சிங்களத்தை விழுங்கிய மாண்டரின்

Report Print Jeslin Jeslin in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்தவாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, நாட்டை சீனா அபகரித்துக் கொண்டு போவதை சிங்கள மக்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.

சீனாவின் குடியேற்ற நாடாக ஆகிவிடக் கூடாது, என்றும், எங்களின் மீது கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, சீனாவின் மீது கவனம் செலுத்துங்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவர் அவ்வாறு கூறியதன் பின்னர் அடுத்தடுத்த நாட்களில், சமூக ஊடகங்களில் ஒரு படம் அதிகளவில் பகிரப்பட்டது.

கல்கிசை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும், தூர இடங்களுக்கான ரயில் சேவை நேரங்கள் குறித்த அறிவிப்பு பலகையே அது.

அந்த அறிவிப்புப் பலகையில் ஆங்கிலத்திலும், சீனாவின் மாண்டரின் மொழியிலும் தான், எழுதப்பட்டுள்ளன.

இந்தப் பெயர்ப் பலகையை கல்கிசை ரயில் நிலையத்தின் ஊடாக பயணம் செய்யும் பலர் பார்த்து விட்டுப் போயிருக்கலாம்.

யாரும் அதனை சரியாக கணக்கெடுத்திருக்கவில்லை. அது சர்ச்சையை தோற்றுவிக்கவும் இல்லை.

சமூக ஊடகங்களில் இந்தப் படம் பரவிய பின்னர் தான், ரயில்வே திணைக்களம் விழித்துக் கொண்டிருக்கிறது.

இந்த அறிவிப்புப் பலகை எப்போது - யாரால் வைக்கப்பட்டது என்று விசாரணைகளை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் முகாமையாளர் டிலந்த பெர்னான்டோ கூறியிருக்கிறார்.

தாம் முகாமையாளராகப் பதவியேற்க முன்னர் தான், அந்தப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆங்கிலமும், சீன மொழியும் மட்டும் இடம்பெற்ற அந்தப் பெயர்ப் பலகையில் நாட்டின் தேசிய மொழிகளான சிங்களமோ, தமிழோ இடம்பெற்றிருக்கவில்லை.

இவ்வாறான அறிவிப்புப் பலகைகளில், தமிழ் மொழி இடம்பெறாமல் போவது இலங்கையில் ஆச்சரியமான விடயம் அல்ல. தென்பகுதியில் பல இடங்களில் அத்தகைய நிலை உள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், பல இடங்களில் மும்மொழிகளில் இருந்த வீதிப் பெயர்ப் பலகைகளில் இருந்த தமிழ் மொழி கூட அழிக்கப்பட்டது. இந்த விவகாரம் மங்கள சமரவீரவினால் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டதை அடுத்து, பிரதமரின் உத்தரவின் பேரில், மீளப் பொருத்தப்பட்டது.

அறிவிப்புப் பலகைகளில் தமிழ் மொழி இடம்பெறாமல் போவதும், தவறான அர்த்தங்களுடன், எழுத்துப் பிழைகளுடன் இடம்பெறுவதும் ஆச்சரியமல்ல. ஆனால், சிங்கள மொழியே காணாமல் போனது தான் ஆச்சரியம்.

சிங்கள மக்கள் அதிகளவில் வாழுகின்ற, கல்கிசையில் சிங்கள மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழிக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

கடந்த அரசாங்கத்தின் காலத்திலும், சீன மொழி தொடர்பான சர்ச்சை ஒன்று உருவாகியிருந்தது. கொழும்பு பெருநகர திடக்கழிவு முகாமைத்துவத் திட்டத்துக்கான பெயர்ப் பலகையில், சிங்களம், மாண்டரின், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாத்திரம் இடம்பெற்றிருந்தன. அதில் தமிழ் மொழி இடம்பெற்றிருக்கவில்லை.

இலங்கையின் சீனாவின் கட்டுமானத் தளங்களில், உள்ளூர் மொழி சட்டங்கள் மீறப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது என்றும், உள்ளூர் சட்டங்களுக்கு சீனர்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றும் அப்போது அரசாங்கத்தினால் வலியுறுத்தப்பட்டது.

இதற்குப் பின்னர், அந்த திட்டத்தை முன்னெடுத்த சீன நிறுவனத்தின் பெயர்ப் பலகையில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

அப்போது தமிழ் மொழி மட்டும் காணாமல் போனது. இப்போது, சிங்கள மொழியும் சேர்ந்தே காணாமல் போயிருக்கிறது.

சிங்கள மக்கள் சீனா குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில், விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இந்த விவகாரம் ஆழமான அர்த்தத்தைக் கொடுப்பதாகவும் உள்ளது.

கல்கிசை ரயில் நிலையத்தில் மாத்திரம் தான், இந்த நிலை என்றில்லை. சீனாவினால் முன்னெடுக்கப்படும் பெரும்பாலான கட்டுமானத் தளங்களில் இதேநிலை தான் காணப்படுகிறது. சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படுகின்ற அல்லது சீன நிறுவனங்களால் பொறுப்பேற்கப்பட்டுள்ள திட்டங்களில் மாண்டரின் மொழி அறிவிப்பு பலகைகள், பெயர்ப்பலகைகள் அதிகளவில் காணப்படுகின்றன.

இலங்கையர்களுக்கு சீன மொழி தெரியாது. எனவே இலங்கையர்களுக்காக இவை வைக்கப்பட்டுள்ளன என்ற வாதம் சரியானதல்ல. இலங்கையில் சீன நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் பணியாற்ற வந்த சீனர்களுக்காகவே மாண்டரின் மொழி அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், இலங்கையின் அரசியலமைச் சட்டத்தின் படி இவ்வாறான பெயர்ப் பலகைகளை பொது இடங்களில், வைப்பதற்கு அனுமதி உள்ளதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சீன நிறுவனங்களின் செயற்திட்டப் பகுதிகளில் மாண்டரின் மொழி அறிவிப்புகள் காணப்படும் அதேவேளை, இலங்கையின் அரச கரும மொழிகள் புறக்கணிக்கப்படுகின்றன என்று அரச கரும ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் சிவப்பிரகாசம் மதிவாணன் கூறியிருக்கிறார்.

இவ்வாறு அரச கரும மொழிகள் புறக்கணிக்கப்படுவதான, அரசியலமைப்பின் 4 ஆவது பிரிவை மீறுகின்ற செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இவ்வாறான விடயங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் செயற்படும் அனைத்து உள்நாட்டு சர்வதேச நிறுவனங்களும் பெயர்ப்பலகைகளில் அரச கரும மொழிகள் மாத்திரம் இடம்பெற வேண்டும் என சட்டங்களை முன்மொழிவது குறித்து கவனத்தில் கொண்டுள்ளதாக அரச கரும மொழிகள் ஆணைக்குழு அண்மையில் கூறியிருந்தது.

சீன மொழி விவகாரம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடியதல்ல, இலங்கையில் சீனாவின் தலையீடுகள் குறித்த பலத்த விமர்சனங்கள், சந்தேகங்கள் உள்ளன. இவ்வாறான நிலையில், சிங்களத்தையும் சீனமொழி விழுங்கின்ற நிலை ஏற்பட்டு வருவதை, சிங்கள மக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

சீனா தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்ற போதெல்லாம், சீனா ஒரு விடயத்தை உறுதியாக கூறிக் கொள்வது வழக்கம்.

எந்த நாட்டினதும் உள்விவகாரங்களில் நாங்கள் தலையிடுவதில்லை, அந்தந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கமையவே செயற்படுகிறோம் என்று அவர்கள் சமாளித்துக் கொள்வார்கள்.

ஆனால் இலங்கையில் சீனாவின் தலையீடுகள் குறித்த சந்தேகங்கள் எழுவதைப் போலவே, இலங்கையின் சட்டங்களை சீனா மதிக்கிறதா என்ற சந்தேகத்தை, மாண்டரின் மொழி விவகாரம் ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போதைய அரசாங்கம் சீனாவுடன் நெருக்கத்தை பேணுகின்ற ஒன்றாக இருக்கும் நிலையில், இதுபோன்ற விவகாரங்கள், அந்த நெருக்கத்துக்கு சவாலாக மாறக் கூடும்.

- Virakesari