நாடு தற்போது அடைந்துள்ள நிலைமைக்கு தான் உட்பட இதுவரை ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பதுளை ஹாலி-எல பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் நேற்று மலரஞ்சலி செலுத்தும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதற்கு பதிலாக நடந்த தவறுகள் குறித்து மீளாய்வு செய்து, தவறுகளை திருத்திக் கொண்டு முன்னோக்கி செல்ல நான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாட்டில் ஆட்சிக்கு வந்த நாங்கள் உட்பட அரச நிர்வாகத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரும் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு பொறுப்புக் கூற வேண்டும்.
அரசியல் எதிரணியினர் மீது மாத்திரம் குற்றம் சுமத்தாது, முதலில் நாங்கள் தவறை உணர வேண்டும். கண்ணாடிக்கு முன்னால் சென்று நடந்த குறைகள்,அநீதிகள் அனைத்தையும் உணர்ந்து, தவறுகளை திருத்திக்கொண்டு, எமது தவறுகளுக்காக மக்களிடம் மன்னிப்பு கோரி மீண்டும் ஒரு முறை புதிய பயணத்தின் ஊடாக பொதுமக்களின் காலடிக்கு சென்று, நாட்டில் மிகபவ் பெரிய அபிவிருத்தி யுகத்தை ஏற்படுத்த நாங்கள் தயாராக இருக்கின்றோம் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.