கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருப்பதால் தான் மலையகம் பாதுகாக்கப்படுகின்றது! மருதபாண்டி ராமேஷ்வரன்

Report Print Thirumal Thirumal in அரசியல்
19Shares

கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருப்பதால் தான் மலையகம் பாதுகாக்கப்படுகின்றதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

எனவே, அவ்வொப்பந்தம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இந்தியா அரசாங்கத்தால் வடக்கு, கிழக்குக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் 4 ஆயிரம் வீடுகளை மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான், இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, மலையகத்துக்கு பெற்றுக் கொடுத்தார்.

திட்டம் சிறப்பாக செய்யப்பட்டுவந்தது. ஆனால் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் சிலர் அத்திட்டத்தை தமக்கு ஏற்றவகையில் செய்தனர். உட்கட்டமைப்பு வசதிகள்கூட ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன. இலங்கை அரசாங்கம்தான் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தமாகும். தற்போது குறைகளை நிவர்த்தி செய்து பயனாளிகளுக்கு வீடுகளை முழுமையாக கையளிப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கான நடவடிக்கையை ஜீவன் தொண்டமான் முன்னெடுப்பார். அத்துடன் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் ஜனவரியில் ஆரம்பிக்கப்படும். எந்தவொரு திட்டத்தையும் நிறுத்தாமல் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

நல்லாட்சியின்போது தான் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றன. துமிந்த சில்வா போன்றவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் இருந்த கட்டத்துக்கு கூட பெயரை மாற்றுவதற்கு முயற்சித்தனர்.

அதேவேளை, கூட்டு ஒப்பந்தம் இருப்பதால்தான் மலையகம் காப்பாற்றப்படுகின்றது. அந்த ஒப்பந்தம் இல்லாவிட்டால் காணிகள் பறிபோயிருக்கும்.

இன்று தொழில்சார் பிரச்சினைகளை இலகுவில் தீர்ப்பதற்கு கூட்டு ஒப்பந்தமே காரணமாக இருக்கின்றது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் ஒப்பந்தம் இல்லாமல் இருப்பது நன்மையாக இருக்கலாம்.

ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கும், காங்கிரஸுக்கும் அது அவசியம். பெருந்தோட்டத்துறை கௌரவமானதொரு தொழில்துறையாக மாற்றியமைக்கப்படும்.

அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.