குளத்திலே போட்டதை ஆற்றிலே தேடும் அரசியல் யாப்புத் தீர்வு

Report Print Dias Dias in அரசியல்
165Shares

இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினை என்பது இலங்கையின் அரசியல் யாப்பு சட்ட வரைவுக்குள்ளோ அல்லது இலங்கைத்தீவின் அரசியல் எல்லைக்குள்ளோ அல்லது இலங்கையின் நாடாளுமன்றத்திற் உள்ளேயோ தீர்க்கப்பட முடியாத பிரச்சினையாகும் என தொல்லியற்துறை மூன்றாமாண்டு மாணவன் திபாகரன் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அக் கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினை என்பது இலங்கையின் அரசியல் யாப்பு சட்ட வரைவுக்குள்ளோ அல்லது இலங்கைத்தீவின் அரசியல் எல்லைக்குள்ளோ அல்லது இலங்கையின் நாடாளுமன்றத்திற் உள்ளேயோ தீர்க்கப்பட முடியாத பிரச்சினையாகும்.

அது இந்து சமுத்திர பிராந்தியத்தின் புவிசார் அரசியல் பிரச்சினையாகவும் அதேநேரத்தில் இன்று உலகளாவிய பிரச்சினைகளின் ஒரு பகுதியாகவும் காணப்படுகின்றது. எனவே இதனை இலங்கை அரசியல் சட்டத்துக்கு வெளியையும் சர்வதேச மட்டத்திலுமே தீர்க்கப்பட முடியும்.

ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு இன்றைய தமிழ் தலைமைகள் அரசியல் யாப்புக்குள்ளும் நாடாளுமன்றத்தினுள்ளும் தீர்வு தேட முற்படுவது ‘‘குளத்திலே போட்டதை ஆற்றிலே தேடுவதற்கு’’ ஒப்பானது.

இலங்கையின் அரசியல் யாப்பு மரபானது ஆசியாவிலேயே நீண்ட கால வளர்ச்சி போக்குடையது என்றும் காலத்திற்கு காலம் அது திருத்தப்பட்டு வந்துள்ளது என்றும் மேலோட்டமாக பார்ப்பவர்களுக்குத் தெரியும்.

ஆனால் உண்மையில் இலங்கையின் அரசியல் யாப்பு என்பது ஒரு படிமுறையான முன்னோக்கிய நேரிய வளர்ச்சிக்கு செல்லாமல் அது தலைகீழான பின்னோக்கிய வளர்ச்சிக்கு சென்று கொண்டு இருப்பதையே காணமுடிகிறது.

அதாவது இனப்பிரச்சினை பொறுத்து அரசியல் யாப்பு மேல் நோக்கிய பரிணாம வளர்ச்சி அடையாமல் அது கீழ்நோக்கிய தேய்மான வளர்ச்சி அடைந்து செல்கிறது என்பதே சரியானது.

இனங்களுக்கு இடையிலான உரிமைகள் வழங்கப்பட்டு படிப்படியாக பலப்படுத்துவதற்கு பதிலாக அது படிப்படியாக உரிமைகள் அறுக்கப்பட்டு, அறுக்கப்பட்டு இனங்கள் தேய்க்கப்படும் நடைமுறையையே இலங்கை அரசியல் யாப்பு வளர்ச்சி கொண்டுள்ளது.

இத்தகைய உரிமைகள் படிப்படியாக அழிக்கப்பட்டதன் உச்சகட்டத்திற்கு உதாரணமாக இன்று இஸ்லாமிய மக்களின் ஜனாசா அடக்கம் செய்ய மறுக்கப்படுவதை காணலாம்.

இலங்கை அரசியல் யாப்பு என்பது ஓர் இனத்தன்மை கொண்டதாக அதுவும் குறிப்பாக இலங்கை அரசியல் யாப்பு என்பது சிங்கள பௌத்த கொய்கம அரசியல் யாப்பு என்று சொல்வதே பொருத்தமானதாகும்.

இலங்கையின் அரசியல் யாப்பு என்பது சிறுபான்மை இனங்களின் அடிப்படை உரிமைகளை படிப்படியாக அறுத்து, அழித்துவருவதாகவும், பெரும்பான்மை இனத்தை முதன்மைப்படுத்தி ஸ்தாபிதம் செய்து வருவதாகவும், செல்வதையே ஒரு வரலாற்றுப் போக்கு வளர்ச்சியாகக் கொண்டுள்ளது.

அரசியல் யாப்பின் ஊடாகவும், சட்டத்தின் ஊடாகவும் மொழியுரிமை, மத உரிமை ,நில உரிமை, கல்வி உரிமை என அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டதன் விளைவுதான் தேசிய இனப்பிச்சினையாகும்.

இத்தகைய பிழையான வரலாற்று வளர்ச்சிப் போக்கின் பின்னணியில் அரசியல் யாப்புக்கு வெளியே தீர்வு காண்பதற்கான முயற்சியாகத்தான் விடுதலைப் போராட்டம் பரிமாணம் பெற்றது.

இந்த விடுதலைப்போராட்டம் ஆரம்பிப்பதற்கு காரணமே இலங்கை அரசு சட்டத்தாலும், நீதியாலும் நிர்வாகத்தாலும் நடைமுறைகளாலும் கட்டமைப்பு செய்யப்பட்ட இன அழிப்பு கட்டமைப்பு வாதமானது தொடர்ச்சியாகவும் நடைமுறை ரீதியாகவும் முன்னெடுத்துச் செல்லப்பட்டமையாகும்.

அதாவது இன அழிப்பை முன்னெடுத்துச் சென்ற இத்தகைய தலைகீழான அரசியல் யாப்பு வளர்ச்சியின் பின்னணியிற்தான் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் வெடித்தெழுந்தது.

இன்று புதிய அரசியல் யாப்பு என்றும், புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் என்றும், அரசியல் யாப்பு வரைபிற்கான முன்மொழிவுகளை மக்கள் அரசுக்கு வழங்கலாம் என்றும் பலவாறாக இலங்கை அரசியல் பரப்பில் பேசப்பட்டுகிறது.

இந்நிலையில் இத்தகைய பொய்யான மாயமானை நோக்கி யாப்பு சார்ந்த விடயங்களில் தமிழ் அரசியல் தலைமைகள் தங்கள் காலத்தையும் நேரத்தையும் வீணடிப்பது நல்லதல்ல.

தமிழர் இழந்த இறைமையை மீளப் பெறுவது என்பது பற்றி ஒரு ஆழமான வரலாற்று அறிவு தமிழ் தலைமைகளுக்கு இன்று தேவையாக உள்ளது.

அதனை புரிந்து கொண்டால் மாத்திரமே தமிழ் தலைமைகளால் தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கான வழிவகைகளைக் கண்டறியவோ அல்லது அதற்கான ஒரு வீதி வரைபடத்தை வரைந்திட முடியும்

ஈழத் தமிழர் தமது இறைமையை 1621ல் போத்துக்கேயரிடம் இழந்துவிட்டனர். நாம் இறைமையை இழந்து 400 ஆண்டுகள் கடந்துவிட்டது. தமிழர் தாயகத்தின் இறைமையை போர்த்துக்கேயர்கள் கையகப்படுத்தினாலும் அவர்கள் தமிழ்ப் பிரதேசங்களை தனியான நிர்வாக அலகாகவே நிர்வகித்தார்கள்.

அவ்வாறே ஒல்லாந்தரும் தனித் தனியான நிர்வாக அலகாகவே நிர்வகித்த தைக் காணமுடிகிறது.

ஒல்லாந்தர்களின் நிர்வாக ஒழுங்கு என்பது இன்றைய வட - கிழக்கு மாகாணத்தின் அனைத்து பகுதிகளும் யாழ்ப்பாண கமெண்டரி என்ற நிர்வாக அலகின் கீழ் யாழ் கோட்டையை நிர்வாக மையமாக வைத்து ஆளப்பட்டது என்பது கவனத்திற்குரியது.

ஒல்லாந்தரின் யாழ்ப்பாண கமெண்டரி நிர்வாக பிரதேசத்தின் நிலவரைபட எல்லையே இன்றைய தமிழீழ வரைபடம். ஆனால் தமிழர் தேசமும் சிங்கள தேசமும் 1833 இல் தான் கோல்புரூக் அரசியல் திட்டத்தின் ஊடாக முதன் முதலில் இணைக்கப்பட்டது.

1931ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் அரசியலமைப்பு யாப்பானது அனைவருக்கும் வாக்குரிமை என்பதன் பெயரில் பிணங்களின் மீது அளவால் பெரிய சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்கான தலையெண்ணும் ஜனநாயகத்தை இலங்கையில் புகுத்திவிட்டது.

இன்று இலங்கையில் இருக்கின்ற அரசியல் யாப்பானது இனங்களுக்கான இன அடிப்படையிலான ஜனநாயகத்திற்கு பதிலாகத் தலையெண்ணும் இன மேலாதிக்க இனநாயக முறையை கொண்டது.

இதுவே பெரும்பான்மை இனத்துக்கான இனநாயகமாக அமைந்து சிறுபான்மை இனத்தை நசுக்குவதற்கான அரசியல் யதார்த்தத்தை கொண்டுள்ளது.

அந்தவகையிற்தான் 1972 ஆம் ஆண்டு அரசியல் யாப்பும் 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பும் தமிழ் பேசும் மக்களின் ஆதரவின்றி, அவர்களின் ஒப்புதலின்றி சிங்களத் தேசிய இனத்தால் உருவாக்கப்பட்ட இன ஒடுக்குமுறை அரசியல் திட்டமாக அமைந்து காணப்படுகிறது.

இலங்கையின் அரசியல் யாப்பை நாங்கள் ஏற்கமாட்டோம் , அதற்கு கட்டுப்பட மாட்டோம் என்று கூறியே தந்தை செல்வா அந்த அரசியல் யாப்பை 1972 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் முன் தீயிலிட்டு எரித்தார்.

அவ்வாறு 1978ஆம் ஆண்டு உருவான இலங்கை இரண்டாம் குடியரசு யாப்பு வரைபினை வடிவமைக்க அறிவியல் ரீதியாகப் பின்நின்று உதவியவராகக் கருதப்படும் பேராசிரியர் ஏ.ஜே வில்சன் அவர்கள் 1988ஆம் ஆண்டு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் "இலங்கையின் அரசியல் யாப்பானது தமிழர்களின் பங்கு பற்றுதல் இன்றி உருவாக்கப்பட்டமையினால் அந்த யாப்பால் தமிழ் மக்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது" என்று குறிப்பிட்டதையும் இங்கு கவனத்திற் கொள்வது நல்லது.

எனவே இன்றைய தமிழ் தலைமைகள் இந்த அரசியல் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும் . அரசியல் யாப்பு சீர்திருத்தம் மற்றும் அரசியல் யாப்பு மறுஉருவாக்கம் என்று இன்னும் சிங்கள-பௌத்த பெரும்பான்மை இன அடிப்படையில் தலையெண்ணும் ஜனநாயக முறைமைக்குள் நின்றுகொண்டு தீர்வை எட்டலாம் என்று எண்ணுவது மிகப்பெரும் பகற்கனவாகும்.

எனவே தமிழ் மக்கள் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏன் தெரிவு செய்தார்கள் என்பது தமிழ் மக்களுக்காக ஜனநாயக முறையில் போராடுவதற்கான ஒரு அனுமதிப்பத்திரம் மட்டுமேயாகும்.

அந்த அனுமதிப்பத்திரமான "நாடாளுமன்ற உறுப்பினர் " என்ற பதவியை அடையாள அட்டையாக வைத்துக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராடவேண்டும். அதைவிடுத்து அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் கத்திக்- குழறிப் - பேசி - விவாதித்து எந்தப் பயனும் கிட்டப்போவதில்லை.

எனவே தமிழர் பிரச்சினையை சர்வதேச அரங்கில் முன்னெடுக்கக் கூடிய வகையில் அல்லது சர்வதேச கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் போராட வேண்டும்.

அந்தப் போராட்டம் புவிசார் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இந்தியா இருப்பதனாலும் இந்தியாவின் பாதுகாப்பு வலயத்துக்குள் இலங்கை இருப்பதனாலும் தவிர்க்க முடியாதபடி ஜனநாயக வழியிலான போராட்டங்களையும் இராஜதந்திர நகர்வுகளையும் இந்தியாவுடன் தொடர்புபடுத்தப்பட்ட வகையில் முன்னெடுக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகும்.

ஈழத்தமிழரின் பிரச்சனையை சர்வதேச அரங்கில் பேசுபவர்களாகவும், அதற்கான அதிர்வலைகளை ஏற்படுத்துவதற்கு ஏற்றவர்களாகவும் தமிழகத்தின் 8 கோடி மக்களின் ஜனநாயக குரல்கள் மிக மிக முக்கியமானவையாய் அமைகின்றன.

அத்தோடு ஈழத் தமிழரது ஊடங்கள் பல மாதங்கள் செய்ய வேண்டிய ஊடகப் பரப்புரையை தமிழக ஊடகங்கள் நினைத்தால் ஒரு நாளிலேயே ஏற்படுத்த முடியும். அந்த அளவிற்கு தமிழகத்தின் ஊடகங்கள் மிகப் பலம் வாய்ந்த சக்தி என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் ஏற்படுகின்ற ஈழத் தமிழர் தொடர்பான ஜனநாயகக் குரல் என்பது சர்வதேச அளவில் தாக்கத்தைச் செலுத்த வல்லது.

எனவே ஈழத் தமிழர் விடிவிற்கான திறவுகோல் தமிழகத்திலேயே உள்ளது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் புவியியல் ரீதியாக தமிழகத்துடன் ஈழத் தமிழரின் அண்மைத் தன்மையான புவியியல் அமைவிடம், கூடவே ஒத்த இன அமைப்பு தன்மை என்பனவற்றை முதலீடாகக் கொண்டு ஈழத் தமிழர்கள் தமது போராட்டத்தை வடிவமைக்க வேண்டிய தவிர்க்கப்பட முடியாத அவசியம் உண்டு. அதனை ஒரு வளமாகவும் பலமாகவும் நாம் கருத தவறக்கூடாது. தமிழகம் என்ற அந்த பலத்தை புறக்கணிக்கவும் கூடாது.

எனவே இந்த புவிசார் அரசியலையும் ஒத்த இன் அமைப்பு தன்மையையும் புரிந்துகொண்டு அதற்கேற்ற ஜனநாயகப் போராட்டங்களை தமிழ் தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும்.

இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தலை எண்ணுகின்ற சிங்கள பௌத்த இனநாயக முறைமையிலிருந்து விடுபட்டு தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஜனநாயக முறைமைகளுக்கு ஊடாக அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

அது இன்றைய இலங்கையின் அரசியல் யாப்பு கட்டமைப்புக்குள்ளோ , இலங்கையின் அரசியல் கலாச்சாரத்திற்குள்ளோ ஒருபோதும் சாத்தியமில்லை. ஆதலால் புவிசார் அரசியலை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய அரசியல் பின்புலத்தில் வைத்து ஈழத் தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

ஆதலால் நரகத்துக்குள் முத்து தேடும் காக்கைகள் போல இலங்கையின் அரசியல் யாப்பு நகரத்துக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழ் தலைவர்கள் தீர்வு காண முற்படுவது என்பது மோசமான அரசியல் வரலாற்றுத் தவறாகும்.

"இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் நோக்கி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே" என்ற சினிமாப்பாட்டு வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகின்றது என்று கூறியுள்ளார்.