தமிழ் தேசிய ஐக்கியமும் அதற்கான ஜனநாயக முறைமையின் அவசியமும்

Report Print Dias Dias in அரசியல்
185Shares

இப்போது ஈழத் தமிழ் மக்களுக்கு உடனடியாக அவசியப்படுவது ஐக்கியம் என்பதாகும். தற்போது தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்று கேட்டால் அது தமிழ் மக்களை ஐக்கியபடுவதுதான் என்பதாகும். எல்லா வகையிலும் ஐக்கியமே தமிழ் மக்களுடைய தேசியம் ஆகும் என தொல்லியற்துறை மாணவன் திபாக்கரன் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அக் கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இன்று ஈழத் தமிழர் அரசியலில் உள்நாடு, அண்டைநாடு, இந்து மாகடல் பிராந்தியம், புவிசார் நிலை, பூகோள அரசியல் என்னும் ஐந்தும் மிகவும் கடினமான கொதிநிலை கொண்ட கொடுபிடி போட்டிக்குள் அகப்பட்டுள்ளது.

ஈழத் தமிழரின் நீண்டகால போராட்டத்தில் தாயகத்துடன் இணைந்திருக்கும் மூன்று வகையான புவிசார் அரசியல் யதார்த்தங்களும் ஒரு நூற்றாண்டு காலமாய் தமிழ்த் தலைமைகளால் பொதுவாக கருத்தில் கொள்ளப்படவில்லை.

தற்போதைய ஒற்றை மைய உலக அரசியலின் கீழ் தோன்றியுள்ள இரட்டை முனைச் சூழலில் இவை இரண்டுக்கும் இடையே இசைந்து எமக்கு பொருத்தமான ஒரு புவிசார் அரசியல் கண்ணோட்டத்துடன் தமிழ்த் தேசியத்தை வடிவமைக்க வேண்டும்.

இன்று தமிழர் தரப்பில் ஜனநாயகம் இன்மையோ, ஜனநாயக விரோத அரசியல்ச் செயற்பாடுகளோ ஐக்கியப்படுத்தலுக்கான பெருந்தடையாகும். ஐக்கிய படுத்தல் எனப்படுவது மக்களை ஐக்கியப்படுத்துவது, பிரதேசங்களை ஐக்கியபடுத்துவது, சமூகங்களை ஐக்கியப்படுத்து என்பனவேயாகும். இந்த ஐக்கியம் என்ற இலட்சியத்தை அடைவதற்கான வழி தேசிய ஜனநாயகமாகும். இந்த ஜனநாயகம் நிலைக்க வேண்டுமெனில் ‘‘ஜனநாயக முறைமை‘‘ பேணப்பட வேண்டும்.

இந்த ஜனநாயக முறைமை என்பது புள்ளடி போட்டுத் தலை எண்ணும் எண்ணிக்கை கணக்கெடுப்பு முறை அல்ல . .மாறாக ஜனநாயகத்தை நிலைநாட்டவல்ல அடிப்படை தர்ம நெறிமுறைகளை கடைப்பிடிக்கும் பண்பு, மரபு ஒழுக்கமாகும். இந்தப் பண்பு ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதுவே தற்போது தமிழ் அரசியல் தரப்புக்கு அத்தியாவசியமான உடனடித் தேவையாகும். இந்த ஜனநாயக முறைமையை தமிழ் அரசியல் பரப்பில் பிரதிட்டை செய்யாமல் தமிழர் அரசியலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியாது.

தோல்விகளுக்கு பொறுப்பேற்று பதவி விலகுவது , வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறின் பதவி விலகுவது அல்லது வெளியேறுவது, இரண்டு முறை தொடர்ந்து தோல்வி ஏற்படும் பட்சத்தில் மறுபடியும் கட்சியூடாக போட்டியிடுவதை தவிர்ப்பது, தடுப்பதும், பெண்களுக்கான பிரதிநிதித்துவ முக்கியத்துவத்தை வழங்குவது, இளைஞர்களுக்கான பங்கினை வழங்குவது, குடும்ப ஆதிக்கங்கள், சமூக, சாதி, சமய ஆதிக்கங்களை அகற்றுவதும் தவிப்பதும், மற்றவர்களும் அதிகாரங்களில் பங்கெடுக்க விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்வது என அரசியலில் உயர் தர்ம நெறிகளையும், சீரிய பழக்க வழக்கங்களையும், மரபுகளையும் பின்பற்றுவதையே ஜனநாயக முறைமை என்கிறோம்.

ஈழத் தமிழர் தரப்பின் அரசியலில் ஜனநாயகத்தையும் தேசியத்தையும் பாதுகாக்க வேண்டுமெனில் எந்த கட்சிகளோ, அமைப்புக்களோ பொதுத் தீர்மானங்களை எடுப்பதாயினும் கண்டிப்பாக அது இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஏகமனதாகத் தீர்மானம் எடுத்தல் என்ற அடிப்படையில் தலைவர்களுக்கும் செல்வாக்கு மிக்கவர்களுக்கும் பயந்து அல்லது கீழ்ப்பட்டு அடங்கி ஏகமனதாக என்ற தீர்மானத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் பொய்யான ஜனநாயகம் என்ற மாயை தமிழர் மத்தியில் வலுவாக வேரூன்றி இருப்பதனால் அதனை வேர் அறுப்பதற்கு இரகசிய வாக்கெடுப்பு முறை அவசியமாகிறது.

ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு இன்றைய சூழலில் அவர்களுக்கு ஒரு ஜனநாயக ஐக்கிய முன்னணியோ அல்லது தமிழ்த் தேசிய அதியுயர் பேரவை ஒன்றோ உடனடியாகத் தேவை. அத்தகைய ஒரு ஜனநாயக ஐக்கிய முன்னணி இல்லையேல் தமிழ் தேசியத்தை நிலை நிறுத்த முடியாது. தமிழ் தேசியத்தை நிலை நிறுத்துவதற்கும் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கும் உயரிய ஜனநாய விழுமியங்கள் தமிழ் அரசியல் தலைவர்களிடையே பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

ஜனநாயகம், ஐக்கியம், தமிழ்த்தேசிய அதியுயர் பேரவை இம்மூன்றுமே இன்றைய நிலையில் தமிழ் தேசியத்தை நிலை நிறுத்துவதற்கான அடித்தளங்கள் ஆகும்.

தமிழ் மக்கள் இன்று இருக்கின்ற இக்கட்டான நிலைமையில் அவர்கள் மத்தியில் இருக்கின்ற 10 கட்சிகளும் பல்வேறு திசையில் பயணித்து பயனற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தமிழ் கட்சிகள் தங்களுக்குள்ளேயே தாமே பலமாக இருக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டாலும் மொத்தத்தில் யாவரும் தோல்வி அடைந்தவர்களே என்ற வகையில் இவர்கள் தங்களுக்குள் ஒரு பலமான ஐக்கிய முன்னணியை உருவாக்குவது அத்தியாவசியமானது.

இன்று இருக்கின்ற இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கொதிநிலை இத்தகைய ஒரு அணியின் தேவையை வேண்டி நிற்கின்றது . எனவே அனைத்துக் கட்சிகளினதும், அனைத்து சமூகப் பிரதிநிதிகளுமென யாவரும் இணைந்து ஒரு பலமான அறிவுசார் அங்கத்தவர்களைக் கொண்ட ஐக்கிய முன்னணியையோ அல்லது அதையொத்த வகையான ஒரு தமிழ் தேசிய உயர் பேரவை ஒன்றையோ உடனடியாக நிறுவவேண்டும்.

இந்த அமைப்பின் ஊடாக ஒரு பரந்த வரலாற்று அறிவு, தத்துவ விசாரணை, அரசியல் கோட்பாடுகள், இராஜதந்திரம், ஆளுமை ஆய்வு, கொள்கை வகுப்பு, தீர்மானம் எடுத்தல், தொழில்நுட்பம், வரலாறு பண்பாட்டு வேறுபாடுகள், தேசியவாதம், சர்வதேசவாதம், பூகோளவாதம், புவிசார் அரசியல், வர்த்தக வளர்ச்சி, பொருளாதாரம்,சுற்றுச் சூழல் சார்ந்த அறிவியல், பாதுகாப்புக் கொள்கை, சமுத்திரம்சார் அரசியல் போன்ற துறைசார் வல்லுனர்களின் கூட்டிணைவுடன் இன்றைய சர்வதேச அரசியலில் நடைமுறைச் சாத்தியமான கொள்கைகளையும் தேசிய நிர்மாணம் பற்றிய செயற்பாட்டையும் முன்னெடுக்க வேண்டும்.

தமிழர் சார்ந்த அனைத்து வகையான முடிவுகளும் எடுக்க கூடிய வகையில் ஜனநாயக முறைமைக்கூடான அரசியல் செயலணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

வரலாறு ஒருபோதும் நமக்காக காத்திருக்கப் போவதில்லை. வரலாற்று போக்கும் அதன் செல்வாழிக்கும் ஏற்றவாறு நம்மை நாமே தயார்படுத்தி அடுத்துவரும் காலத்தில் இலங்கைத்தீவில் ஏற்படப் போகும் அரசியல் மாறுதலுக்கேற்ப இப்போதே தயார்ப்படுத்தி செயற்படவேண்டிய பொறுப்பு தமிழ்த் தலைவர்களைச் சார்ந்ததாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.