தமிழ் மக்கள் மீண்டும் உளரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்! நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

Report Print Ajith Ajith in அரசியல்

தமிழ் மக்கள் மீண்டும் உளரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

மாவீரர் தின அனுஷ்டிப்புக்கு தடை விதித்த செயல் மற்றும் கார்த்திகை தீபங்களை ஏற்றியவர்களை அச்சுறுத்தியமை போன்ற விடயங்கள் ஊடாக இந்த உளரீதியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் 27ம் திகதி வரையான காலப்பகுதி தமிழர்களின் விடுதலைக்காக, உரிமைக்காக தமது உயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூருகின்ற ஒரு புனிதமான காலப்பகுதியாகும்.

எனினும் இலங்கை அரசாங்கம் காவல்துறையினரையும்,உளவுத்துறையினரையும்,இராணுவத்தினரையும் பயன்படுத்தி கருவிகளாக நீதிமன்றங்களை மாற்றி தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை மறுத்தது.

அதேபோன்று கார்த்திகை தீபங்களை ஏற்றியவர்களுக்கு எதிராகவும் அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், மனதளவில் எவ்வளவு வேதனையில் இருப்பார்கள்என்பதை கூறவேண்டியதில்லை.

எனினும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்துகின்ற செயற்பாடுகள் இதுவரை எந்த அரசாங்கத்தினாலும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் உயிர் தியாகம் செய்த உறவுகளை நினைவு கூர்வது என்பது அவர்களது மனதை ஓரளவேனும் ஆறுதல்படுத்தும் என்ற மருத்துவ தன்மையில் யோசித்தாலும் கூட நினைவேந்தலை அனுமதித்திருக்கலாம் மாறாக, இலட்சக்கணக்காக மக்களை வீடுகளுக்குள் 7 நாட்கள் சிறைப்பிடித்த நிலைமை போன்ற நிலை உருவாக்கப்பட்டு உளரீதியான தாக்குதலுக்கு தமிழ் மக்கள்உள்ளாக்கப்பட்டார்கள் என்று செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.