வரி அறவிடுவது நிறுத்தப்பட்டுள்ளது - வரிச் சலுகையால் 400 பில்லியன் வருமானத்தை இழந்த அரசு

Report Print Steephen Steephen in அரசியல்

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட புதிய வரி அறவீட்டு முறையை அறிமுகப்படுத்தும் வரை பொருட்கள் மற்றும் சேவை வரிகளை அறவிடுவதை தேசிய இறைவரி திணைக்களம் நிறுத்தியுள்ளதால், அரசுக்கான வருமானத்தை சேகரிக்கும் நடவடிக்கை நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய தற்போது அமுலில் உள்ள பொருட்கள் மற்றும் சேவை வரிக்கு பதிலாக தனியான விசேட பொருட்கள் மற்றும் சேவை வரியை அறவிட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

மதுபானம், சிகரட், தொலைத் தொடர்பு, பந்தயம் பிடித்தல், சூதாட்டம் மற்றும் மோட்டார் வாகனங்கள் என அறவிடப்படும் பல்வேறு வரிகளை ஒன்றிணைத்து, தனியான வரியை அறவிட வேண்டும் என்ற யோசனை வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டது. தற்போது வரி அறவீடுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 50 வீதத்தை இந்த தனியான வரிமூலம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டின் இறுதியில் அரசாங்கம் அறிமுகப்படுத்திய வரி சலுகை சம்பந்தமான திருத்தம் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு 400 பில்லியன் வரி வருமான இழப்பு ஏற்பட்டதாக தேசிய இறைவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் வருமான வரி அறவிட வேண்டிய வருமானத்தின் தொகையை அதிகரித்தமை உள்ளிட்ட சில திருத்தங்கள் காரணமாக சுமார் 25 ஆயிரம் வருமான வரி ஆவணங்களை திணைக்களம் இழந்துள்ளது.

இந்த நிலையில், புதிய வருமான வரி முறையானது எதிர்வரும் மார்ச் மாதம் முதல் அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.