துறைமுகத்தை இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ வழங்குவதற்கு நாம் தயாரில்லை! சி.பி. ரத்னாயக்க

Report Print Thirumal Thirumal in அரசியல்
84Shares

போரை முடிவுக்கு கொண்டுவர முடியாது என்றனர்.ஆனால் ராஜபக்சக்கள் அதனை முடிவுக்குக் கொண்டு வந்தனர். அதேபோல சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாது என்ற நிலையையும் ராஜபக்சக்களே மாற்றியமைத்தனர் என்று அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தைச் சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கு இணையாக கொத்மலை பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

எம்.சி.சி. உடன்படிக்கையில் கைச்சாத்திடாததால் நாட்டுக்கு நஷ்டம் எனவும்,கடன்களைப் பெறமுடியாது எனவும் விமர்சிக்கப்படுகின்றது.

நாம் கடன் வாங்கியது போதும். தேசிய பொருளாதாரத்தை மையப்படுத்தியே இம்முறை வரவு செலவுத்திட்டம் கூட தயாரிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.துறைமுகத்தை இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ வழங்குவதற்கு நாம் தயாரில்லை. எமது நாட்டுத் தேவைக்காகவே துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது.

ஆனால் கடந்த அரசாங்கம் தான் 99 வருட கால குத்தகைக்குத் துறைமுகமொன்றை வழங்கியது. கடந்த ஆட்சியின் போதே பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது.

இதனால் தான் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது.

ஜனாதிபதி தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெறமாட்டார் எனவும், சிறுபான்மையின மக்கள் அவருக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்றும் கூறப்பட்டது. இந்நிலைமையும் மாற்றியமைக்கப்பட்டது.

ராஜபக்சக்களுக்கு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என அன்று குறிப்பிட்டனர். ஆனால் ராஜபக்சக்கள் அதனைச் செய்து முடித்தனர். நாட்டை அபிவிருத்தி செய்யமுடியாது எனவும் சுட்டிக்காட்டினர்.

எனினும் அபிவிருத்தியையும் செய்து காட்டினர். அதுமட்டுமல்ல சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவின்றி தேர்தலில் வெற்றிபெற முடியாது என்றனர். ஆனால் ராஜபக்சக்கள் வெற்றி நடைபோட்டனர் என தெரிவித்துள்ளார் .