பிள்ளையான் விடுவிக்கப்பட்ட போதிலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை – சுமந்திரன்

Report Print Kamel Kamel in அரசியல்
215Shares

பிள்ளையான் விடுவிக்கப்பட்ட போதிலும் தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் நான்கரை ஆண்டுகள் பிணை வழங்கப்படாது தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எனவும் அவர் ஓர் அரசியல் கைதி எனவும் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றில் கூறியிருந்தார்.

நான்கரை ஆண்டுகளை பாரிய காலமாக கூறப்படும் நிலையில் மிக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே பிள்ளையான் கைது செய்யப்பட்டதாகவும், எனினும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக இதுவரையில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1983ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற பாரிய மனித படுகொலைகள் முதல் அண்மையில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் வரையில் எந்தவொரு சம்பவத்திற்கும் தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறைச்சாலையில் கைதியொருவர் கொல்லப்படுவது என்பது அரசாங்கம் பொறுப்பிலிருக்கும் போது இடம்பெறும் கொலையாக கருதப்பட வேண்டும் எனவும் அது தொடர்பில் நிச்சயமாக தண்டனை விதிக்கப்பட முடியும் என்ற போதிலும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானதாக அமைகின்றதா என்ற கேள்வி எழுவதாகவும் குறிப்பாக சிறுபான்மை மக்கள் தொடர்பிலான வழக்குகளில் இந்த நிலைமையை காண முடிகின்றது எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.