதாலும், இன்றும் இதற்கு நடவடிக்கை இல்லை ஏனெனில் இவர்கள் சிறிய முதலை அவர் பெரிய முதலை.

இந்த சபையின் தொடர்ச்சியான ஊழல் இடம்பெற்று வருகின்றது எனத் தமிழ்த் தேசிய முன்னணியின் சபை உறுப்பினர் கே.குணசேகரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை வெற்றி பெற வைப்பதற்குத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) சகோதரர் அகிலா பதினைந்து உறுப்பினர்களைத் துரத்தி அச்சுறுத்தல் செய்துள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சபை உறுப்பினர் இப்றாஹிம் அஸ்மி தெரிவித்தார்.

ஆதரவு வழங்கும் பட்சத்தில் பணம் வழங்குவதாகவும், வேலைவாய்ப்பு வழங்குவதாகவும், அபிவிருத்திகள் செய்து தருவதாகவும் எமது உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து பல பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றார். இதனை நிரூபிக்க வேண்டுமானால் சில பகுதியில் வீதிகள் அவசரமாக எந்த அனுமதியும் இல்லாமல் தங்களது நெருங்கியவருடன் இணைந்து புனரமைக்கப்பட்டுள்ளது.

சபை உறுப்பினர்களின் அனுமதியைப் பெறாமல் தவிசாளர் பணத்தை செலவு செய்துள்ளார். இவர் சபையில் ஊழல்களைச் செய்துள்ளார் என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த ஊழலை ஒழிக்கத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகின்றேன் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சபை உறுப்பினர் இப்றாஹிம் அஸ்மி மேலும் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஓட்டமாவடி பிரதேச சபையின் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் தன்னை மிரட்டியதாக ஐக்கிய தேசிய கட்சியின் சபை உறுப்பினர் எம்.எல்.நபீரா குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டப் பிரேரணைக்கு வருமாறு கடிதம் வழங்கப்பட்ட நிலையில் இன்று சபைக்கு வந்த சமயத்தில் குறித்த உத்தியோகத்தர் எதற்காக இங்கு வந்துள்ளாய், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று என்னை மிரட்டிச் சென்றுள்ளார்.

அத்தோடு கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது என்று எனக்கு இதுவரை தகவல் வழங்கப்படவில்லை என்றும் சபை உறுப்பினர் எம்.எல்.நபீரா மேலும் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப் பிரேரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கூட்டத்தினை கூட்டுமாறு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு நேற்று மகஜர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று சபை உறுப்பினர்கள் தொலைபேசியூடாக நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

இதன்போது தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட மகஜரின் பிரகாரம் பிரேரணை ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் விளக்கம் வழங்குமாறும், ஒத்திவைக்கப்பட்டு 14 நாட்களுக்குள் மீளவும் சபை கூட்டப்பட வேண்டும் என்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.மணிவண்ணன் தெரிவித்ததை தொடர்ந்து சபை உறுப்பினர்கள் கலைந்து சென்றதுடன், இதில் தங்களுக்கு இன்னும் திருப்தி இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.