புதிதாக மையம் கொள்கின்ற இந்து மாகடல் - பசிபிக் அரசியற் சூறாவளியும்: ஈழத் தமிழரின் எதிர்காலமும்

Report Print Dias Dias in அரசியல்
364Shares

அமெரிக்காவின் ‘‘இந்தோ - பசுபிக் பிராந்திய" அரசியல் புவியியல் நலனும், இந்தியாவினுடைய "புவிசார் அரசியல் (Geopolitics) நலனும்" இணைதிருக்கின்ற ஒரு சந்தியில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற கொரோனாவுக்கு பின்னான புதிய உலக ஒழுங்கின் முதல் காலடி எடுத்து வைப்பு அமைகிறது என தொல்லியற்துறை மாணவன் திபாகரன் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அக் கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இரண்டாம் உலகப் போர் எவ்வாறு இந்த உலகை ஒரு புதிய உலக ஒழுங்கான இரு துருவ உலக அரசியல் ஒழுங்காக மாற்றி அமைத்ததோ, அதிலிருந்து எவ்வாறு 1990ஆம் ஆண்டு புதிய ஒற்றை மைய உலக ஒழுங்கு உருவாக்கியதோ அந்த ஒற்றை மையத்தில் இருந்து இன்று இன்னொரு வடிவில் மீண்டும் ஒரு இரு துருவ உலக அரசியல் வடிவம் பெறத் தொடங்கியுள்ளது.

இன்று இந்த இந்த புதிய இரு துருவத்தினரின் பனிப்போர் போக்கானது இதுவரை நிலவிவந்த ஒற்றை மைய உலக அரசியலை முடிவுக்கு கொண்டுவர வல்லதாய்க் காணப்படுகின்றது.

இன்றைய இந்த உலக அரசியலை கொரோனா என்கின்ற கொடிய உயிர்க்கொல்லி மாற்றி அமைத்திருக்கிறது. புதிய அரசியல் ஒழுங்கானது ஒற்றை மைய அரசியலில் இருந்து மாறுபட்டு இருதுருவ அல்லது பல்துருவ அரசியல்போக்கை ஸ்தாபிதம் செய்ய போகின்றது.

கொரோனாவுக்குப் பின்னான உலக ஒழுங்கு என்பது இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் மையத்தில் குறிப்பாக இந்தியாவின் புவிசார் அரசியலில் அமெரிக்காவின் இந்தோ- பசுபிக் சார்ந்த அரசியல் புவியியல் ( Political Geography) நலனிலும் இருந்துதான் ஆரம்பமாகப் போவதற்கான அரசியல் சூழல் எழுந்திருக்கிறது.

இந்து சமுத்திரப் பிராந்திய அரசியல் என்பது உலக அரசுகளின் அரசியல் , பொருளியல் , இராணுவ நலன்களையும் அதிகார வளர்ச்சியையும் தீர்மானிக்கும் ஒரு பிராந்தியம் ஆகும்.

உலகளாவிய வர்த்தகத்தின் மையமாகவும் மேற்கு - கிழக்கு போக்குவரத்தும் இந்து சமுத்திரத்தின் உள்ளேயே நிகழ்கிறது. எனவே உலகளாவிய அனைத்து வகையான போக்குகளுக்கும் இந்து சமுத்திரம் உட்பட்டதாகவே காணப்படுகிறது.

இத்தகைய இந்து சமுத்திரம் காலனி ஆதிக்க காலத்தில், அது முற்று முழுதாக பிரித்தானியாவின் கைகளிலேயே இருந்தது.

இரண்டாம் உலகப்போரின் பின்னர் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஆளுகை அமெரிக்க தலைமையிரான மேற்குலகிடமும், சோவியத் யூனியன் தலைமையிலான சோசலிச நாடுகளின் சார்பு நாடுகளின் கைகளிலும் பிரிக்கப்பட்டிருந்தது.

1970ஆம் ஆண்டின் பின் சோவியத் யூனியனுன் இந்தியா கை கோர்க்கத் தொடங்கியது.

பங்களாதேஷ் பிரிவினையை தொடர்ந்த அன்றைய இருதுருவ அரசியலில் இலங்கையை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு சோவியத் சார்ந்து இந்தியாவும் அதேவேளையில் நேரடியாக மேற்குலகம் சார்ந்து அமெரிக்காவும் போட்டி போட்டன.

இதனால் இலங்கை இவர்களிடையேயான ஒரு ஆடுகளமாக மாறி இருந்தது. அதன் வெளிப்பாடுதான் பனிப்போர் முடிவின் இறுதிக்காலப் பகுதியில் இலங்கையை தன்னுடைய ஆளுகைக்கு கீழ் கொண்டு வருவதற்கான இந்தியாவின் முயற்சியாகவே 1987ஆம் உருவான இலங்கை - இந்திய ஒப்பந்தமும், இலங்கைக்கான இந்திய இராணுவ வருகையும் அமைந்திருந்தன.

பனிப் போரின் முடிவில் சோவியத்படை ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறியது; இந்தியப்படையும் இலங்கையை விட்டு வெளியேறியது.

பனி போர்க் காலத்தில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நாடான இந்தியா, சோவியத் ரஷ்யாவுக்கு ஆதரவான நட்பு நாடாக மாறி இருந்தது. அதே நேரத்தில் அமெரிக்கா இந்தியா எதிர்ப்பு நாடாக காட்சியளித்தது. சமநேரத்தில் அமெரிக்கச் சார்பு நாடாக சீனா வலம் வந்தது.

பனிப் போர் முடிவின் பின்னர் உலக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் வினோதமான மாற்றங்களை ஏற்படுத்தின. இவ்வளவு காலமும் அமெரிக்க எதிர்ப்பு நாடாக இருந்து வந்த இந்தியா பின்பு அமெரிக்க சார்பாக மாறிவிட்டது. அதே நேரத்தில் அமெரிக்க சார்பு நாடாக இருந்த சீனா அமெரிக்க எதிர்ப்பு அணியில் இடம் பெறத் தொடங்கிவிட்டது.

1980களில் இலங்கையின் அரசியலில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியானது இலங்கை அரசியலில் இந்தியா தலையிடுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தியது. அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் அமெரிக்கா உருவாக்கிய "அமெரிக்க குரல்" என்ற வானொலிக்கான ஒளிபரப்பு கோபுரம் புத்தளத்தில் அமைக்கப்படுவதை இந்தியா மிக வலுவாக எதிர்த்தது.

தன்னை அமெரிக்கா வேவு பார்ப்பதாக அன்றைய காலத்தில் இந்தியா கடுமையாக குற்றம் சாட்டியது. திருகோணமலைத் துறைமுகத்தை பயன்படுத்த அமெரிக்கா முனைந்தது.

இந்த போட்டோ போட்டிகளின் விளைவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பயன்படுத்தி இலங்கைக்குள் இந்தியா நுழைய வழிசமைத்தது. ஏககாலத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் இந்து சமுத்திரத்தையும் பங்கு போடப் போட்டியிட்டனர்.

ஆனால் 40 ஆண்டுகள் கடந்தும் அன்றைய புவிசார் அரசியல் போட்டி போலவே இன்றைய காலகட்டத்திலும் புவிசார் அரசியலிலும் இந்து சமுத்திரத்தின் மீதான ஆளுகை போட்டியும் ஆட்டக்காரர்களிடையேயான ஆள் வேறுபாடுகளுடன் ஆனால் இருதுருவ நிலை அப்படியே இருக்கிறது.

இன்று இந்து சமுத்திரத்திற்கான போட்டியில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு அணியில் நிற்கின்றன. ஆனால் புதிதாக இந்து சமுத்திர நாடல்லாத சீனா இன்று இந்து சமுத்திர நாடாக தன்னை அரசியல் புவியியல் மாற்றமொன்றுக் கூடாக இந்து சமுத்திர நாடாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கூடவே இந்து சமுத்திரத்தை பங்குபோடும் நாடாகவும் சீனா இருக்கிறது. பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தையும் , பர்மாவின் கொக்கோ தீவையும் நீண்டகால குத்தகைக்கு பெற்றதன் மூலம் இவ்விரண்டு துறைமுகங்களையும் தரைவழிப்பாதை ஊடாகவும் நிலக்கீழ் குழாய் வழியாகவும் சீனா தன் நிலப்பரப்புடன் இணைத்ததன் மூலம் இரு பக்கங்களாலும் சீனா இந்து சமுத்திரத்துள் பிரவேசித்துவிட்டது.

அவ்வாறே இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 ஆண்டு கால குத்தகைக்கு பெற்றதன் மூலம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் குறிப்பாக தென்னாசியப் பிராந்தியத்தில் மூன்று முக்கிய கேந்திர புள்ளிகளில் தன்னை நிலைநிறுத்தி இந்தியாவை முற்றுகையிட்டிருக்கின்றது.

குவதார் துறைமுகம், கோகோ தீவு, இலங்கையில் அம்பாந்தோட்டை ஆகிய முக்கிய மூன்று துறைமுகப் புள்ளிகளுக் கூடாது குறிப்பாக தென் ஆசியாவிலும் பொதுவாக இந்து சமுத்திரத்திலும் சீனா தலையெடுப்பதை இந்தியாவால் ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது.

சீன - பாகிஸ்தானிய உறவு பெரிதும் வலுவடைந்திருப்பதுவும் அதனால் சீனாவின் இராணுவ சமநிலை மேலும் கையோங்குவதையும் இந்தியா ஒருபோதுசகித்துக் கொள்ளாது.

சீனாவின் "One belt one road" திட்டத்தின் வாயிலாக புவியியல், அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியாக சீனாவுடன் மத்திய கிழக்கு, தென்னாசிய, ஆப்பிரிக்க, மத்திய ஆசிய நாடுகள் என்பனவற்றை உள்ளடக்கிய அனைத்து இஸ்லாமிய நாடுகளும் சீனாவுடன் நெருக்கமாக கைகோர்த்திருக்கின்றன.

தென்னாசியாவில் இந்தியா மட்டுமே சீனாவிற்கு முரணானது. ஆனால் இந்தியாவைச் சுற்றியிருக்கக்கூடிய இஸ்லாமிய மற்றும் பௌத்த மேலாண்மை கொண்ட இலங்கை, பர்மா போன்ற நாடுகள் சீனாவிற்கு வாய்ப்பானவையாக இருப்பதனால் இந்தியாவை கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை சீனாவிற்குண்டு. இன்நிலையில் அமெரிக்காவும் இதனை சகிக்க மாட்டாது. இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் கொள்கை எதுவோ அதுவே அமெரிக்காவின் கொள்கையாகவும் அமையும்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புதிய அரசியல் ஒழுங்கை தீர்மானிக்கும் முதல் கட்டமாக கடந்த இரு மாதங்களில் சீனாவின் உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழு இலங்கை வந்ததது. அதனை அடுத்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார். கூடவே இந்திய உயர் அதிகாரிகள் இலங்கை வந்தமை என மூன்று பேரரசுகளும் இலங்கை நோக்கி வந்தமை என்பது சாதாரண விடயமல்ல. இந்த உயர் மட்ட பயணங்கள் இலங்கையை மையம் கொண்டுதான் எதிர்கால உலக ஒழுங்கு எழத் தொடங்கியுள்ளதை கட்டியம் கூறி நிற்க்கின்றன.

இவ்வாறு பிராந்திய நலன் மற்றும் உலகளாவிய நலன் சார்ந்த பரஸ்பர நலன்களின் அடிப்படையிலேயே நாடுகளிடையேயான உறவுகள் மலர்கின்றன.

இன்றைய இந்து சமுத்திரப் பிராந்திய கொதிநிலையில் ஒவ்வொரு நாடும் அவரவர் நலன்களை அடைவதற்கான கூட்டுக்களை அமைக்க முயல்வதுதான் அரசியல் ராஜதந்திரம். இன்று இருக்கின்ற இலங்கையை மையப்படுத்திய மேற்ப்படி புவிசார் அரசியலில் ஈழத் தமிழர்கள் தங்கள் நலனை பாதுகாத்து, தக்கவைக்கவும் அதே நேரத்தில் அண்டை நாட்டு நலன்களையும் உலகளாவிய ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களை இணைத்து சந்திக்கின்ற சந்திப்பில் அமையக்கூடிய எமக்கு சாதகமான வாய்ப்புக்களை சாதகமாகப் பயன்படுத்தக் கூடிய அரசியல் முடிவுகளை ஈழத் தமிழர்கள் எடுக்க வேண்டும்.

இந்த உலக அரசியல் சூறாவளிக்குள் ஈழத் தமிழர்கள் அடிபட்டு அழிந்து போகாமல் தம்மை பாதுகாப்பதற்கும் தமக்கான உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கும் தேவையான நிலைப்பாட்டையும் இராஜதந்திர வியூகங்களை வகுக்க வேண்டும். இல்லையேல் மேற் காணப்படும் பிராந்திய , உலகளாவிய சூறாவளியில் அகப்பட்டு ஈழத் தமிழ் இனம் இருந்த இடம் தெரியாமல் மூழ்கிவிடக்கூடிய ஆபத்து உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.