ஹரின் பெர்னாண்டோவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் ஜனாதிபதியும் அரசாங்கமுமே பொறுப்பு - எதிர்க்கட்சித் தலைவர்

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மீது எந்த விதமான மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டாலும், ஐக்கிய மக்கள் சக்தி அதனை தம்மீதான தாக்குதலாக கருதுவார்கள் என அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று நடைபெற்ற பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி வேறு அரசியல் சக்திகளை போன்றது அல்ல, ஐக்கியமாகவும் இணைந்தும், சகோதரத்துவமாக செயற்படும் அரசியல் கட்சி.

ஹரின் பெர்னாண்டோ தனது உரிமையை பயன்படுத்தி, அவரது கருத்தை முன்வைத்தார். மக்களின் பிரதிநிதி என்ற வகையில் அவர் இந்த கருத்தினை முன்வைத்தார். நாட்டின் குடிமகனாக முன்வைத்த கருத்து. அவரது இந்த கருத்துக்கு அச்சுறுத்தல்கள், தடைகள், எதிர்ப்புகள், ஆத்திரமூட்டும் செயல்கள் நடக்குமாயின் அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

மக்கள் பிரதிநிதிகளினது மாத்திரமல்ல மக்களின் கருத்து சுதந்திரத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் போராடும். அந்த உரிமையை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

இந்த சந்தர்ப்பத்தில் ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்புக்காக கட்சி மற்றும் சக்தியாக அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த இணைந்து செயற்படுவோம். ஹரின் பெர்னாண்டோ மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டால், அதனை எம்மீதான தனிப்பட்ட தாக்குதலாகவே கருதுவோம்.

ஹரின் பெர்னாண்டோ முற்போக்கான தற்போதைய தலைமுறையின் தலைவர். எதிர்கால தலைவர். அவருக்கு ஏதோ ஒரு வகையில் சேதம் ஏற்படுமாயின் அதற்கு தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டும். இதனால், ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மனிததுவத்தின் பேரில் நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.