சரத் வீரசேகர நாடாளுமன்றில் இருக்க தகுதியற்றவர் என்பதையே அவரின் பேச்சு காட்டுகின்றது! மாவை தக்க பதிலடி

Report Print Murali Murali in அரசியல்
368Shares

தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாதொழிக்க வேண்டும் என்ற அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்து மிகமோசமான சர்வாதிகார, இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடாகும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு இறுமாப்புடன் பேசுவது அவர் நாடாளுமன்றத்தில் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்பதையே வெளிப்படுத்துகிறது என்றும் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

சரத் வீரசேகரவின் கருத்து மிகமோசமான சர்வாதிகார, இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடாகும். அவர் உலக வரலாற்றை அறியாமல் பேசுகின்றார்.

உலகநாடுகள் பலவற்றிலும் விடுதலைக்காகவும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகவும் இத்தகைய போராட்டங்கள் நடத்தப்பட்டிருப்பதுடன் அவற்றில் பல போராட்டங்கள் வெற்றியும் கண்டிருக்கின்றன.

இலங்கையில் தமிழினத்தின் உரிமைகளைப் பறித்து இராணுவத்தின் ஊடாக அவர்களை அடக்கியொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசாங்கத்தினால் தமிழர்களின் அமைதிவழிப்போராட்டங்கள் அடக்கப்பட்டமையினாலேயே விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப்போராடுகின்ற ஒரு மாபெரும் சக்தியாக இந்நாட்டில் வளர்ந்தார்கள்.

எனவே தமிழ்மக்களின் விடுதலை உணர்வினையும் கொள்கையினையும் சரத் வீரசேகரவினாலும் வேறு எந்தவொரு அரசாங்கங்களினாலும் அழித்துவிடமுடியாது.

தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டிருக்கும் சரத் வீரசேகர, விடுதலைப்புலிகளை அழித்ததைப்போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாதொழிக்க வேண்டும் என்று இறுமாப்புடன் பேசுவது அவர் நாடாளுமன்றத்தில் இருப்பதற்கு தகுதியற்றவர் என்பதையே வெளிப்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக நாடாளுமன்றில் நேற்று பேசிய அமைச்சர சரத் வீரசேகர, உலகின் மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த போது அவர்களின் அரசியல் சக்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென கூறியிருந்தார்.

அவ்வாறு தடை செய்யாத காரணத்தினால் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவிணைவாத கருத்துக்களை நாடாளுமன்றில் முன்வைப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

அமைச்சரின் இந்த கருத்திற்கு எதிர்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.