மட்டக்களப்பில் இடம்பெற்று வரும் காணி அபகரிப்பை தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: இரா.துரைரெத்தினம்

Report Print Kumar in அரசியல்
37Shares

மயிலத்தமடு, மாதவனை போன்று வவுணதீவு பகுதிகளிலும் காணி அபகரிப்புகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவற்றினை தடுத்து நிறுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகாலத்திற்கு பின்பு மெளனிக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப்போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கின்றது என்பதை நாங்கள் வரவேற்கின்றோம்.

2020ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபையினை பொறுத்தவரையில் கிழக்கு மாகாணசபையில் உள்ள பல திணைக்களங்களுக்கு நிதியொதுக்கீடு தொடர்பான விடயங்களில் பல விமர்சனங்கள் இருக்கின்றது.

எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணசபையில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் விகிதாசார அடிப்படையில் நிதியினை ஒதுக்குவதற்கு கிழக்கு மாகாண ஆளுனர் நடவடிக்கையெடுக்கவண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கின்றேன்.

மத்திய அரசாங்கத்தினை பொறுத்தவரையில் 2021ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள 46 உள்ளூராட்சிமன்றங்களுக்கும் பதினான்கரை கோடி ரூபா மட்டுமே அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்துள்ளது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சிமன்றங்களை மத்திய அரசாங்கம் புறக்கணிக்கின்றதா என்ற சந்தேகம் எமக்குள்ளது. இந்த நிதியை அதிகரிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்.

மத்திய அரசாங்கத்தினை பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வன இலாகா திணைக்களம் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு காணிகளுக்கு எல்லைக்கற்களையிட்டு வனபகுதிகளாக மாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதேபோன்று கிரான் - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மாதவனை, மயிலத்தமடு பகுதியில் சிங்கள குடியேற்றத்தினை செய்வதற்காக வனவள பகுதிகளை மாற்றுவதானது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

வனஇலாகா திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பக்கச்சார்பாக செயற்படுவதற்கு அதிகாரத்தினை யார் வழங்குகின்றார்கள் என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கு ஜனாதிபதியினால் ஆளுனர் நியமிக்கப்படும்போது அவர் நடுநிலையாக செயற்படுவார் என்று தமிழ் மக்கள் நம்புகின்றனர்.

இன்று ஆளுனரின் ஒரு பக்கச்சார்பான செயற்பாடுகள் தமிழர்களை பாதிக்கும் வகையில் உள்ளன. ஜனாதிபதி இது தொடர்பில் தலையிட்டு சீரமைப்புகளை செய்யுமாறு கோரிக்கையினை முன்வைக்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் மங்களகமவிற்கு அருகில் உள்ள சில இடங்களில் மாதவனை, மயிலத்தமடு போன்று சிங்கவர்களுக்கு விவசாய செய்கை என்ற பெயரில் காணிகளை வழங்குகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கு எதிராக மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர் நடவடிக்கையெடுத்து அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

கடந்த 12 வருடமாக வவுணதீவு,பட்டிப்பளை பகுதிகளில் அத்துமீறிய காணி அபகரிப்புகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

அவற்றினை முன்னாள் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் தடுத்து நிறுத்தினாலும் மீண்டும் அந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனை விரைவாக தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்க வேண்டும். வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவின் உன்னிச்சை கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட இவ்வாறான காணி அபகரிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை பகுதியில் கெவிழியாமடுவுக்கு திவுலான பகுதிக்கும் இடைப்பட்ட மேய்ச்சல் தரைக்கான காணிகள் அளந்து வழங்கப்படுகின்றன. இவற்றினை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

வடகிழக்கில் மூன்று தசாபத்ததிற்கும் மேலாக ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் தொடர்பான கேள்வியெழுந்தாலும் துப்பாக்கிகள் மெளிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு - கிழக்கில் உள்ள பல கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பலமான கூட்டினை உருவாக்ககூடிய சூழ்நிலையுருவாகியுள்ளது.

இதன் முன்னோடி நடவடிக்கைகள் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிழக்கிலும் அந்த நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் பிரிந்துசெல்வது தமிழர்களுக்கு ஆபத்தானது என்பதை புரிந்துகொண்டு எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் கிழக்கு மாகாணத்தினை தமிழர்கள் ஆளக்கூடியவாறு தமிழ் கட்சிகள் கூட்டுச்சேர்ந்து ஆளக்கூடிய நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவேண்டும்.

எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் ஆக்கும் செயற்பாடுகளை மத்திய அரசாங்கம் ஆரம்பித்திருந்தாலும் பிரித்தாலும் நிலையில் சில தமிழ் கட்சிகளும் செயற்படும் நிலையில் அவற்றுக்கு அடிபணியாமல் அனைத்துத் தமிழர்களும் ஒரு தலைமைத்துவத்தினை உருவாக்கி கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.