ஏன் இந்த திடீர் மாற்றம்?

Report Print Habil in அரசியல்
2975Shares

வரவு, செலவுத் திட்ட வாக்கெடுப்புகளில் பங்கேற்காமல் ஒதுங்கியது ஏன் என்பதை விளக்கி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், வழக்கம்போல, கேள்வி- பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இந்த அறிக்கையில், தான் வாக்களிக்காமல் தவிர்த்துக் கொண்டதற்கான காரணங்களை அவர் விளக்கியிருக்கிறார். அந்த முடிவை எடுத்தமைக்காக அவர் கூறியிருக்கின்ற காரணங்கள் பல, பூமராங் போல, அவருக்கு எதிராகவே திரும்பக் கூடியவை. அவர், சில தர்க்க நியாயங்களை முன்வைத்தே, தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். கூடவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இழுத்து வந்து, விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அவர்கள் தங்கள் முடிவுக்கான காரணத்தை இன்னமும் அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தவில்லை.

ஆனாலும், விக்னேஸ்வரன், கூட்டமைப்பை அல்லது எம்.ஏ.சுமந்திரன் என்ற அளவுகோலை வைத்தே, தனது நிலைப்பாடு உயர்வானது என்று காட்டிக் கொள்ள முனைந்திருக்கிறார். சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்திருக்கின்ற நியாயப்பாடுகளை இவ்வாறாக வரிசைப்படுத்தலாம்.

1. இணக்க அரசியலும் இல்லை, எதிர்ப்பு அரசியலும் இல்லை.

2. போர்களை வென்ற தமிழ்த் தலைமைகள் யுத்தத்தின் தோற்று விட்டன.

3. எல்லாவற்றையும் எதிர்ப்பதால் பலனில்லை, விளைவுகளை ஏற்படுத்தாத செயலோ, பேச்சோ அர்த்தமற்றது.

4. எதிர்க்கட்சி என்பதால் எல்லா நேரங்களிலும் எதிர்க்க வேண்டும் என்றில்லை.

5. இந்த அரசுடன் பேச வேண்டியுள்ள தேவைகள் உள்ளன.

இந்த ஐந்து விடயங்களையும் முன்னிறுத்தியே விக்னேஸ்வரன் தனது நியாயப்பாட்டை முன்வைத்திருக்கிறார். இந்த அறிக்கையில் அவர் சிலவேளைகளில் தன் மீதான தாக்குதலுக்கும் வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இணக்க அரசியல் செய்தும் பயன்கிட்டவில்லை, எதிர்ப்பு அரசியல் செய்தும் பயனில்லை என்ற சலித்துப் போனவராக, வாதத்தை முன்வைத்திருக்கிறார் விக்னேஸ்வரன்.

முன்னைய அரசாங்க காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியலை முன்னெடுத்தது. அதனால் எந்தப் பயனும் கிட்டவில்லை என்றும், இணக்க அரசியல் செய்தவர்கள் தமது நலன்களைப் பூர்த்தி செய்ததே அவர்கள் பெற்ற பலன் என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தும், எந்தப் பயனும் கிட்டவில்லை என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அதனால் தான், இரண்டுக்கும் நடுவே பொதுவான ஒரு வழியைப் பற்றி அவர் பேச முனைந்திருக்கிறார். வரவு,செலவுத் திட்டத்தின் போது தாராளமாக எதிர்த்துப் பேசி விட்டதாகவும், அதனால் எதிர்த்து வாக்களிப்பேன் என்று பலரும் நம்பிவிட்டனர் எனக் கூறியுள்ள, விக்னேஸ்வரன், தான் அவ்வாறு இருக்கப் போவதில்லை என்ற புதியதொரு சமிக்ஞையையும் காண்பித்திருக்க்கிறார்.

இப்போது விக்னேஸ்வரன், கறுப்பும் இல்லை வெள்ளையும் இல்லை, இரண்டுக்கும் நடுவே உள்ள சாம்பல் நிற அரசியலை செய்ய முனைகிறார்.

அவரைப் பொறுத்தவரை இது முதல் முறையல்ல.

2013 மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதும் விக்னேஸ்வரன் இணக்க அரசியலும் இல்லாத- எதிர்ப்பு அரசியலும் இல்லாத, அணுகுமுறையைத் தான் கையாள முனைந்தார். அதற்காக அப்போது கடும் எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்த கூட்டமைப்பின் விருப்பத்துக்கு மாறாக, ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் முன்பாக பதவிப்பிரமாணமும் செய்து கொண்டிருந்தார்.

ஆனால், அவர் எதிர்பார்த்தது போல, எதிர்ப்பும் இல்லாத இணக்கமும் இல்லாத- நடுநிலை அரசியலை முன்னெடுக்க முடியாது போனது. ஏனென்றால், அவருக்கு அத்தகையதொரு வழியை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் விட்டு வைக்கவில்லை.

விக்னேஸ்வரனை எதிரியாகவே கையாள முனைந்தது. ஆளுநராக இருந்த சந்திரசிறியைக் கொண்டு, அவரை நசுக்கவே முனைந்தது. அதனால் வேறுவழியின்றி அவரும் எதிர்ப்பு அரசியலுக்குள் மூழ்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஒரு கட்டத்தில் அவர் கூட்டமைப்பை விடவும் தானே, தீவிரமான எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பவர் போலவும் காட்டிக் கொண்டார். பொதுத்தேர்தல் வரைக்கும் அவர் அதே நிலைப்பாட்டைத்தான் வெளிப்படுத்தினார். இப்போது திடீரென எதிர்ப்பும் இல்லை- இணக்கமும் இல்லை என்று, தனக்கு மிகவும் வசதியான, பாதுகாப்பாக வலயத்துக்குள் இருக்க முனைகிறார்.

கறுப்புக்கும் வெள்ளைக்கும் நடுவே இருப்பதன் மூலம், அவர், அரசாங்கத்துடன் பேசவும், இணக்கம் காணவும் தயாராக இருப்பதான சமிக்ஞையை வெளிப்படுத்தியிருக்கிறார். அரசுடன் பேசுவது தவிர்க்க முடியாதது. அரசுடன் பேசாமல் பிரச்சினையை தீர்க்கவும் முடியாது. அதற்கான சூழலும் இல்லை.

ஆனால், விக்னேஸ்வரன் எதிர்பார்ப்பது போல, பேசுவதற்கு அரசாங்கம் இடமளிக்குமா – வாய்ப்புக் கொடுக்குமா என்பது தான் பிரச்சினைக்குரிய விவகாரம். வடக்கு மாகாணசபையில் அவரை செயற்பட விடாமல் ஆளுநரைக் கொண்டு அடக்கிய நிர்வாகம் தான், இப்போது ஆட்சியில் இருக்கிறது.

அவர்களுடன், அரசியல் கைதிகள் தொடர்பாக அரசியல் தீர்வு தொடர்பாக, மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேச வேண்டும். ஆனால் விக்னேஸ்வரன் எதிர்பார்ப்பது போன்று, அவருடன் பேசக்கூடிய நிலையில் அரச தரப்பு இல்லையே. குறைந்தபட்சம் மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் போது கூட, அதற்குப் பதிலளிக்கின்ற சம்பிரதாயத்தையாவது கடைப்பிடிக்கக் கூடிய அரசாங்கமாக இருக்க வேண்டும்.

அந்த சம்பிரதாயத்தைக் கூட தற்போதைய அரசாங்கம் கடைப்பிடிப்பதில்லை. இவ்வாறான அரசாங்கத்துடன் அரசியல் கைதிகள் குறித்து, அரசியலமைப்பு குறித்து, அரசியல் தீர்வு குறித்துப் பேசி தீர்வு காண்பதென்பது குதிரைக் கொம்பு என்பது இன்னமும் விக்னேஸ்வரனக்குத் தெரியாமல் இருந்தால், அவர் அரசியலில் பாலர் வகுப்பில் தான் இன்னமும் இருக்கிறார் என்றே கருத வேண்டும்.

தான் வாக்களித்தோ வாக்களிக்காமல் விடுவதாலோ எந்த விளைவும் ஏற்படாது என்ற கூறிய விக்னேஸ்வரனுக்கு, இவருடன் பேசியென்ன, பேசாமல் விட்டென்ன என்ற மனோநிலை தான் அரசாங்கத்திடம் இருக்கிறது என்ற உண்மை தெரியாமல் போய் விட்டது. ஏனென்றால், அவர்களிடம் போதிய பலம் இருக்கிறது. எனவே, இந்த அரசாங்கத்துடன் எந்த அரசியலை முன்னெடுத்தாலும், விக்னேஸ்வரனாலோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலோ, பேசித் தீர்க்க முடியாது.

கடந்த அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவிலேயே அது காலத்தைக் கடத்தியது. அப்போதைய அரசாங்கத்துடன் சரியாக பேரம் பேசவில்லை என்றும், சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டது என்றும் கூட்டமைப்பை குற்றம்சாட்டியவர்கள் ஏராளம். அவர்களில் விக்னேஸ்வரனும் விதிவிலக்கல்ல.

இப்போது அவர் எந்த நியாயத்தை கூறி தப்பிக்க முனைகிறாரோ, அதே நியாயம் தான் அப்போது கூட்டமைப்புக்கும் பொருத்தமானதாக இருந்தது. அதாவது கூட்டமைப்பு ஆதரவு கொடுக்காமல் போனாலும். முஸ்லிம் கட்சிகளின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்புகளையும், வரவு,செலவுத் திட்ட வாக்கெடுப்புகளையும் வெற்றி கொள்ளக் கூடிய நிலையில் ரணில் விக் கிரமசிங்க அரசாங்கம் இருந்தது.

எனவே, ஒரு கட்டத்துக்கு மேல் பேரம் பேசக்கூடிய நிலையில், கூட்டமைப்புக்கு வாய்ப்பும் இருக்கவில்லை. சூழலும் வாய்க்கவில்லை. ஆனாலும் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கூட்டமைப்பை மிகக்டுமையாக விமர்சித்தனர். இணக்க அரசியல் செய்வதாக சோரம் போனதாக குற்றம் சாட்டினர்.

அரசுக்கு ஆதரவு அளித்த கூட்டமைப்பு, எதிர்க்கட்சி என்றால் எதிர்க்க வேண்டும் என்றில்லை என கூறிய நியாயத்தை, அப்போது, விக்னேஸ்வரன் ஏற்கத் தயாராக இருக்கவில்லை. இப்போது அவரும் அதே போர்வைக்குள் மறைந்து கொள்ள முனைந்திருக்கிறார். இது அவரது அப்பட்டமான அரசியல் குத்துக்கரணம் எனலாம்.

எதிர்ப்பதால் எந்த விளைவையும் ஏற்படுத்த முடியாது என்று தெரிந்து கொண்ட பின்னர், எதிர்க்காமல் விடுவதும், எதிர்ப்பதும் ஒன்றுதான் என்று அவர் கூறியிருக்கிறார். அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கை, எந்தவொரு தமிழ்த் தலைவரிடமும் கிடையாது. ஆனாலும் அவர்கள் ஒன்றில் எதிர்க்கிறார்கள் அல்லது ஆதரிக்கிறார்கள்.

விக்னேஸ்வரனும் எதையோ ஒன்றைச் செய்ய முனைகிறார். அதன் மூலமும் விளைவுகளை ஏற்படுத்த முடியாது என்பது அவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் தனது அரசியலை விட்டு ஒதுங்கவில்லை. அது எவ்வாறு நியாயமானதோ, அதுபோல, தோல்வியா வெற்றியா என்பதை விட போராடுவது தான் முக்கியமானது.

விக்னேஸ்வரனின் பாதை வெற்றி என்றால் மட்டும் போராடுவது போன்றது. அவர் ஏன் திடீரென இவ்வாறு மாறினார் என்ற கேள்வி எழுகிறது. கடந்தவாரம் ஆங்கில வாரஇதழ் ஒன்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவின் ஆலோசனைப்படி தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விட்டது என்று கூறப்பட்டிருந்தது.

தனது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத போது, இலங்கையைக் கையாளுவதற்கு தமிழ் அரசியல்வாதிகளை இந்தியா பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது என்றும், இது இந்தியாவின் பழைய உத்தி என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவ்வாறாயின், விக்னேஸ்வரனும் கூட, சாம்பல் நிற அரசியலை தெரிவு செய்திருப்பதற்குப் பின்னால் இந்தியா தான் இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.