ஈழத்தமிழர் அரசியல் வெற்றி பெற சில ஆலோசனைகள்

Report Print Dias Dias in அரசியல்

2009ஆம் ஆண்டு மே மாதத்தில் முள்ளிவாய்காலில் எதிர்பாராத பயங்கர ஏமாற்றத்தால் நாம் அனைவரும் நிலை குலைந்து நிற்கின்றோம்.எல்லாவற்றையும் இழந்து விட்ட உணர்ச்சி, நம்பிக்கையை இழந்தோம். சிங்களவன் நம்மைத் தனியே நின்று தோற்கடிக்கவில்லை என பிரான்ஸ் பிரதமரின் செவ்வாலியே விருதை கல்வி துறையில் பெற்றவரும், பிரான்ஸ் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், 2009ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் பாரிஸ் பகுதி வேட்பாளருமான ஜோன் மரி யூலியா எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அக் கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சோனியா காந்தியின் வெறுப்பு, மன்மோகன் சிங்கின் ஆதரவு, பாதுகாப்பு அமைச்சர் கேரளத்து அந்தோனியின் வழிகாட்டல், இந்திய இராணுவத்தின் உலங்கு வானூர்திகளென பல வகைகளில் இந்தியா உதவி புரிந்தது. உலக நாடுகள் பலவும் சேர்ந்து நம்மை ஏமாற்ற முடிந்தது.

எமது உடன் பிறப்புக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர் - ஆனால் நாம் தொடர்ந்து போராடுவோம்.

நாம் எதிர்பார்த்த மாறுதல்கள் வருகின்றன.

சிங்களவர்கள் உலகம் எதிர்பார்த்த விசாரணையை நடத்தி முடிக்கவே இல்லை. தீவில் தமிழை, தமிழர்களை, தமிழர் கலாச்சாரத்தை ஒழிப்பதில், பௌத்த குருமார்களுடன் சேர்ந்து கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள்

இந்தியாவில் காங்கிரஸ் படுகுழிக்குச் சென்றுவிட்டது. நாம் பாரதிய ஜனதாவை இனி ஆதரிக்க வேண்டும்.

உலகின் ஒரு தமிழ்ப் பெண் ஐக்கிய அமெரிக்க நாட்டின் துணைக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாம் அவரது துணையைப் பெறவேண்டும்.

மத்திய இங்கிலாந்து உடைந்து போகும் நிலையில் உள்ளது. நாளை சுதந்திரம் அடையப் போகும் ஸ்கொட்லாந்தை அணுகி நெருங்கி எமக்கு அவர்களது ஆதரவைப் பெறவேண்டும்.

நமக்கு ஆதரவாக வரக்கூடிய நாடுகளாக இப் பதினைந்து நாடுகளையும் பார்க்கிறேன்.

1. பிரான்ஸ், 2. நோர்வே, 3.டென்மார்க், 4. பின்லாந்து, 5. சுவீடன், 6. சுவிற்சர்லாந்து, 7. இங்கிலாந்து, 8.ஜேர்மனி, 9. ஆஸ்ரியா, 10. போலந்து, 11. போர்த்துக்கல், 12.அயர்லாந்து, 13.பெல்ஜியம், 14. தென்ஆபிரிக்கா, 15.மொறிசியஸ்.

உலகில் மேலும் சில நாடுகளின் தார்மீக ஆதரவைப் பெறலாம்; அவை கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஏரித்திரியா, கிழக்கு தீமோர்,தென் சூடான் மற்றும் கொசோவா போன்றவையாகும்.

நமது கமலா ஹரிஸ் நான்கு ஆண்டுகளில், அல்லது அதற்கு முன்னரே ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவியாக வரலாம். அவரது ஆதரவு, அனுதாபம் எமக்கு மிக மிக அவசியம்.

(1948 இல் பலஸ்தீனத்தில் இஸ்ரேல் உதிப்பதற்கு ஐக்கிய அமெரிக்கா பெரிதும் உதவியதை நாம் நினைத்து பார்க்க வேண்டும்)

சரித்திரம்

1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4இல் இங்கிலாந்து, இலங்கைத்தீவின் சுதந்திரத்தை, சிங்களவர், தமிழர் ஆகிய இரு இன மக்களிடம் வழங்கிச் சென்றது.

பெரிய எண்ணிக்கையில் சிங்களவர் இருந்ததால் அந்தச் சுதந்திரத்தை அவர்கள் மட்டுமே அனுபவித்தனர்.

பிரெஞ்சுக் கல்விமான் அலன் லாம்பாள், அவரது அருமையான 'இலங்கையில் தமிழர் பிரச்சினை" என்ற நூலில் பின்வருமாறு விளக்குகிறார். 'சுறு சுறுப்பானவர்களும், உழைப்பாளிகளும் ஆன தமிழர்கள் வெகு விரைவில் சிங்களவரின் பொறாமைக்கு ஆளானார்கள்" (17ம் பக்கம்)

'1944 இலேயே சிங்களத் தலைவர் ஜெயவர்தன, தீவில் சிங்களம் மட்டும் அரசு மொழியாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். இங்கிலாந்து தமிழுக்கும் அந்த மதிப்பை அளிக்க வலியுறுத்தி அது வெற்றி பெற்றது." (32ம் பக்கம்)

சிங்கள மொழியில் 'தேசம்", 'இனம்", 'மக்கள்" ஆகியவற்றுக்கு ஒரே ஒரு சொல்தான் உண்டு. சிங்கள மக்களால் பல இனம் கொண்ட நாட்டை எண்ணிப் பார்க்கவும் முடியாது. ' சிறுபான்மையினிரின் கலாச்சாரத்தை பெரும்பான்மை விழுங்கிவிடும் கோட்பாட்டை தான் சிங்களவர்களால் கற்பனை செய்ய முடிந்தது.

"ஆகவே தீவு முழுவதும் சிங்களவர்களுக்கே உரியதாக வேண்டும். அவர்களது பௌத்த மதமும் அதைத்தான் கூறியது. சுருக்கமாகச் சொல்லப் போனால் :

1. தமிழர்கள் தங்கள் மொழியைப் பேசக் கூடாது. அவர்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும்.

2. அப்படியே அவர்கள் இந்து மதத்தைப் பின்பற்றக் கூடாது. பௌத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்விரு நோக்கத்தையும் நிறைவேற்ற, தமிழர்களைக் கட்டாயப்படுத்த வேண்டும். தீவை விட்டு விரட்டலாம். ஏன் அவர்களை கொல்லவும் செய்யலாம்.

தீவின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் இவ்விரு கருத்துக்கள் தான் காரணம். சிங்களவர்களிடம் எல்லா அதிகாரங்களும் இருந்தன.

 • நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை.
 • சட்டம் அவர்கள் கையில்; பொலிஸ் அவர்கள் கையில், இராணுவம் அவர்கள் கையில்
 • தமிழர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றி கொள் வேண்டிய நிலை.
 • தமிழர் கோரிய சமஸ்டி முறையைகோரிக்கையை சிங்களவர்கள் ஏற்க வேண்டும்.
 • பல அநீதிகள் இழைக்கப்பட்டன.
 • சிங்களம் மட்டும் 1956ல் அரச மொழி ஆனது.
 • புதிய அரசியல் சட்டம் (22.05.1972) இதன்படி இலங்கையின் பெயர் சிறீலங்காவாக ஆனது. பௌத்த மதம் அரச மதம் ஆக பிரகடனப்பட்டது.
 • பல்கலைக் கழகத்தில் பயில்வதற்கு தமிழ் மாணவர்கள் அதிக புள்ளி தேவை.
 • வேலை வாய்ப்பில் சிங்களத்திற்கே முன்னுரிமை.
 • தமிழர்களின் தாயாக பூமியின் கிழக்கு இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டார்கள்.
 • தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
 • சிங்களவர்கள் உதாசீனப்படுத்தினர்.

உலக சரித்திரம் என்ற நூலில் ஜவர்கலால் நேரு மகள் இந்திரவிற்கு எழுதிய மடல்கள் உள்ளன. அந்த நூலின் 722ம் பக்கத்தில் அவர் எழுதியிருக்கிறர், “எங்கே ஒரு இனம் மற்றைய ஒரு இனத்தை அடக்கி ஆண்டு சுரண்டி வருகிறதோ, அங்கே அதிருப்பதியும் முரண்பாடும் எதிர்ப்பும் கலகமும் கட்டாயம் இருந்திருக்கும். சுரண்டுபவர்களை, சுரண்டபடுபவர்கள் உதறி எறிய முயற்சித்து கொண்டே இருப்பார்கள்”.

முடிவாக துப்பாக்கி ஏந்தி அநீதிகளை அழிக்க இணைந்தனர் தமிழ் இளைஞர்கள்.

அவர்களின் உண்மையான காரணங்களை பார்க்க விரும்பாமல் நீதி வழங்க முயற்சிக்காமல்,அவர்களை பயங்கரவாதிகளாக சிங்களவர் சித்திரித்து உலகத்தையும் ஏமாற்றினர்.

2009இல் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி அநீதியை அழிக்க முனைந்தனர்; ஆனால் சிறிலங்காவின் பொய் பிரச்சாரத்தினால் அது தோல்வியை சந்தித்தது.

இன்றைய நிகழ்வுகளையும் நாளைய நிகழ்வுகளையும் பார்ப்போம்.

முதல் பிரச்சினை யாழில் சிங்கள மொழியில் விளக்கங்கள். 1940- 1944 கால கட்டத்தில் பாரிஸிசை வெற்றி கொண்ட ஜேர்மன் நாசிகள் இப்படித்தான் ஜேர்மன் மொழியில் விளங்கங்களை எழுதி வைத்தனர். 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி பாரிஸ் சுதந்திரம் அடைந்ததும் மக்கள் அவ் விளக்கங்களை பிடுங்கி எறிந்தார்கள்.

 • தமிழர் நிலங்கள் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை.
 • யாழ் நகரில் சிங்கள குடியேற்றங்கள்.
 • யாழில் இன்று ஆயிரக்கணக்கான சிங்கள இராணுவ சிப்பாய்கள்.
 • அவர்களிற்கு அரசு அங்கு வீடு கட்டி கொடுக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஐந்து குடும்பத்தினர் என்றால் இவர்கள் பல இலட்சம் சிங்களவர்கள் யாழில் குடியேறுகிறார்கள்;
 • சரணடைந்து கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் போர் முடிந்தும் இன்று பன்னிரன்டு வருடங்களாகியும் விடுதலை செய்யப்படவில்லை.
 • யாழில் புத்தர் சிலைகளை புத்த விகாரைகள் பரவலக முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

யாழ் தமிழ் காலச்சார தலைநகரில் பெரும்பான்மையாக இந்துகளை கொண்ட தமிழர் தாயாக பூமியில் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு 2009ம் ஆண்டு மே மாதம் முதல் மிக துரித வேகத்தில் நடைபெறுகிறது.

இப்பொழுது அவர்கள் சர்வதேசத்தின் துணையுடன் ராஜதந்திர ரீதியான போராட்டத்தை மேற்கொள்கிறார்கள்.

அநீதி இருக்கும் வரைக்கும் அவர்கள் ஏதோ வடிவில் போராடியே தீருவார்கள்; அநீதி மறைந்தால் மட்டுமே அவர்களது போராட்டம் தணியும்.

ஆலோசனை

கடந்த பதினெரு வருடங்களாக புதிய புதிய அமைப்புக்கள் தோன்றியுள்ளது. ஆனால் இவர்கள் யாரும் எதையும் மக்களிற்கு செய்யவில்லை. ஆகையால் சரி பிழைகள் காணப்பட்டாலும்,மிகவும் பழைமை வாய்ந்த அமைப்பின் மூலமாக யாவரும் ஒருங்கிணைந்து செயற்திட்ங்களை முன் வைக்க வேண்டும்.

 • இதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு அமைப்பாளர் நியமிக்கப்பட வேண்டும்.
 • உலக ரீதியாக குறைந்தது பதினைந்து 15 அங்கத்தவர்களை தெரிவு செய்ய வேண்டும்.
 • அவர்கள் யாவரும் தாம் பிரதிநிதித்துவம் செய்யும் நாட்டின் மொழி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். தமது அங்கத்தவர்கள் - ஆதரவாளருக்கும் அந்தந்த நாடு பற்றியும், இவர்கள் அனைவரும் அந்ததந்த நாட்டு அரசியல்வாதிகள், செய்தியாளர்களுடன், புத்திஜீவிகளுடன் நெருங்கிய நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
 • அவர்கள் அனைவரும் எமது சரித்திரத்தை குறைந்தது 72 ஆண்டு முதல் நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.
 • எமது இலட்சியம் - சுதந்திரத் தமிழீழம். ஆனால் இதை அடைவதற்கான மாற்று வழி மூலம், மற்றயை விடுதலை போராட்டங்கள் போன்று சர்வதேச நாடுகளின் உதவியுடன் செயற்படலாம்.
 • தமிழீழத்தின் வரைபடத்தை நாம் போர்த்துக்கல், ஒல்லாந்து இங்கிலாந்து, ஆகியவற்றிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

எமது சரித்திர ரீதியான எமது நாடு தமிழீழம்; இது எமக்குரியது. இந்த நாடு எமக்கு மகத்தானது.

நாம் 10 கோடி மக்கள் ராஜதந்திர ரீதியாக காய்களை நகர்த்துவோம்.

இன்று இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிஜி, மொறிசியஸ், தென்ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் அதிகம் வாழுகின்றோம், இது தவிர உலகின் பல நாடுகளிலும் வாழ்கின்றோம்.

எமது கோரிக்கைக்கு ஒரே ஒரு அமைப்புத்தான். நாம் வாழுகின்ற நாடுகளின் தலைவர்களுக்கு எமது நோக்கத்தைக் கூறி, எமக்கு ஆதரவு வழங்கக் கோருவோம்.

இனி எமது ராஜதந்திர ரீதியான போராட்டத்தை சர்வதேசத்தின், அயலவரின் உதவியுடன் முன்னெடுப்போம். எமது அரசியல ; மனித உரிமை இன அழிப்பு போன்ற பிரச்சினையை ஐ. நாவுக்கு எடுத்துச் செல்ல மற்றைய இனத்தவர்களையும், நாடுகளையும் கோரவேண்டும்.

முதலில் நம்மையே நாம் நம்புவோம்.

நாம் திறமைசாலிகள், உழைப்பாளிகள், சிந்திக்கத் தெரிந்தவர்க்ள். எமக்கிடையே ஒற்றுமை தேவை. சிறிய சிறிய பிரச்சினைகளைப் பெரிதாக்கி விடவேண்டாம். எம் மக்கள் துன்பப்பட்டவர்கள், அவர்களுக்கு உதவுவோம். எமது தமிழ் அன்னையை உரிய இடத்தில் வைத்து அழகு பார்ப்போம். நாம் வெற்றி பெறுவது உறுதி

வாழ்க தமிழீழம்

இலங்கைதீவு இறைவனால் சிங்களவனுக்கே உருவாக்கப்பட்டது என்பது பித்தலாட்டம். நாம் அக்கருத்திற்கு ஒரு முக்கியத்துவம் அழிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.