நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பான உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உத்தியோகபூர்வமாக கிடைத்த பின்னர், அது சம்பந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்போகாது எனவும் அவர் கூறியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவை, சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று மாலை நீர்கொழும்பு, பள்ளன்சேனவில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
உச்ச நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்ததை அடுத்து வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க, பதிவுகள் உட்பட அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், பள்ளன்சேன தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.