மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளினால் வெற்றி

Report Print Kumar in அரசியல்
160Shares

மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் விசேட அமர்வு இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பமானது.

மாநகரசபையின் சம்பிரதாயங்களுடன் ஆரம்பமான சபையின் விசேட அமர்வின் ஆரம்பத்தில் இன்று புதிதாக மாநகரசபை உறுப்பினர்களாக கடமையேற்றுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் மாநகர முதல்வரினால் வரவேற்கப்பட்டு அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாநகரசபை முதல்வரினால் கடந்த அமர்வில் வரவு செலவு திட்டம் முன் வைக்கப்பட்ட நிலையில் உறுப்பினர்கள் பல திருத்தங்களை முன் வைத்ததன் காரணமாக அந்த திருத்தங்கள் சேர்க்கப்பட்டு மீண்டும் வரவு செலவு திட்டம் திருத்தங்களுடன் முன்வைக்கப்படுவதாகவும் அவற்றிற்கு ஆதரவு வழங்குமாறு மாநகர முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திறந்த வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும், தமிழர் விடுதலைக்கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் தலா இரண்டு உறுப்பினர்கள் என 20 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராகத் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஐந்து உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இரண்டு உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக்கூட்டணியின் இரண்டு உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்களும், ஈபிடிபி ஒரு உறுப்பினரும், சுயேச்சை குழுக்களின் மூன்று உறுப்பினர்களும் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

அத்துடன் 38 உறுப்பினர்கள் கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் 20 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாகவும், 18 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

இன்றைய அமர்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.சாணக்கியன் ஆகியோர் பார்வையாளராகக் கலந்து கொண்டு அவதானித்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து சபை அமர்வுகள் நிறைவு பெற்று உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில் சபைக்கு வெளியே உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அங்கு குழப்ப நிலையை ஏற்படுத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.