குருந்தூர் மலை அகழ்வராய்ச்சியில் வெளிப்படைத் தன்மை அவசியம்! கூட்டமைப்பு வலியுறுத்து

Report Print Rakesh in அரசியல்
50Shares

குருந்தூர் மலைப்பகுதியில் சிவன் கோவில் அமைந்துள்ள நிலையில் அங்கு மறைமுகமாக தொல்லியல் ஆய்வுகள் நடைபெறுகின்றன. இதனை ஏற்கமுடியாது. ஆய்வுகளில் வெளிப்படைதன்மை அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு இது தொடர்பில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

வன்னி மாவட்டத்தில் அரசின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் இறுக்கப்பட்டுள்ளது. குருந்தூர் மலைப்பகுதியில் சிவன் கோவில் உள்ளது. 1933 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் ‘குருந்தூர் மலை’ எனத்தான் விளிக்கப்பட்டுள்ளது. ஆரம்பம் முதல் தமிழ் பெயர் இருக்கும் நிலையில் தற்போது எதற்கு அவசர அவசரமாக அகழ்வாய்பு நடக்கின்றது?

கடந்த காலங்களில் தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் தமிழர்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. திடீரென விகாரைகள் முளைத்தன. எனவே, குருந்தூர் மலை விவகாரத்திலும் எமது மக்களுக்கு சந்தேகம் இருக்கின்றது. மக்கள் வழிபடுவதற்கு தடை இருக்ககூடாது என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பொங்கல் வைத்து வழிபட சென்ற மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இது விடயத்தில் நீதிமன்ற தீர்ப்பு மீறப்பட்டுள்ளது. அகழ்வாய்வு ஏன் மறைமுகமாகச் செய்யப்படுகின்றது? இதில் வெளிப்படைத் தன்மை அவசியம். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்துவந்து செய்யும் நிலையில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்களையும், மாணவர்களையும் இதில் இணைத்துக்கொள்ளுமாறு நாம் கேட்டிருந்தோம்.

இது சம்பந்தமாக எமது தலைவர் சம்பந்தன் ஐயா, இராஜாங்க அமைச்சர் விதுரவுடன் பேச்சு நடத்தினார். இணைத்துக்கொள்வதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சளவில் மட்டும் அல்லாமல் உறுதிமொழி நடைமுறைக்கு வரவேண்டும்.வெளிப்படைத் தன்மையுடன் ஆராய்ச்சிகள் நடைபெறவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.