கோட்டாபயவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சதித்திட்டமே மஹர சிறைச்சாலை மோதல் - விமல்

Report Print Rakesh in அரசியல்
72Shares

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சர்வதேச ரீதியில் அவமதிப்பை ஏற்படுத்த ஒழுங்கமைக்கப்பட்ட சதி நடவடிக்கையே மஹர சிறைச்சாலை கலவரம் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா நோயாளிகளின் நெரிசலின் விளைவாக இந்தச் சம்பவம் நடக்கவில்லை. சதுரங்க உள்ளிட்ட குழுவினர் அங்குள்ள கைதிகளுக்குப் போதை மாத்திரைகளை விநியோகித்துள்ளனர்.

இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது ஒருவரின் இரத்தத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இந்தப் பரிசோதனையை இருவருக்குச் செய்த பின்னர், வெலிக்கடை சிறைச்சாலையில் முடிந்தவரை மாத்திரையை விநியோகிக்கவும், ஒரு கொலைகார சூழ்நிலையை உருவாக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த கைதிகளால் சதுரங்க வழிநடத்தப்பட்டுள்ளார். புலனாய்வுப் பிரிவினர் இதைப் பற்றி அறிந்து கொண்டு சதுரங்க என்ற இந்தக் கைதியை வேறு சிறைக்கு மாற்றினர்.

இதில் சம்பந்தப்பட்ட ஒரு சில கைதிகளையும் மாற்றினர். இதனால் வெலிக்கடை சிறைச்சாலையில் இந்தச் சூழ்நிலையை உருவாக்க முடியவில்லை.

ஆனால், துரதிஷ்டவசமாக, மஹர சிறைச்சாலையில் இந்தத் திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இது நெரிசலால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்டது எனக் கருத முடியாது. அப்படி நினைப்பது இலகுவானது. இதனை நான் அறிந்ததால் இங்கு கூறுகின்றேன்.

இது திட்டமிட்ட செயல். கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது சிறையில் கொலைகள் நடந்தன. அவர் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் இப்படியான சம்பவம் நடந்துள்ளது எனச் சித்தரிக்கவும் இது நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் ஜனாதிபதிக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதே இதில் இருக்கும் உண்மையான கதை என குறிப்பிட்டுள்ளார்.