ஜெனிவா பட்டிமன்றம்...

Report Print Gokulan Gokulan in அரசியல்

முள்ளிவாய்க்கால் பேரவலத்துடனான முடிவு தமிழர்களின் உரிமைகளை பெற்றெடுப்பதற்கானதொரு ‘பெரு’ வாயிலை அகலமாக திறந்து விட்டிருந்தது.

இலங்கையில் அன்று ஆட்சியில் அமர்ந்திருந்த ராஜபக்ச தரப்பின் சீனா தழுவிய பிரதிபலிப்புக்களால், அயல் நாடான இந்தியா மற்றும் சர்வதேசத்திற்கு தமது நலன்கள் சார்ந்த அச்சங்களும் ,ஐயங்களும் வெகுவாக வலுத்திருந்தன.

இந்த தருணத்தில் தான் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான தமிழர்களின் நீதிக்கோரிக்கை இந்திய, சர்வதேச தரப்புக்களை முழுமையாக மையப்படுத்திச் சென்றது.

தமிழர்கள் விடயத்தினைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தினை தமது ‘பிடிக்குள்’ வைத்திருக்கும் மூலோபய தளமாக ஜெனிவை அத்தரப்புக்கள் மாற்றியமைத்துக்கொண்டன.

அதனடிப்படையிலேயே இந்திய, சர்வதேச தரப்புக்கள் 2013இல் இலங்கைக்கு நெருக்கடிகளை அளிக்கும் வகையிலான பிரேரணையை கொண்டு வந்தன. அதனை ஏனைய நாடுகளின் ஆதரவுகளைப் பெற்று நிறைவேற்றியும் இருந்தன.

இந்தியா அயல் நாடான இலங்கையை பகைத்துவிடக்கூடாது என்பதால் அனைத்து தளத்திலும் திரைமறைவு செயற்பாடுகளையே முன்னெடுத்திருந்தது.

ஜெனிவாவின் மூன்றாவது பிரேரணையே மிக வலுவானதாக இருக்கவும் (தற்போது உள்ளதோடு ஒப்படுகையில்) ஜெனிவா களமானது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதி அளிக்கும் நடுவமாக பிம்பப்படுத்தப்பட்டது. 2014வரையில் இந்த பிம்பம் தொடர்ந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் மட்டுமே மனித உரிமைகள் பேரவைக்கு அப்பால் தமிழர்களின் விடயத்தினை கொண்டு செல்ல வேண்டும் என்று கூறிவந்தார்கள்.

ஆனால் அதற்கான வழிமுறைகள் பற்றி புரியும் மொழிகளில் எப்போதும் கூறவில்லை. பூகோள அரசியலை மையப்படுத்தியே சாத்தியப்பாடுகளை வெளிப்படுத்தினர். அந்தக் கூற்றுக்கள் சத்தியமாக இருந்தாலும் எடுபடவில்லை. இந்த நிலையில் 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் 30.1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் தான் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பற்றி புரிதல் பல மட்டங்களில் வெகுவாக உணரப்பட்டது.

அது,தண்டனை அளிக்கும் நடுவமல்ல. பொறுப்புக்கூறலை சம்பந்தப்பட்ட தரப்புக்களின் பிரசன்னத்துடன் உயிர்புடன் நிலைகொள்ள வைத்திருக்கும் ஒரு தளம் மட்டுமே என்பதும் அழுத்தங்களைக் கூட வழங்குவதற்கு அதிகாரமற்ற ஒரு கட்டமைப்பே என்பதும் தெளிவானது.

ஏறக்குறைய தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதித்துவத்தினைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த 30.1 தீர்மானத்திற்கு காட்டிய பச்சைக்கொடி நேரடிப்பாதிப்புக்கு உள்ளாகியிருந்த சாட்சியங்களின் கோரிக்கைகளையும் தாண்டி வலுவானதாக இருந்தது.

இதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் தமது நீதிக்காக தாமே போராடுகின்ற மனோநிலையை அடைந்தனர். அதற்கு செயல்வடிவமும் வழங்கினர். தொடர்ச்சியாக போராட்டங்களையும் முன்னெடுக்கலாயினர்.

இதனைவிட, நிறைவேற்றப்பட்ட 30.1 தீர்மானம் இலங்கை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளுமளவிற்கு இருக்கின்றமையும் முன்மொழியப்பட்ட விடயங்களில் குறிப்பாக நீதிவிசாரணைக்கான பொறிமுறையும் அப்போதைய காலத்தில் பேசுபொருளானது.

ஐ.நா. தீர்மானம் மலினப்படுத்தப்பட்டு விட்டதென்றும், உள்ளக விசாரணைப் பொறிமுறையே காணப்படுகின்றது என்றும் கூட்டமைப்பிற்கு வெளியில் உள்ள தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட தரப்பினரும் பிரதிபலிப்புக்களையே செய்தனர்.

கூட்டமைப்பில் உள்ளவர்கள் அதற்கு முகங்கொடுக்க முடியது போகவும், ஜெனிவா விவகாரங்களை கையாளும் பொறுப்பினை ஏற்றிருந்த எம்.ஏ.சுமந்திரன் தாயகத்திலும், புலத்திலும் பதிலளிக்க முயற்சித்தார்.

சில தளங்களில் வெற்றி கண்டார். பல தளங்களில் தோல்வி கண்டார். கூட்டமைப்பிற்குள்ளே எதிர்ப்புக்களையும் சம்பதித்துக் கொண்டார். ஈற்றில் மேற்குலகத்தின் அபிமானத்தற்குரிய மைத்திரி-ரணில் கூட்ட அரசாங்கத்தின் காவலனாக சித்தரிக்கப்பட்டார். அவருடைய ஒருசில செயற்பாடுகளும் அதற்கு சான்று பகிர்ந்தன.

இவ்வாறிருக்க, 30.1இல் நீதி விசாரணைப் பொறிமுறை, உள்ளக ரீதியிலானதா, கலப்புமுறைமையைக் கொண்டதா, சர்வதேசத்தினை மையப்படுத்தியதா என்ற பட்டிமன்றம் ஆரம்பமானது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்தது.

இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட 30.1 தீர்மானத்திற்கான காலம் நிறைவுக்கு வர மீண்டும் சர்ச்சைகள் வெடித்தன. புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதால் நிரந்தர தீர்வினைப் பெற்றுவிடலாம் என்றபெரு நம்பிக்கையில் கூட்டமைப்பு 30.1தீர்மானத்தினை அமுலாக்க வழிவகுக்கம் வகையிலான 34.1தீர்மானம் நிறைவேற்றுவதற்கு பச்சைக்கொடி காட்டியது.

இந்தச் செயற்பாடு பாதிக்கப்பட்ட தரப்பின் நேரடியச் சாட்சியங்களுக்கு மீண்டுமொரு ஏமாற்றத்தை வழங்கியது. அதனைவிட ‘கூட்டமைப்பு கால அவகாசம் வழங்கியது’ என்றும் ‘சுமந்திரன் கால அவகாசம் வழங்கினார்’ என்றும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

அதன்போது கால அவகாசம் வழங்கவில்லை. இலங்கையின் பொறுப்புக்கூறலை தொடர்ந்தும் ஜெனிவாவின் பிடிக்குள் நீடிக்கச் செய்துள்ளோம் என்றெல்லாம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனாலும், சுமந்திரனாலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இந்த தருணத்தில் காலஅவகாசம் வழங்கப்பட்டதா இல்லையா என்றே பட்டிமன்றம் தொடர்ந்திருந்தது. அதுமட்மன்றி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசாரத்திற்கு தேவையாளவு உள்ளடக்கங்களை வழங்கியிருந்தது.

அதற்கு அடுத்து இலங்கைக்கு மீண்டும் ‘காலஅவகாசம்’ என்ற வாதப்பிரதிவாதங்கள் வெகுவாக எழுந்தன. இதன்போதும் ஜெனிவா அரங்கிற்கு வழமைக்கு மாறாக நேரில் சென்ற பல நேரடிச் சாட்சியங்கள் வெறுங்கையுடன் திரும்பின. 40.1தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘ரோல் ஒவர்’ என்ற ஆங்கில சொற்பததிற்கான சரியான தமிழ்ச் சொல்லை பிரதியீடு செய்ய முடியாமையாத நிலைமை இன்றுவரையில் தொடர்கின்றது. இதனால் கால அவகாசம், கால நீடிப்பு, இலங்கையின் செயற்பாடுகளை மதிப்பாய்வு செய்வதற்கான ஐ.நா ஆணையாளர் மற்றும் அவரது அவலுவலகத்திற்கான கண்காணிப்பு எல்லை அதிகரிப்பு என்றெல்லாம் கூறும் நிலை தொடர் கதையாகவே இருந்தது.

ஆனால், இந்தக்காலப்பகுதியில் சர்வதேச விசாரணை நிறைவுக்கு வந்துவிட்டது என்று பி.பி.சிக்கு வழங்கிய செவ்வியில் சம்பந்தன் கூறியதும், அவர்கூறியதை பின்னர் உள்ளுரில் சுமந்திரன் கூறி விளக்க முயன்றதும் வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியது.

ஈற்றில் அதன் விளைவுகளை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பு பெற்றிருக்கின்றது. வடக்கு கிழக்கில் அதற்கு இருந்த ஏகபோகம் பறிக்கப்பட்டதோடு ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டும் உள்ளார்கள்.

இந்த நிலையில் தற்போது அடுத்த மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா கூட்டத்தொடர் வேளையோடு சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. இம்முறை 40.1தீர்மானம் நிறைவுக்கு வருகிறது. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை பற்றிய முழுமையான ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். இலங்கை அரசு தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதே நிலைப்பாடென்று அறிவித்தாகிவிட்டது.

இப்படியொரு நிலையில் தமிழ்த் தேசியத் தரப்பில் மூன்று அணிகளையும் ஒன்றிணைத்து பலமானதொரு நிலையை ‘நிலத்தில்’ எட்டிவிட்டால் அதனை வைத்து ‘புலத்திலும்’ அமைப்புக்களை ஒன்றிணைத்து ஜெனிவாவில் இலங்கை இறுக்கி விடலாம் என்பதே பலரது கணக்கு.

அதற்கான ஒரு முயற்சி எடுக்கப்பட்டது. வரவுள்ள கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் பிரேரணைக்கான முன்மொழிவொன்றை சுமந்திரன் விக்னேஸ்வரன் கஜேந்திரகுமாருடன் பகிர்ந்திருந்தார். அது அரசாங்கத்திற்கு காலஅவகாசத்தினை வழங்குவதாக உள்ளதெனக் கூறி இருவரும் நிராகரித்து விட்டனர்.

அந்த நிராகரிப்புக்கு கூறப்பட்ட காரணங்களை மையப்படுத்தி சுமந்திரன் பதிலளிக்கவும் விக்னேஸ்வரன், சுமந்திரன் அறிக்கை மோதல் ஆரம்பமானது. அடுத்த ஜெனிவா பிரேரணையின் உள்ளடக்கத்திற்கான தமிழ்த் தரப்பின் முன்மொழிவு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கான வாதம் இப்போது ‘குரு-சிஷ்ய’ மோதலாக சுருங்கியிருக்கின்றது.

இம்முறை ஜெனிவா கூட்டத்தொடர் வரையில் இது தொடரலாம். கூடவே ஜெனிவாவினால் இலங்கையின் பொறுப்புக்கூறலை வைத்திருப்பதா இல்லை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்திற்கு கொண்டு செல்வதா என்பது பற்றிய வாதங்களும் நீடிக்கலாம்.

எவ்வாறாயினும் புதிய பிரேரணையொன்றை கொண்டுவரப்படவுள்ளது. 2013ஐ போலவே இம்முறையும் இந்திய, அமெரிக்க இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளால் குழப்பியிருக்கின்றன. அவை தமிழர் பிரச்சினையை கையிலெடுப்பதற்கு எதிர்பார்த்திருக்கும் சமிக்ஞைகளையும் வெளிப்படுத்தி விட்டன.

ஆனால் தமிழ் அரசியல் தரப்புக்கள் தருணத்தினை சரியாக பயன்படுத்த தயாரில்லாத நிலையிலேயே இருக்கின்றன. முத்தரப்பாக நின்று முட்டிமோதுகின்றன. இவற்றை அடியொற்றியிருக்கும் புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்புக்களும் அவ்வாறு தான் பிளவு பட்டு நிற்கின்றன.

இதில் மிகவும் மோசமான நிலைமை என்னவென்றால், பாதிக்கப்பட்ட தரப்பில் உள்ள சாதாரண மக்களும் போராட்டக் குழுக்களுமே பிளவுபட்டு நிற்பதுதான்.

மேலும் எந்தவொரு தரப்பிடமும் தரவுகள் சார்ந்த ஆவணப்படுத்தல்கள் இல்லை. வெறுமனே வாய்மொழிமூலமாகவே தான் அனைத்தையும் கையாளப்பார்க்கின்றன.

உதாரணமாக அரசியல் தமிழ் கைதிகள் விடயத்திலேயே தமிழரசுக்கட்சிக்குள் இருக்கும் இரண்டு ஜனாதிபதி சட்டத்தரணிகளிடத்திலும் இருவேறு தகவல்கள் உள்ளன.

இந்த நிலைமையில் ஏனைய விடயங்கள் பற்றி குறித்துரைக்க வேண்டியதில்லை. ஆக, மொத்தத்தில் இம்முறையும், அரசியல் கட்சிகள், அதில் உள்ள தனிநபர்கள், அவற்றை அடியொற்றிய சிவில் புலம்பெயர் தரப்புக்கள் ஆகியவை தமக்கு இடையிலான பரஸ்பர குற்றச்சாட்டுக்களையும், பழிச்சொற்களையும் வெளிப்படுத்தியே ஜெனிவாக் காலம் கடந்து செல்லப்போகின்றது.