நீதி,தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது:எஸ்.வியாழேந்திரன்

Report Print Rusath in அரசியல்
219Shares

தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்தமைக்கு எதிராக பொது மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்த போது எங்களை தாக்கிய பொலிசார் எம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் அமைச்சர் உள்ளிட்ட 5 பேரும் ஆஜராகியிருந்தனர். இதன்போது வழக்கு விசாரணையினை எதிர்வரும் பெப்ரவரி 9ம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

இதன் பின்னர் இராஜாங்க அமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த 2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் சிறுவர்கள் உட்பட பல பேர் உயிரிழந்தனர். அந்த குண்டுதாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியைச் சேர்ந்த தற்கொலை குண்டுதாரியான ஆசாத்தின் உடற்பாகத்தை கள்ளியன்காடு இந்து மயானத்தில் பொலிசார் புதைத்தனர்.

இந்து மயானத்தில் எமது சமூகத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்த பயங்கரவாதியை புதைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது மக்களின் பிரதிநிதிகளான நாங்கள் அவ்விடம் சென்று புதைக்கப்பட்ட அந்த உடற்பாகத்தை தோண்டி எடுக்குமாறு மக்களுடன் சேர்ந்து குரல் கொடுத்த வேளை,பொலிசாசர் அதில் கலந்து கொண்ட பெண்களைக் கூட மோசமாக பலமாக தாக்கினார்கள்.

அந்த அடிப்படையில் செல்வி மனோகரன், அனோஜன், சுசிலா, றொஸ்மன் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்டவர்கள் மீதும் என்னையும், சேர்த்து மொத்தமாக 5 பேருக்கு எதிராக பொலிசார் வழக்கு தாக்குதல் செய்தனர்.இருந்தும் மக்கள் போராட்டம் வெற்றி பெற்றது.

அந்த போராட்டத்தின் பிற்பாடு நீதிமன்றம் புதைக்கப்பட்ட உடற்பாகத்தை தோண்டி எடுத்து காத்தான்குடி பிரதேசத்தில் புதைத்தது. ஆனால் அந்த போராட்டத்தில் மக்களுடன் இணைந்து ஈடுபட்டதனால் தொடர்ச்சியாக நீதிமன்றத்திற்கு வழக்கிற்கு வந்து செல்கின்றோம்.

அதேவேளை,பொலிசார் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்கு தொடர்ந்துள்ளனர். எது எவ்வாறாயினும் நீதி தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.