மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி குழு ஒன்றை நியமித்துள்ளார்

Report Print Kamel Kamel in அரசியல்
123Shares

மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.

இந்த விசேட குழு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலத்திலான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்திய ஆணைக்குழுக்களின் வெளிக்கொணர்வுகள் தொடர்பில் இந்த புதிய குழு ஆராய உள்ளது.

உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தரா பெர்னாண்டோ மற்றும் முன்னாள் மாவட்டச் செயலாளர் நிஹால் அபேசிறி ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கும் ஏனைய இரண்டு உறுப்பினர்களாவர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் குறித்து இம்முறை பேசப்பட உள்ள நிலையில், இந்த குழுவினை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ளன.

பேண் தகு சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் உருவாக்குவதற்கும், பொறுப்பு கூரலை அடைவதற்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அதன் முகவர் நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அரசாங்கம் தயார் என ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனநாயக மற்றும் சட்ட ரீதியான அணுகுமுறைகளில் தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.