மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடாந்தம் மாரி மழை காலத்தில் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படும் கிரான் பாலத்தை நிர்மாணிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஸ முன்னெடுத்திருந்தார் என பிரதமரின் மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களுக்குரிய இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை கிரான் பாலத்திற்கு நேரடி விஜயம் செய்து வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்ட பாலத்தின் நிலமைகளைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதியும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் காலத்தில் கிரான் பாலம் அமைப்பதற்குரிய அளவுத்திட்டங்கள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்கு 1200 மில்லியன் தேவை எனவும் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
பின்னர் அரசாங்கம் மாறிய பின்பு இந்தப் பாலம் நிர்மாணிக்கப்படவில்லை. ஆகவே இப்பகுதி மக்களுக்கு இப்பாலம் ஒரு அத்தியாவசியத் தேவையாகும். ஏனெனில் இப்பாலத்தை அமைத்தால் தான் எதிர்காலத்தில் சித்தாண்டிவந்தாறுமூலை போன்ற பல இடங்களை வெள்ளப் பெருக்கிலிருந்து பாதுகாக்க முடியும்.
இதனைக் கருத்திற்கொண்டு இதில் பாலம் நிர்மாணிப்பதற்குரிய ஆயத்தங்களை நாங்கள் தற்போது மேற்கொண்டிருக்கின்றோம். அதற்குரிய அமைச்சரிடம் உரிய விபரக்கோவைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் பிரதம மந்திரியுடன் உரையாடியுள்ளோம்,மிக விரைவில் ஜனாதிபதியுடனும் உரையாடவுள்ளோம்.இதேவேளை, சில சக்திகளை இப்பாலத்தை, சந்திவெளி, மற்றும், முறக்ககொட்டஞ்சேனை,போன்ற இடங்களில் கட்ட வேண்டும் என கிராமங்களுக்குள்ளான வேறுபாடுகளிலும்,பிரிவினைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
சந்திவெளியில் பாலம் கட்டுவதற்கு கிரானூர் மக்கள் ஒருபோதும் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. அங்கு பாலம் கட்டுவது என்றால் அதையும் நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் கிரானில் பாலம் கட்டுவதை நிறுத்தி சந்திவெளியில் பாலம் கட்டுவதைத்தான் மக்கள் விரும்பவில்லை.
ஆனால் இரண்டு இடங்களிலும் பாலம் அமையப் பெறலாம், அப்போது தான் எமது மாவட்டம் வளர்ச்சியடையும். இதில் அனைத்து மக்களும் மிக தெழிவாக இருக்குமாறு நாம் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.