ஐக்கிய தேசியக் கட்சிளின் சிரேஷ்ட தலைவர்களான ரவி கருணாநாயக்க, நவீன் திஸாநாயக்க, அர்ஜூன ரணதுங்க, லக்ஷ்மன் விஜேமான்ன,மேர்வின் சில்வா உள்ளிட்டோர் தமது ஆதரவாளர்களுடன் நேற்றைய தினம் கதிர்காமத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இந்த பூஜை வழிபாட்டில் அதிகளவிலான ஆதரவாளர்கள் கலந்து கொண்டதால், இது புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிப்பதற்கான ஆரம்பமாக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயின் பூஜை வழிபாடுகளின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க. புதிய அரசியல் கட்சி தொடர்பான கதையை நிராகரித்துள்ளார். இந்த பூஜையானது ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைப்பது மற்றும் நாட்டை தொற்று நோயில் இருந்து காப்பாற்ற செய்த வேண்டுதல் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பூஜை வழிபாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ருவான் விஜேவர்தனவோ அவரது பிரதிநிதியோ கலந்துகொள்ளவில்லை.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ரவி கருணாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இணையாக ஏனைய கட்சிகளின் கீழ் மட்டம் சிதறுண்டுள்ளது. கீழ் மட்டம் இல்லை என்று கூறினால், அது தவறல்ல. கடந்த இரண்டு தசாப்தங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் மட்டம் குறித்து எவரும் கவனம் செலுத்தவில்லை.
ரணில் விக்ரமசிங்க கட்சியின் செயற்குழு குறித்து மாத்திரமே கவனம் செலுத்தினார். சஜித் பிரேமதாச கட்சியின் உறுப்பினராக வந்த நாள் முதல் தலைமைத்துவத்திற்கு குறி வைத்தார். கட்சியின் கீழ் மட்டத்தின் நலன்கள் குறித்து கவனம் செலுத்த அவருக்கு நேரம் இருக்கவில்லை.
இறுதியின் கட்சியின் கீழ் மட்டம் அமைதியான மரணத்தை தழுவியது. இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் தற்போதாவது ஐக்கியமாக வேண்டும். இணைந்து கட்சியின் கீழ் மட்டத்தை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.